சென்னை, ஜுலை 9- சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணியாற்றி வருபவர் மோகன்தாஸ். பா.ஜனதா கட்சியைச் சேர்ந்த இவர், சென்னை சூளைமேட்டை சேர்ந்த விகாஷ்குமார் என்பவரது வீட்டில் வசித்து வந்தார்.
வீட்டை காலி செய்வது தொடர்பாக அவர்களுக்கு இடையே பிரச்சினை இருந்தது. இதுதொடர்பான வழக்கு சென்னை சிட்டி உரிமையியல் நீதிமன்றம் (சிவில்), உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் நடந்தது.
கடந்த 6.1.2025 அன்று இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மே மாதம் 31-ஆம் தேதிக்குள் வீட்டை காலி செய்து ஒப்படைக்க மோகன்தாசுக்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவின் படி மோகன்தாஸ் வீட்டை காலி செய்யவில்லை எனக்கூறி அவருக்கு எதிராக விகாஷ்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், நீதிமன்ற உத்தரவை வழக்குரைஞர் ‘மோகன்தாஸ் தொடர்ந்து மதிக்கவில்லை எனக்கூறி அவருக்கு 4 மாதம் சிறை தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
மேலும், அவர் மீது தமிழ்நாடு பார் கவுன்சில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.