புவி வெப்பமயமாதல் மேலோங்கும் நிலையில் மிகவும் மோசமான சூழலுக்கு உலகம் சென்று கொண்டிருக்கிறது. மனிதர்களின் சுயநலம் மற்றும் ஆடம்பரவாழ்க்கை காரணமாக புவி தன்னுடைய இயல்பான வெப்ப நிலையைத் தாண்டி, ஆபத்தான வெப்பநிலையையும் கடந்துள்ளது.
கடந்த 15 ஆண்டுகளாக உலகம் எங்கும் ஏற்படும் பெருவெள்ளம், வறட்சி உள்ளிட்டவைகள் புவி வெப்பமயமாதல் குறியீடு ஆபத்தான கட்டத்தையும் கடந்து கொண்டிருப்பதை சான்றாகக் காட்டுகின்றன.
இந்த நிலையில் உலகம் எங்கும் புவி வெப்ப மயமாதலை கட்டுப்படுத்த பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
புவியின் சூழலை மரங்கள் காப்பாற்றுகின்றன
குறிப்பாக சூரிய ஒளி மற்றும் காற்றிலிருந்து மின்சாரம் போன்றவை மாற்றாக இருந்தாலும் புவி வெப்பமயமாதலுக்கு காரணமாக இருக்கும் கரிம (கார்பன்) காற்றை கட்டுப்படுத்தும் ஆற்றல் மரங்களுக்கு உண்டு, அதே நேரத்தில் அது உயிர்மக்காற்றான ஆக்ஸிஜனையும் வெளியிடுவதால் புவியின் சூழல் பாதுகாக்கப்படுகிறது.
நகரமயமாதல் காரணமாக பெருமரங்கள் தொடர்ச்சியாக அழிக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் மக்கள் பெருக்கத்தால் வனங்கள் அழிக்கப்படுவதால் சூழல் சீர்கேடு மேலும் அதிகரிக்கிறது,.
செயற்கை மரங்கள்!
இதற்குத் தீர்வாக மரங்களை நடுவது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இருப்பினும் மரங்கள் வளர்வதற்கு நீண்ட காலம் ஆகிறது. இதனால் கொலம்பியா பல்கலைக்கழக ஆய்வு மாணவர்கள் புதிய செயற்கை மரங்களை கண்டுபிடித்துள்ளனர்.
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் ஒரு புதுமையான தீர்வாக, அதிக அளவு கரிமக்காற்றை உள்ளிழுக்கும் செயற்கை மரங்களை உருவாக்கியுள்ளனர். இந்த செயற்கை மரங்கள், உண்மையான மரங்களை விட ஆயிரக்கணக்கான மடங்கு அதிக திறனுடன் வளிமண்டலத்தில் இருந்து கார்பன் டை ஆக்சைடை (CO2) அகற்றும் திறன் கொண்டவை.
செயற்கை மரத்தின் செயல்பாடு
இந்த செயற்கை மரங்கள், ஒளிச்சேர்க்கையை நம்பி CO2 அய் உறிஞ்சி ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் உண்மையான மரங்களைப் போலல்லாமல், அதற்கு இலைகளைப் போல தோற்றமளிக்கும் செயற்கை வெளிர் பழுப்பு நிற பிளாஸ்டிக் துண்டுகளைப் பயன்படுத்துகின்றன. இந்த “இலைகள்” சோடியம் கார்பனேட் பூசப்பட்ட ஒரு சிறப்பு பிசின் கொண்டவை. சோடியம் கார்பனேட், காற்றில் உள்ள CO2 உடன் வினைபுரிந்து சோடியம் பைகார்பனேட்டை (பேக்கிங் சோடா) உருவாக்குகிறது. இதன் மூலம் கார்பன் டை ஆக்சைடு பிசின் உள்ளே சிறைபிடிக்கப்படுகிறது.
நீராவியால் இந்த இலைகள் கழுவப்படும்போது, பிசின் உள்ளே சிறைபிடிக்கப்பட்ட கார்பன் டை ஆக்சைடு வெளியாகி, பின்னர் திரவ வடிவமாக மாற்றப்பட்டு சேமிக்கப்படலாம். இந்த செயல்முறைக்கு குறைந்த ஆற்றலே தேவைப்படுகிறது.
முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள்:
கொலம்பியா பல்கலைக்கழகத்தின் புவி இயற்பியல் துறை பேராசிரியர் கிளாஸ் லாக்னர் தலைமையிலான குழு, இந்த செயற்கை மரங்கள் உண்மையான மரங்களை விட 1,000 மடங்கு அதிக திறனுடன் CO2 அய் உறிஞ்சும் என்று மதிப்பிடுகிறது.
கார்பன் டை ஆக்சைடு (CO2) காற்றில் விரைவாக கலப்பதால், இந்த இயந்திரங்களை காற்று மாசுபாட்டின் மூலங்களுக்கு அருகிலேயே நடப்பட வேண்டிய அவசியம் இல்லை. அவை உலகின் எந்த இடத்திலும் வெற்றிகரமாக CO2 அய் வளிமண்டலத்திலிருந்து பிரித்தெடுக்க முடியும். இது கார், விமானங்கள் போன்ற பரவலான மூலங்களிலிருந்து வெளியாகும் CO2 யும் கட்டுப்படுத்தவும் ஒரு சிறந்த தீர்வை வழங்குகிறது.
கட்டுப்படுத்தப்பட்ட கார்பன் வெளியீடு
சேகரிக்கப்பட்ட CO2 அய் எளிதாகப் பிரித் தெடுக்கலாம் மற்றும் நிலத்தடியில் புதைப்பது போன்ற பல்வேறு வழிகளில் சேமிக்கலாம், அல்லது பிற தொழில்களில் பயன்படுத்தலாம்.
ஒரு செயற்கை மரம் ஒரு நாளைக்கு சுமார் 900 கிலோ (ஒரு டன்) கார்பனை காற்றில் இருந்து சேகரிக்க முடியும் என்று லாக்னர் மதிப்பிடுகிறார். இது 36 மோட்டார் வாகனங்கள் ஒரு நாளில் வெளியிடும் பசுமை இல்ல வாயுக்களுக்கு சமம். இத்தகைய செயற்கை மரங்கள், மனிதர்கள் ஒவ்வொரு ஆண்டும் வளிமண்டலத்தில் சேர்க்கும் CO2 இல் சுமார் 12 சதவீதத்தை உறிஞ்சும். ஆரம்ப கட்டத்தில் ஒரு டன் CO2 அய் அகற்றும் செலவு $200 ஆக இருந்தாலும், திட்டத்தின் அளவு அதிகரிக்கும் போது இது ஒரு டன்னுக்கு $.30 ஆக குறையும் என்று அவர் எதிர்பார்க்கிறார்.
இந்த செயற்கை மரங்கள் சுமார் 15 ஆண்டுகள் ஆயுள் கொண்டவை என்று கணிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத் திட்டங்கள்
லாக்னர் மற்றும் அவரது குழுவினர் இந்த தொழில் நுட்பத்தை வணிகமயமாக்க(!) Global Research Technologies (GRT) என்ற நிறுவனத்துடன் இணைந்துள்ளனர். அடுத்த சில ஆண்டுகளில் ஒரு நாளைக்கு ஒரு டன் CO2 அய்ப் பிடிக்கும் திறன் கொண்ட அலகுகளை உருவாக்குவதற்கு அவர்கள் இலக்கு வைத்துள்ளனர்.
இந்த செயற்கை மர தொழில்நுட்பம், காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு நம்பிக்கைக்குரிய தீர்வாகக் கருதப்படுகிறது. இது வளிமண்டலத்தில் இருந்து அதிக அளவு கார்பனை அகற்றி, புவி வெப்பமயமாதலைக் குறைக்க உதவும்.