கொலாலம்பூர், ஜூலை 11– இந்தியாவை சேர்ந்த சாமியார் ஒருவர் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளருமான லிஷால்லினி கனரன் என்பவர் புகார் தெரிவித்துள்ளார். ஆசிர்வதிப் பதாக கூறி என்னிடம் அநாகரிமாக நடந்து கொண்டதாக அவர் புகார் கூறியுள்ளார்.
மலேசிய நடிகை
மலேசியாவில் வசித்துவரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரும், நடிகையுமான லிஷால்லினி கனரன், இவர் இந்தியாவை சேர்ந்த சாமியார் ஒருவர் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் கூறி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தனது இன்ஸ்டாவில் லிஷால்லினி பதிவிட்டுள்ளதாவது: – மலேசியாவில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயிலுக்கு கடந்த மாதம் 21 ஆம் தேதி நான் சென்றேன். எனது தாயார் இந்தியாவில் இருப்பதால் நான் மட்டும் சென்றேன். அந்த கோயிலில் உள்ள ஒரு சாமியார் எனக்கு வழக்கமாக மத சடங்குகள் பற்றி வழிகாட்டுவார். கோயிலில் உள்ள வழக்கங்கள் பற்றி எனக்கு அதிகம் தெரியாது என்பதால், அவரது உதவி எனக்கு தேவைப்பட்டதாக இருந்தது. ஆனால் சம்பவத்தன்று, நான் சாமி கும்பிட்டு கொண்டு இருந்தேன். அப்போது என்னிடம் வந்த சாமியார், இந்தியாவில் இருந்து புனித நீர் கொண்டு வந்து இருப்பதாகவும் ஒரு கயிறு எனக்காக கொண்டு வந்து இருப்பதாகவும் ஆசிர்வதிப்பதாகவும் கூறினார். என்னுடைய பிரார்த்தனை நேரம் முடிந்த பிறகு என்னை வந்து சந்திக்குமாறு கூறினார். இதன்படி, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தேன். அவர் பிற பக்தர்களுக்கு தொடர்ந்து ஆசிர்வாதம் வழங்கி கொண்டு இருந்தார்.
பாலியல் சீண்டல்கள்
என்னை அவரது தனி அறைக்கு வருமாறு அழைத்தார். அந்த அறையில் வைத்து என்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். முதலில் என் மீது நறுமணம் வீசும் தண்ணீரை தெளித்தார். பின்னர் என்னை கண்ட இடத்தில் தொட்டார். என்னை ஆடைகளை கழற்றுமாறு கூறினார். நான் மறுப்பு தெரிவிக்கவே, இறுக்கமான உடைகளை அணிந்து இருப்பதாக என்னை திட்டினார். பின்னர் எனது பின்னால் நின்று அநாகரிமான முறையில் என்னை தொட்டார். தான் கடவுளுக்கு சேவை செய்வதால் இது பெரும் ஆசிர்வாதம் என்றார். நடப்பது அத்தனையும் தவறு என எனது மூளைக்கு தெரிந்தது. ஆனாலும் என்னால் நகர முடியவில்லை. நான் அப்படியே உறைந்து நின்றேன். ஏன் அப்படி என்பதை தற்போதும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை” எனப் பதிவிட்டுள்ளார்.
நடிகை புகார் கூறிய சாமியார் இந்தியாவை சேர்ந்தவர் என்றும் வழக்கமான சாமியார் இல்லாததால், அவர் தற்காலிமாக கோயில் பணிகளில் ஈடுபட்டதாகவும் மலேசியாவில் உள்ள சேபாங் மாவட்ட காவல்துறை ஏசிபி நூர்ஹிசாம் பஹமன் கூறினார்.
இதற்கிடையே, தனக்கு நடந்த விஷயத்தை பொதுவெளியில் பகிர வேண்டாம் என்று விசாரணை அதிகாரி கூறினார் எனவும், மீறி தெரிவித்தால் உங்கள் மீது குறை சொல்வார்கள் எனத் தெரிவித்ததாகவும், எனினும், அவரது அறிவுரையை தான் ஏற்கவில்லை எனவும் நடிகை கூறியுள்ளார்.
கோயிலில் தனக்கு நடந்த கொடுமை குறித்து கடந்த 4 ஆம் தேதி நடிகை புகாரளித்துள்ளார். ஆனால் கோயிலுக்கு சென்ற போது அந்த சாமியார் அதற்குள் தப்பி ஓடிவிட்டதாகவும், இந்த விவகாரம் குறித்து அவரிடம் யாரோ முன்பே கூறியிருக்கிறார்கள். தற்போது வரை இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறியுள்ளார். மலேசிய காவல்துறையினர் இது குறித்து கூறுகையில், தப்பி ஓடிய சாமியாரை தேடி வருவதாகவும் விசாரணை நடப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
