காமராசர் பிறந்த நாள் மாணவர்களுக்கான சிறப்புப் போட்டிகள் தமிழ்நாடு அரசு அறிவிப்பு

viduthalai
3 Min Read

சென்னை, ஜூலை 9 கல்வி வள்ளல் காமராசர் பிறந்த நாளில் பல்வேறு கலைப் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு விடுத்துள்ள அறிவிப்பு வருமாறு:

தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக் கான பள்ளிகளைத் திறந்து கல்வி வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியவர் கல்விக் கண் திறந்த காமராசர். அவர் பிறந்த ஜூலை 15ஆம் நாளை “கல்வி வளர்ச்சி நாள்” என முத்தமிழறிஞர் கலைஞர் 2006ஆம் ஆண்டு அறிவித்து நடைமுறைப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து ஆண்டுதோறும் பள்ளிகளில் “கல்வி வளர்ச்சி நாள்” கொண்டாடப்பட்டு வரு கிறது. காமராசர் தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு அளித்த முக்கியத்துவத்தை நினைவு கூர்ந்து, மாணவர்களிடம் கல்வி குறித்த விழிப்புணர்வை வளர்க்கவும், அவர்கள் கல்வி கற்க ஊக்கப்படுத் திடவும் கல்வி வளர்ச்சி நாள் ஒரு நாள் வாய்ப்பாக அமைகிறது.

கல்வி என்பது என்ன?

இத்திருநாளில், பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாண வர்களிடையே கல்வி தொடர்பான போட்டிகள், பேச்சுப் போட்டிகள், கட்டுரைப் போட்டிகள் முதலியவை நடத்தப்படுகின்றன. கல்வி என்பது ஒரு மனிதரின் வாழ்க்கையிலும், சமூகத்தின் வளர்ச்சியிலும் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. கல்வி, தனி மனிதனின் அறிவு, திறன் மற்றும் விழுமியங்களை மேம்படுத்துகிறது. மேலும், தனிமனிதர்கள் தம் வாழ்க்கையில் வெற்றி பெறவும், அதன் மூலம் வாழும் சமூகத்திற்குப் பங்களிக்கவும் உதவுகிறது. கல்வி ஒருவருக்குப் புதிய திறன்களைக் கற்றுக்கொள்ளவும், அதனை மேன்மேலும் வளர்த்துக் கொள்ளவும் உதவுகிறது. அப்படி ஒருவர் கல்வியால் தம் அறிவையும் திறன்களையும் உயர்த்திக் கொள்வதன் மூலம் அவை வாழ்க்கையில் முன்னேறவும், வாழ்க்கை இலக்குகளை அடையவும் உதவுகின்றன. கல்வி ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது. கல்வி கற்றவர்கள் சமுதாயத்தில் நல்ல குடிமக்களாகவும். பொறுப் புள்ளவர்களாகவும் செயல்படுவார்கள். கல்வி சமூகத்தில் உள்ள அறியாமை மற்றும் வறுமையை ஒழிக்க உதவுகிறது. கல்வி சமூகத்தில் சமத்துவமின்மை மற்றும் பாகுபாடுகளை எதிர்த்துப் போராட உதவுகிறது. கல்வி அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்குகிறது. இது ஒரு சமூகத்தில் நீதியை நிலைநாட்ட உதவுகிறது.

பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள் மாணவர்களை மிகச் சிறந்த குடிமக்களாக உருவாக்கிட பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறார்கள். மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்குமான உறவு என்பது மிக மிக நுட்பமானது. இதனை இத்தருணத்தில் நினைவு கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். கல்வி என்பது ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கும், தனி மனிதனின் மேம்பாட்டிற்கும் இன்றியமையாதது. எனவே, கல்வியைப் பெறுவதும், அதைக் கற்பிப்பதும் மிகவும் முக்கியப் பணிகளாகும்.

கல்வித்துறை வளர்ச்சியில்
முதல் மாநிலம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு இலவசச் சீருடை, காலணிகள், காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம் முதலான பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறார். இவை தவிர கல்வி உதவித் தொகைகள் வழங்குவது, ஊக்கப் பரிசுகள் வழங்குவது, சமூகநீதி விடுதிகள் ஏற்படுத்தித் தருவது முதலான பல்வேறு திட்டங்களையும் திறம்படச் செயல்படுத்தி வருகிறார்கள். இவற்றின் பயனாகத் தமிழ்நாட்டில் கல்லாதவர்களே இல்லை எனும் உன்னதமான நிலை உருவாகியுள்ளது. இந்திய அளவில் தமிழ்நாடு கல்வித்துறை வளர்ச்சியில் முதல் மாநிலம் எனப் பாராட்டப்படுகிறது.

காமராசர் பிறந்த நாளில் கொண்டாடப்படும் இந்த ஆண்டின் கல்வி வளர்ச்சி நாளில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ஊடக மய்யம், சமூக வலைதளங்கள் வாயிலாக போட்டிகள் நடத்தப்படுகின்றன. இப்போட்டிகளில் தற்போது பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களும், மேனாள் மாணவர்களும் கலந்து கொள்ளலாம்.  தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர்  மு.பெ.சாமிநாதன்  போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிபெறும் மாணவர்களுக்கு நேரில் வாழ்த்துகள் கூறி, பாராட்டுச் சான்றிதழ்களையும் பதக்கங்களையும் வழங்குவார்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *