திருவெறும்பூர், ஜூலை 11– பெரியார் பேசுகிறார் 9 ஆவது நிகழ்வு, 29.06.2025, ஞாயிறு மாலை 6 மணிக்குத் திருவெறும்பூர் பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது. ம.பி.அனுராதா தலைமை வகித்தார்.
வாங்க!
ஷாப்பிங் போகலாம்!
ச.கணேசன் முன்னிலை ஏற்றார். பு.வி.கியூபா வரவேற்புரை ஆற்றினார். “வாங்க! ஷாப்பிங் போகலாம்!” எனும் தலைப்பில் தனியார் துறை நிறுவன மேலாளர் இரா.நவீன் பேசினார்.
அவர் பேசும்போது, நுகர்வு கலாச்சாரம் அதாவது கடைகளுக்குச் சென்று பொருள்கள் வாங்குவதே ஒரு பொழுதுபோக்காக மாறிவிட்டது எனும் கருப் பொருளில் பேசினார். நாமாக தேவையற்றதை வாங்குவது ஒருபுறம், நம்மீது தேவையின்றி திணிப்பது மறுபுறம் என்பதையும் விளக்கிப் பேசினார்.
வங்கியில் கடன் வாங்கச் செல் லும் போது வேறு ஏதாவது (நமக்குத் தேவையற்ற) ஒன்றை நம்மிடம் நிர்பந்திப்பது வாடிக்கையாக மாறி வருகிறது எனக் குறிப்பிட்டார். ஒரு காலத்தில் மளிகைக் கடைக்குச் செல்லும் போது, வாங்க வேண்டிய பொருட்களை எழுதி வைத்துப் போவோம். ஆனால் இப்போது சூப்பர் மார்க்கெட் சென்று கண்ணில் பார்த்தவற்றை எல்லாம் அள்ளி வருகிறோம். அதில் சில பொருட்கள் கடைசி வரை நம் பயன்பாட்டிலே இல்லாமல் போகும்.
அதேபோல நண்பர்கள், உறவி னர்கள் வீட்டில் ஒரு பொருள் வாங்கிவிட்டால் அல்லது அதைப் பார்த்துவிட்டால் நாமும் வாங்க நினைப்பதும் அதிகமாகிவிட்டது. குறிப்பிட்ட பொருட்கள் வீட்டில் இருந்தால் தான் மதிப்பு, கவுரவம் என்கிற எண்ணமும் அதிகமாகி வருகிறது.
ஆடம்பரப்பள்ளிகளில்
அதேபோல பெரும் செலவு செய்து, ஆடம்பரப் பள்ளிகளில் படிக்க வைத்தால் தான் பிள்ளை களின் அறிவு வளரும் என்கிற மூடநம்பிக்கையும் சமூகத்தில் நிலவி வருகிறது. இரு சக்கர வாகனம் மற்றும் கார் போன்ற வாகனங்களைக் கடனில் வாங்கிவிட்டு, பெட்ரோல் போட பணம் இல்லாமல் ஓரமாக நிறுத்தி வைப்பதும் அதிகரித்து வருகிறது.
அதேபோல அதிகமாக விளம்பரம் செய்யப்படும் பொருட்கள் தரமானவை என்கிற முடிவிற்கும் மக்கள் வருகிறார்கள்.
விளம்பரங்களில் அடிக்கடி வரும் உணவுப் பொருட்களில் மயங்கி, அதன் கெடுதல்கள் குறித்துத் தெரியாமல், குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கிறார்கள்.
மிக முக்கியமாக எந்த ஒரு செயலிலும் அதிகமாகச் செலவு செய்தால், அதுதான் நம் கவுரவம், அதுதான் நம் பெருமை, அதுதான் நமக்குப் புகழ் சேர்க்கும் என நம்புவதும் ஆபத்தாக இருக்கிறது”, என்கிற பல்வேறு செய்திகளைக் குறிப்பிட்டு, சிக்கனமான நடவடிக்கையும், சேமிப்பான வாழ்வுமே நம்மை மென்மேலும் வளர்த்தெடுக்கும்”, என இரா.நவீன் பேசினார். இறுதியில் போ.ஜெகதீஸ்வரன் நன்றி கூறினார். ஆ.இராஜாராமன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
பெரியார் பேசுகிறார்
திருவெறும்பூர் பெரியார் பேசுகிறார் நிகழ்ச்சியில் கழகத் தோழர்களை விட பொது மக்கள் அதிகம் பங்கேற்கும் வகையில், அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்படுகின்றன. மிகக் குறிப்பாக மாலை 6 மணிக்குத் தொடங்கும் நிகழ்ச்சி, மிகச் சரியாக 7.30 மணிக்கு நிறைவு பெறுகின்றன. இதனால் பெண்கள், குழந்தைகள் கூடுதலாக வருகின்றனர்.