தமிழ்நாட்டில் அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெறும் என்று அன்று அறிவித்த அமித்ஷா, இப்பொழுது என்ன கூறுகிறார்? ‘‘எங்கள் வழியிலேயே தேர்தலை நடத்துவோம்’’ என்று சொல்லியுள்ளார்! தேர்தல் முடிவுக்குப் பிறகு, ஆட்சியை நாங்களே தீர்மானிப்போம் என்கிறார் அமித்ஷா! ஆர்.எஸ்.எஸ். ஒட்டகம் உள்ளே நுழையும்? பா.ஜ.க.வுக்கு அடமானம் வைக்கப்பட்டுவிட்டது அ.தி.மு.க. – கொள்கை உள்ள அ.தி.மு.க. தோழர்களே, உங்கள் நிலை என்ன?

viduthalai

தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ.) ஆட்சி தமிழ்நாட்டில் ஏற்படும் என்று சென்னைக்கு வந்து சொன்னார் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா. இப்பொழுது என்ன சொல்லியிருக்கிறார்? தமிழ்நாட்டுத் தேர்தலை பி.ஜே.பி. வழிநடத்தும்; ஆட்சியைத் தீர்மானிக்கும் என்று கூறியுள்ளார். கொள்கை உள்ள அ.தி.மு.க. தோழர்களே, உங்கள் நிலை என்ன? என்று  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  அவரது அறிக்கை வருமாறு:

தலையாட்டி பொம்மை மாதிரி…

தமிழ்நாட்டில் வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில், அவசர அவசரமாக – எந்தவித முன்னறிவிப்புமின்றி திடீர் என்று பி.ஜே.பி.யின் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டுக்கு வந்து, அண்ணா தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடியை அருகில் வைத்துக்கொண்டே, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி என்று அறிவித்தார். பக்கத்தில் அமர்ந்திருந்த அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் தலையாட்டி பொம்மை மாதிரி அமர்ந்து ஆமோதித்தார்!

அதற்குப் பிறகு பலமுறை அமித்ஷா உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள், ‘‘பா.ஜ.க. கூட்டணி அரசே தமிழ்நாட்டில் அமையும்’’ என்று பகிரங்கமாய் பேசி வருகிறார்கள்.

முறைப்படி, அ.தி.மு.க. – பா.ஜ.க.வுடன் கூட்டணி சேரு கிறது என்பதை அறிவித்திருக்கவேண்டியவர், தமிழ்நாட்டில் தேர்தல் முடியும் வரை கூட்டணித் தலைவரான எடப்பாடி பழனிசாமி அவர்கள்தானே!

அந்தப் பணியை – பொறுப்பை, அமித்ஷாவே எடுத்துக்கொண்டது, ‘‘தன் கை மேலே, இவர் கை கீழே’’ (Upper Hand) என எடுத்துள்ளார் என்பதுதானே உலகறிந்த உண்மையாக உள்ளது!

தமிழ்நாட்டில் பி.ஜே.பி. தலைமையிலான கூட்டணிதான் என்கிறார் அமித்ஷா

அதற்குப் பிறகு, இங்கே இந்த உண்மையை முகமூடிமூலம் மறைக்க, அவரது பழைய அமைச்சரவை சகாக்களில் சிலர், ‘‘அதெல்லாம் கூட்டணி அரசு  அமையாது, தனித்த பெரும்பான்மையை நாங்கள் பெற்று, எடப்பாடியார் தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி  அமைப்போம்’’ என்று கூறி வருகின்றனர். இந்நிலையில், நேற்று (11.7.2025) டில்லியில், ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேட்டுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா  அளித்த பேட்டி ஒன்றில், இதனை மறுக்கின்ற வகையிலும், தமிழ்நாட்டில் பி.ஜே.பி. தலைமையிலான கூட்டணி (இதுதான் யதார்த்தத்தின்படி) ஆட்சிதான். அதுவும் எங்கள் தலைமைதான். அதன்படி ஒரு முதலமைச்சர் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் என்று கூறாமல், முன்பு கூறி வந்ததை உறுதிப்படுத்தும் வகையிலும், மிகத் தெளிவாகவே கூறுகிறார்.

AMIT SHAH INTERVIEW | ‘Elections in Bihar, Bengal and TN will go our way; good prospects in Kerala too’ என்ற தலைப்பிட்டு, அப்பேட்டிச் செய்தி வந்துள்ளது.

‘‘ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. வழியிலேயே
தேர்தலை நடத்துவோம்!’’ என்கிறார்

இப்பேட்டியில் அவர் கூற்றில் மற்றொரு அதிர்ச்சிக்குரிய தகவலும் வெளிவந்துள்ளது!

என்ன தெரியுமா?

தமிழ்நாட்டு அ.தி.மு.க.வுடன் கூட்டுச் சேர்ந்துள்ள நாங்கள் (ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி.) எங்கள் வழியிலேயே தேர்தலை நடத்துவோம் என்று கூறுகிறார்!

இதன்படி, தேர்தலில் எந்தக் கட்சியைச் சேர்ப்பது, சேர்க்காதது என்பதில் தொடங்கி, (வேட்பாளர்கள் தேர்வுகூட இதில் அடங்கக் கூடுமோ!) ‘Election in our way’ என்பதன்மூலம் அமைந்துவிட்டது!

கூட்டணி தேர்தலை பி.ஜே.பி. ஆர்.எஸ்.எஸ். இயக்குகின்ற படியே இவர்கள் (அ.தி.மு.க.) செயல்பட்டாகவேண்டும் என்பதுதானே பொருள்!

பூனைக்குட்டி முழுக்க முழுக்க சாக்கு மூட்டையிலிருந்து வெளியே வந்துவிட்டது, பார்த்தீர்களா?

வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சிதான்; பா.ஜ.க.வும் இடம்பெறும் என்ற கட்டத்தை மேலும் ஒருபடி தாண்டி, அதனை நாங்களே கண்காணித்து நடத்துவோம் என்பதைப் பிரகடனம் செய்வதுபோல், ஆணியடித்துக் கூறிவிட்டார் அமித்ஷா?

இதற்கு ‘அடமானம் வைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க.’ தலைமை என்ன சொல்லப் போகிறது?

Q: If you win, will you join the government?

Yes.

இதன் தமிழாக்கம்:

கேள்வி: நீங்கள் வெற்றி பெற்றால், நீங்கள் அமைச்சர வையில் சேர்வீர்களா?

பதில்: ஆம்!

‘‘இது ஒரு பதிலில் அடங்கியுள்ள முகவுரை. மேலும் ஒரு மறுக்க இயலாத வெளிப்பாடு அல்லவா!

இதன்படி பார்த்தால், பா.ஜ.க.வும் அமைச்சரவையில் இடம்பெறும் என்று பொருள். பா.ஜ.க.வுக்கு உத்தரவுப் போடுவது ஆர்.எஸ்.எஸ்.தானே! அதன்மூலம், ஆர்.எஸ்.எஸ்., தமிழ் மண்ணை ஆள  ‘எடப்பாடிகள்’ வழிவகுப்பதல்லவா?

முழு சரணாகதிதானா?

அந்தோ, அண்ணா பெயர் உள்ள கட்சிக்கு இப்படி ஒரு விபத்தா?

வேதனை! வெட்கம்!!

தமிழ்நாட்டை காவி மயமாக்க வேண்டும் என்று துடிக்கிறார்கள்!

உள்ளூர் பா.ஜ.க. தலைவர்கள் முதல் உள்துறை அமைச்சர் அமித்ஷா வரை, தமிழ்நாட்டை எப்பாடு பட்டேனும் ‘‘காவி மயமாக்கி’’, தி.மு.க. ஆட்சிக்கெதிராக அனைத்து முறைகளையும் – பாக்கி வைக்காமல் கையாள முடிவெடுத்துள்ளனர்.

சர்வமும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். இயக்கும்படியேதான் (காரணம், வெளிப்படை என்ற நிலை பளிச்சென்று வெளியே தெரிகிறது).

‘‘மாப்பிள்ளை நான்தான்; சட்டை மட்டும்தான் அவரு டையது’’ என்ற சினிமா காமெடி சீன்தான் நினைவிற்கு வருகிறது!

கொள்கை உள்ள அ.தி.மு.க. தொண்டர்கள் உள்பட அனைவரது கேள்விக்கு –

பதில்! பதில்!! பதில்!!! என்ன?

‘‘தனி ஆட்சியா? கூட்டணி ஆட்சியா?’’ என்பதில் இப்போதே குழப்பம் என்றால், இது எதில் போய் முடியும்? வாக்காளர்களே, சிந்தியுங்கள்!

 

 

சென்னை     தலைவர்,

12.7.2025    திராவிடர் கழகம்

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *