சென்னை, ஜூலை 9- தி.மு.க. நிர்வாகிகளுடனான ‘உடன்பிறப்பே வா’ கலந்துரையாடல் மூலம் 2026 சட்டமன்ற தேர்தல் களத்தின் நம்பிக்கை எனக்கு பலமடங்கு பெருகி இருக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
‘உடன்பிறப்பே வா’
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு‘உடன்பிறப்பேவா’ என்ற தலைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதிவாரியாக நிர்வாகிகளை அழைத்து சென்னை அண்ணா அறிவால யத்தில் கலந்துரையாடி வருகிறார். அந்த வகையில் அவர் செய்யூர், செஞ்சி, விக்கிரவாண்டி ஆகிய 3 தொகுதிகளை சேர்ந்தநிர்வாகிகளுடன் நேற்று (8.7.2025) தனித்தனியாக கலந்துரையாடினார்.
அப்போது அவர் நிர்வாகிகளிடம் ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கையில் பெண்கள் விரும்பி சேருகிறார்களா? மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு நிர்வாகிகள் அளித்த பதிலை கேட்டு, “மக்கள் அளிக்கும் அமோக வரவேற்பை பயன்படுத்தி அதிக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
மேலும் ஒவ்வொரு நிர்வாகி யிடமும், எவ்வளவு கிளை கழகங்கள் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றும் கேட்டறிந்தார். மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 விடுபட்ட பெண்களுக்கும் கொடுத்துவிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று நிர்வாகிகள் தங்கள் கருத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்தனர்.
பட்டியலை ஒப்பிட்டு கேள்வி
‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கையில் ‘பூத்’ வாரியாக இதுவரையில் எத்தனை உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர் என்ற பட்டியலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையில் வைத்துக் கொண்டு கேள்வி எழுப்பினார். அதற்கு நிர்வாகிகள் அளித்த எண்ணிக்கையும், பட்டியலில் உள்ள எண்ணிக்கையும் சரியாக இருக்கிறதா? என்பதை ஒப்பிட்டு பார்த்தார்.
பழைய உறுப்பினர்கள் எவ்வளவு பேர் சேர்ந்து உள்ளனர். புதிதாக எவ்வளவு பேர் சேர்ந்து உள்ளனர் என்பதையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். எத்தனை வீடுகளுக்கு இதுவரையில் சென்று இருக்கிறீர்கள்? என்ற கேள்வியையும் எழுப்பினார்.
2026 சட்டமன்ற தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதி களில் நம்முடைய கூட்டணி வெற்றி பெற வேண்டும். 7-வது முறையாக நம்முடைய திராவிட மாடல் ஆட்சி அமைய வேண்டும்.
எனவே தேர்தல் பணியிலும், ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை பணியிலும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுவான அறிவுரை வழங்கினார்.
உற்சாகம்
நேற்று நடைபெற்ற ‘உடன் பிறப்பே வா’ நிர்வாகிகளுடன் சந்திப்பு தொடர்பான காட்சிப் பதிவு தொகுப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், ‘தி.மு.க.வின் ரத்த நாளங்களான நிர்வாகிகளுடன் மனம் திறந்த, வெளிப்படையான உரையாடல்களை ‘உடன்பிறப்பே வா’ சாத்தியப்படுத்தி உள்ளது.
மனந்திறந்த உரையாடல்களால் உடன்பிறப்புகளைப் போலவே எனக்கும் புது உற்சாகம் பிறக்கிறது. களம் 2026 (சட்டமன்ற தேர்தல்) குறித்த நம்பிக்கை பன்மடங்கு பெருகுகிறது’ என்று கூறியுள்ளார்.