ஷிவமொக்கா, ஜூலை 10 கருநாடகாவில், ‘பேயை’ விரட்டுவதாகக் கூறி, கண்மூடித்தனமாக தாக்கியதில் பெண் உயிரிழந்தார். இதுதொடர்பாக பெண் சாமியாரிணி, அவரது கணவர், இறந்தவரின் மகன் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
கருநாடக மாநிலம், ஷிவமொக்கா மாவட்டம், ஜம்பரகட்டா கிராமத்தில் வசித்தவர் கீதா (வயது 55). சில நாள்களாக உடல்நிலைப் பாதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை அளித்தும் குணமாகவில்லை. இதையடுத்து, ஊரில் இருந்த பெண் மந்திரவாதியிடம், அவரை அழைத்துச் சென்றனர். அப்பெண், ‘கீதாவுக்குப் ‘பேய்’ பிடித்துள்ளது’ எனக் கூறி, கம்பால் கண்மூடித்தன மாக தாக்கியதில், கீதா மயக்கம் அடைந்தார். அவரை மருத்துவமனையில் சேர்த்தனர், சிகிச்சை பலனின்றி 8.7.2025 அன்று உயிரிழந்தார்.
இதுகுறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மிதுன் குமார் கூறியதாவது:
கம்பால் சரமாரியாக
கீதாவுக்கு இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இதில் ஒரு மகன் சஞ்சய், தாயுடன் வசித்து வந்தார். கீதாவுக்குப் ‘பேய்’ பிடித்துள்ளதாக, அவர் நினைத்தார். அதே ஊரில் உள்ள ஆஷா (வயது 45) என்ற பெண் சாமியாரிணியைத் தன் வீட்டுக்கு வரவழைத்தார். ஆஷா, தன் கணவர் சந்தோஷுடன் அங்கு சென்றார். கீதாவைப் பார்த்த ஆஷா, சஞ்சயிடம் ‘உன் தாய்க்குப் ‘பேய்’ பிடித்துள்ளது’ என்று கூறி, நான்கு மணி நேரம் கீதாவை கம்பால் சரமாரியாக அடித்துள்ளார்.
ஒரு கட்டத்தில் கீதாவுக்கு தொண்டை வறண்டு, குடிக்கத் தண்ணீர் கேட்டுள்ளார். அப்போதும் அவர்கள் தண்ணீர் தரவில்லை. பின், மயக்கம் அடைந்து கீதா இறந்துள்ளார். ஆஷா, அவரது கணவர் சந்தோஷ், கீதாவின் மகன் சஞ்சய் ஆகியோரை கைது செய்துள்ளோம். இன்றைய காலகட்டத்திலும் இதுபோன்ற மூடநம்பிக்கையை கடைப்பிடிப்பது வியப்பளிக்கிறது. ‘‘சாமி அல்லது பேய்’’ வந்து விட்டதாகக் கூறி, யாரையும் அடிக்கக் கூடாது.
– இவ்வாறு அவர் கூறினார்.