46ஆம் ஆண்டாக குற்றாலத்தில் ”பெரியாரியல் பயிற்சிப்பட்டறை” புத்துணர்ச்சியுடன் தொடங்கியது!

viduthalai
2 Min Read

தென்காசி, ஜுலை 10 குற்றாலத்தில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப்பட்டறையில் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், “பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பு’’ எனும் தலைப்பில் பாடம் நடத்தினார்.

தென்காசி மாவட்டம்  குற்றாலத்தில் உள்ள வள்ளல் வீகேயென் மாளிகையில் ஜூலை 10,11,12,13 ஆகிய நான்கு நாள்கள் பெரியாரியல் பயிற்சிப்பட்டறையை நடத்த சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது 46 ஆம் ஆண்டு பயிற்சிப்பட்டறை என்பது குறிப்பிடத்தக்கது.  61 இருபால் மாணவர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் தென்காசி மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் த,வீரன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக பொன்முடி, தலைமை செயற்குழு உறுப்பினர் இல.திருப்பதி, கழகக் காப்பாளர் பால்.இராசேந்திரம் ஆகியோர் மாணவர்களை வாழ்த்தி உரையாற்றினர்.

கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் பயிற்சிப் பட்டறையை முறைப்படி தொடங்கி வைத்து உரையாற்றினார். அவர் தனது உரையில், “கடந்த காலம் தெரியாதவர்களுக்கு நிகழ்காலம் புரியாது; நிகழ்காலம் புரியாதவர்களுக்கு எதிர்காலம் இருக்காது” என்று எழுத்தாளர் திருமாவேலன் குறிப்பிட்டதை எடுத்துச் சொல்லி, பயிற்சிப்பட்டறையின் முக்கியத்துவத்தை புரியவைத்தார். அதைத் தொடர்ந்து கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், “பார்ப்பன பண்பாட்டுப் படையெடுப்பு” எனும் தலைப்பில் முதல் வகுப்பாக நடத்தினார். கடந்த 100 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் மக்களின் நிலை எப்படி இருந்தது என்று விளக்க கடவுள் உள்ளிட்ட பல்வேறு மூடநம்பிக்கைகளைப்பற்றிக்  குறிப்பிட்டார்.  அதை பெரியார் கையாண்ட விதத்தையும், அவர் விதைத்த மாற்றங்களையும் மாணவர்களுடன் உரையாடியபடியே கற்றுக்கொடுத்தார். முன்னதாக மாநில ஒருங்கிணைப்பாளரும், பயிற்சிப்பட்டறையின் ஒருங்கிணைப்பாளருமான தஞ்சை
இரா.ஜெயக்குமார் பயிற்சிப்பட்டறையில் மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் பற்றி எடுத்துரைத்தார்.

தொடக்க விழாவில், கழகப் பொருளாளர் வீ.குமரேசன், பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், சமூக ஊடகத்துறையின் மாநில தலைவர் மா.அழகிரிசாமி, கழகக் காப்பாளர் சீ.டேவிட் செல்லதுரை, முனைவர் அதிரடி க.அன்பழகன்,  மாவட்ட துணைச் செயலாளர் அ.சவுந்திரபாண்டியன், மாவட்ட இளைஞரணித் தலைவர் சு.கோபால், பொதுக்குழு உறுப்பினர் வே.முருகன், பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் கே.டி.சி.குருசாமி, மாவட்டச் செயலாளர் கை.சண்முகம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *