அறநிலையத் துறை நிதியிலிருந்து கல்லூரிகள் கட்டப்படுவதா என்று கேட்பது எடப்பாடி பழனிசாமியின் அப்பட்டமான ஆர்.எஸ்.எஸ். மனநிலை! திராவிட இயக்கக் கொள்கைக்கு எதிரான போக்குக்கு மக்கள் பாடம் கற்பிப்பார்கள்!

Viduthalai
2 Min Read

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

 

அறநிலையத் துறை நிதியிலிருந்து கல்லூரிகள் கட்டப்படுவதா? என்று எடப்பாடி பழனிசாமி அவர்கள் கேட்பது அப்பட்டமான ஆர்.எஸ்.எஸ். மனநிலைதான்! திராவிட இயக்கக் கொள்கைக்கு எதிரான போக்குக்கு மக்கள் பாடம் கற்பிப்பார்கள்  என்று  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

நேற்று (08.07.2025) தனது பிரச்சாரத்தின் போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், இந்து சமய அறநிலையத்துறை நிதியிலிருந்து கல்லூரிகள் கட்டப்படுவதை எதிர்த்துப் பேசியுள்ளார்.

அறநிலையத்துறைக்குக் கோயில்களில் கிடைக்கும் நிதி என்பது மக்களின் பணமே! அதை மக்களுக்கே திருப்பி அளிப்பதற்கும், அதிலும், அவர்கள் கல்வி அறிவு பெற வாய்ப்பு வழங்குவதற்கும், காங்கிரஸ் தொடங்கி கடந்த ஆட்சிக் காலங்கள் அனைத்திலும் கல்வி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன. ஏன், அதிமுகவின் மேனாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியே 2017 ஆம் ஆண்டு பழனியாண்டவர் தொழில்நுட்பக் கல்லூரியின் நிர்வாகக் கட்டடத்தைத் திறந்து வைத்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ்.சின் கண்ணாடி என்பது அப்பட்டமாகத் தெரிகிறது

இந்து மதத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள், குறிப்பாகப் பெண்களும் கல்வி பெற வாய்ப்பாக அறநிலையத் துறையால் உருவாக்கப்படும் கல்லூரிகள் எடப்பாடியின் கண்களை உறுத்துகின்றன என்றால், அவர் அணிந்திருப்பது ஆர்.எஸ்.எஸ்.சின் கண்ணாடி என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.

கோயில்களில் நடந்த பார்ப்பனக் கொள்ளைகளைத் தடுக்கவும், கோயில் சொத்துகளைக் காக்கவும், சரியாக நிர்வகிக்கவும் திராவிட இயக்கத்தின் தோற்றுவாயான நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டதே இந்து சமய அறநிலையத் துறை ஆகும். அதற்கு மாறாக, அறநிலையத்துறையை ஒழிக்க வேண்டும் என்பதே அந்நாள் தொட்டு இந்நாள் வரை ஆர்.எஸ்.எஸ்.சின் – பார்ப்பனர்களின் நோக்கம்! எடப்பாடி பழனிசாமி யார் பக்கம் என்பதை இந்த ஒரு நிலைப்பாடு காட்டிவிடும்.

அடமானம் வைக்கப்பட்டுவிட்ட
இன்றைய அ(மித்ஷா)தி.மு.க.

திராவிட இயக்கத்தின் கொள்கைப் பார்வையோ, அறிஞர் அண்ணாவின் கொள்கை குறித்த புரிதலோ, பா.ஜ.க.- ஆர்.எஸ்.எஸ்.சிடம் அடமானம் வைக்கப்பட்டுவிட்ட இன்றைய அ(மித்ஷா).தி.மு.க.வின் பொதுச் செயலாளருக்குக் கொஞ்சமும் இல்லை என்பதைத்தான் அவரது இந்தப் பேச்சு காட்டுகிறது.

கடந்த மாதத்தில் மதுரையில் இந்து முன்னணி நடத்திய முருக பக்தர்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைத் தான் இன்று எடப்பாடி பழனிசாமி ஒப்பித்திருக்கிறார்.

திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் பல்கலைக்கழகம் உள்பட பத்துக்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் நடத்தப்படுவதை அறிவாரா ஆர்.எஸ்.எஸ்.சின் ஊதுகுழல் எடப்பாடி பழனிசாமி?

உரிய பாடத்தை மக்கள் கற்பிப்பார்கள்

தமிழ்நாட்டு மக்கள் சமூகநீதியின் சரித்திரம் தெரிந்தவர்கள்! தெளிந்தவர்கள்! சமூகநீதியில், கல்வி வளர்ச்சியில் கை வைக்க நினைக்கும் எவருக்கும் இந்த மண்ணில் மக்கள் ஆதரவு இருந்ததில்லை. ‘திராவிட மாடல்’ தி.மு.க. அரசுக்கு எதிராகப் பேசுகிறோம் என்ற பெயரில், திராவிட இயக்கக் கொள்கைகளுக்கும், மக்களுக்கும் எதிராகப் பேசிக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி! இதற்குரிய பாடத்தை மக்கள், வரும் சட்டமன்றத் தேர்தலில் கற்பிப்பார்கள் என்பது உறுதி!

கி.வீரமணி

தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
9.7.2025

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *