நிசார் செயற்கைக்கோள் 30ஆம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது : இஸ்ரோ அறிவிப்பு!

viduthalai
2 Min Read

நியூஜெர்ஸி, ஜூலை 11 அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இணைந்து பூமியின் மேற்பரப்பு மாற்றங்களை கண்காணிப்பதற்காக ‘நாசா- இஸ்ரோ செயற்கை துளை ரேடார்’ (நிசார்) என்ற செயற்கைக்கோளை தயாரித்துள்ளனர். இது அதிநவீன பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளாகும்.

இதனை கடந்த 2023-ஆம் ஆண்டு தொடக்கத்தில் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டது. ஆனால் அப்போது நிசார் செயற்கைக்கோளில் உள்ள பூமி மற்றும் ரேடார் ஆண்டெனா பிரதிபலிப்பானைப் பயன்படுத்துவதற்கு சாதகமான நிலை இல்லாத ‘‘மறைப்பு பருவம்” காரணமாக ஏவுதலில் தாமதம் ஏற்பட்டது.

சில தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக நடப்பாண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது. இதன்படி பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகு நிசார் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும் தேதி தள்ளிப்போனது. இந்த நிலையில் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-2 ராக்கெட்டில் பொருத்தப்பட்டு வருகிற 16-ஆம் தேதி விண்ணில் ஏவ விஞ்ஞானிகள் திட்டமிட்டு இருந்தனர்.

சில தொழில்நுட்ப சிக்கல் காரணமாக இந்த செயற்கைக்கோள் ஏவுதல் மீண்டும் தள்ளிவைக்கப்பட்டு வருகிற 30-ஆம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்த செயற்கைக்கோள் பூமியில் இருந்து 747 கிலோ மீட்டர் சூரிய ஒத்திசைவான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. 2 ஆயிரத்து 800 கிலோ எடை கொண்ட நிசார் செயற்கைக்கோள் 3 ஆண்டுகள் ஆயுட்காலத்தை கொண்டுள்ளது. அத்துடன், 6 ஆயிரத்து 500 வாட்ஸ் சக்தி திறன் உள்ளது. சுமார் ரூ.1,805 கோடியில் தயாரிக்கப்பட்ட இந்த செயற்கைக்கோளில், நாசா ரூ.1,016 கோடியும், இஸ்ரோ ரூ.788 கோடியும் செலவிட்டுள்ளது.

இந்த செயற்கைக்கோள் எல்-பேண்ட் (24-செ.மீ அலை நீளம்) மற்றும் எஸ்-பேண்ட் (12-செ.மீ அலை நீளம்) என்ற இரட்டை அதிர்வெண்களைப் பயன்படுத்தும் முதல் ரேடார் இமேஜிங் செயற்கைக்கோளாகும். இது பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் மாற்றங்களை துல்லியமாக கண்காணிக்க உதவுகிறது.

குறிப்பாக பனிப்பாறைகள், காடுகள் மற்றும் விவசாய நிலங்கள் போன்றவற்றை ஆய்வு செய்யும். அத்துடன் நிலநடுக்கம், நிலச்சரிவு, எரிமலை வெடிப்பு போன்ற பேரிடர்களை கண்காணிக்கவும், அவற்றின் தாக்கத்தைக் குறைக்கவும், பூமியில் இயற்கை செயல்முறைகளை கண்காணிக்கவும் இந்த செயற்கைக்கோள் உதவும்.

இதன் இடதுபுறம் நோக்கிய கருவிகள் அண்டார்டிக் பகுதியிலுள்ள ‘கிரையோஸ்பியர்’ என்று அழைக்கப்படும் பனிப்பாறைகள், பனிமலைகள், பனிமூடிய பகுதிகள், உறைந்த நீர் மற்றும் பனிப்புயல்கள் ஆகியவற்றை ஆய்வு செய்யும். மேம்பட்ட ரேடார் இமேஜிங்கைப் பயன்படுத்தி பூமியின் நிலம், பனி நிறைகளின் உயரத்தை ஒரு மாதத்திற்கு 6 முறை 5 முதல் 10 மீட்டர் தெளிவுத்திறனில் வரைபடமாக்கும் திறன் கொண்டது என்று இஸ்ரோ-நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *