குஜராத் பி.ஜே.பி. ஆட்சியில் தொடர்ந்து பாலங்கள் இடிந்து விழும் விபரீதம்!

viduthalai
2 Min Read

வதோதரா, ஜூலை 9 குஜராத் மாநி லத்தில் முக்கிய பாலம் இன்று (9.7.2025) இடிந்து விழுந்து இதுவரை 8 பேர் உயிரிழந்தனர். மேலும் பத்துக்கும் மேற்பட்டோரைக் காணவில்லை.

வாகனங்கள் ஆற்றுக்குள் விழுந்தன

குஜராத் மாநிலம் மஹிசாகர் நதி யின் குறுக்கே வதோதரா – ஆனந்த் மாவட்டங்களை இணைக்கும் பாலம் உள்ளது. மாவட்டங்களை இணைக்கும் முக்கிய பாலம் ஆகையால், எப்போதும் போக்குவரத்து இருந்துகொண்டே இருக்கும். இன்று (9.7.2025) காலை வாகனங்கள் அதிக அளவு சென்று கொண்டிருந்தபோதே பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த கார்கள், இருசக்கர வாகனங்கள், ஆட்டோ உள்ளிட்டவை ஆற்றுக்குள் விழுந்தன. மேலும், டேங்கர் லாரி ஒன்று இடிந்து விழுந்த பாலத்தின் மேலிருந்து விழும் நிலையில் தொங்கிக்கொண்டிருக்கிறது.

மீட்புப் பணி

ஏராளமான வாகனங்கள் ஆற்றுக்குள் விழுந்ததால், பலரைக் காணவில்லை என கூறப்படுகிறது.  இந்நிலையில் குஜராத்தில் பாலம் உடைந்து ஆற்றுக் குள் வாகனங்கள் விழுந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக முதல் கட்ட தகவல்கள்  தெரி விக்கின்றன. இந்தப் பாலம் இடிந்து விழுந்ததில் 2 லாரிகள், 2 வேன்கள் மற்றும் ஆட்டோ,  இருசக்கர வாகனங்கள் ஆற்றுக்குள் விழுந்ததாகக் கூறப்படுகிறது.  இந்நிலையில் உட னடியாக நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் மீட்புப் பணியில் இறங்கியுள்ளனர்.

பாலங்கள் இடிவது தொடர்கதை

குஜராத் மாநிலத்தில் 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மோர்பி நகரில் ஓடும் ஆற்றின் மேல் கட்டப்பட்ட கேபிள் பாலம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் பாலத்தைப் பார்வையிட வந்த குழந்தைகள், பெண்கள் உள்பட 140–க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.

அதேபோல குஜராத்தின் முக்கிய நகரமான ஆனந்த் பகுதியில் உள்ள தண்டி யாத்ரா மார்க் என்னும் இடத்தில், 2023 ஆம் ஆண்டு  கட்டுமான பணி முடியும் நிலையில் இருந்த பாலம் ஒன்று, சீட்டுக் கட்டு போல சரிந்து விழுந்தது.

2024 ஆம் ஆண்டு தபி மாவட்டம், வலோட் பகுதியில் மாநில நெடுஞ்சாலையில் புதிதாக கட்டப்பட்ட பால பணிகள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கத் தயாராக இருந்தது. இந்த நிலையில் பாலம் துண்டு துண்டாய் உடைந்து விழுந்தது. ஒருவேளை பாலம் திறந்து மக்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும்போது விழுந்திருந்தால், பெரும் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கக் கூடும் குஜராத்தில் ஆண்டுக்கு ஒரு பாலம் இடிந்து விழுவது தொடர்கதையாகி உள்ளது. இருப்பினும் ஒவ்வொரு ஆண்டும் இறந்தவர்களுக்கு நிவாரணம் அறி விப்பதோடு, மாநிலத்தை ஆளும் பாஜக அரசு கைகழுவி விடுகிறது. இதனால் பாலம் இடிந்து விழுந்து உயிர்கள் பலியாவது தொடர்கதையாகிக் கொண்டே போகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *