கோவை, ஜூலை 8- ஏழை – எளிய மக்கள், சிறு, குறு தொழில்கள் பாதிக்காத வகையில் மின் கட்டணம் உயர்த்தப் பட்டு உள்ளது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
கோவை கொடிசியா மைதானத்தில் 5.7.2025 அன்று நடைபெற்ற விழாவில் 100 புதிய அரசுப் பேருந்துகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர் களுக்கு அவர் அளித்த பேட்டியில், சென்னையில் மின் பேருந்துகள் பயன்படுத்தப்படுவது போலவே, கோவை மற்றும் மதுரை நகரங்களுக்கு மின் பேருந்துகள் விரைவில் வர உள்ளன.
பரிசீலனை
அதற்கான 500 பேருந்துகளுக்கான டெண்டர் முடிவடைந்து பரிசீலனையில் இருக்கிறது. தொடர்ந்து இதில் கோவைக்கும் மதுரைக்கும் மின் பேருந்துகள் ஒதுக்கப் பட உள்ளன.
ஏழை, எளிய மக்கள் மற்றும் சிறு, குறு தொழில்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.
தொழில் துறையினரின் கருத்துகளும் கவனத்தில் கொண்டு, அதற்கான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும்.
பயணிகளிடம் ஓட்டுநர்கள் மற்றும் நடத்து நர்கள் மரியாதையுடன் பழக அறிவுறுத்தப்படுகிறது.
சிலர் செய்யும் தவறுகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.