டோக்கியோ, ஜூலை 10- மின்னணு உலகின் தாயகம் என்று கருத்தப்படும் ஜப்பானில் தற்போது புதிய மற்றும் தனித்துவமான கலை வடிவம் பிரபலமாகி வருகிறது. மக்களின் மூளை அலைகளைப் பயன்படுத்தி அழகிய கலைப்படைப்புகள்உருவாக்கப்படுகின்றன.
ஒருவர் மேற்கொள்ளும் செயல்பாட்டைப் பொறுத்து அவர்களின் மூளையின் அலைகள் மாறுபடும். இந்த மூளை அலைகள், ஒரு நபரின் உள்ளே மறைந்திருக்கும் எண்ணங்களையும் உணர்வுகளையும் வெளிக்கொணரும் பிரத்யேக கலைப்படைப்புகளாக மாற்றப்படுகின்றன.
இந்தத் திட்டத்தில் பங்கேற்பவர் களுக்கு ஒரு சிறப்புச் சலுகையும் உண்டு. 100 வினாடிகளுக்கு மூளை அலைகளைப் பதிவு செய்யும் ஒவ்வொருவருக்கும் 1000 யென் (இந்திய ரூ மதிப்பில் சுமார் 700) வழங்கப்படுகிறது.
இவ்வாறு உருவாக்கப்பட்ட கலை வடிவங்கள் பின்னர் கடைகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. அவற்றின் அழகு மற்றும் தோற்றத்தின் அடிப்படையில் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
இந்த புதிய முயற்சி பல இணையவாசிகளை ஈர்த்துள்ளது என சவுத் சைனா மார்னிங் போஸ்ட் (South China Morning Post) தெரிவித்துள்ளது. ஜப்பானியர்கள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இணைந்து இந்தப் புதிய கலைப்படைப்புகளைப் பெற மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த கலைப்படைப்பில் பங்கேற்கும் நபர்கள் தங்களின் உணர்வுகளை அமைதிப்படுத்தி நல்ல எண்ணெங்களை உள்ளத்தில் உருவாக்கும் போது நேர்த்தியான கலைப்படைப்புகள் உருவாகிறது என்றும் குழப்பமான மனநிலையில் இருக்கும் போது ரசிக்கும் தன்மையற்ற கலைப்படைப்பு உருவாக்கிறது என்றும் கலைப் படைப்பை உருவாக்கும் தன்னார்வலர்கள் கூறியுள்ளனர்.