பி.ஜே.பி.க்கு எதிராக அ.தி.மு.க.வுக்குள் எதிர்ப்புக் குரல்

viduthalai
2 Min Read

சென்னை, ஜூலை 8-  தமிழ்நாட்டில் காலூன்ற வேண்டும் என்ற பாஜகவின் எண்ணம் ஒருநாளும் நடக்காது என்று அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜாவின் கருத்து தொடர்பாக, தமிழ்நாடு பாஜக மேனாள் தலைவர் அண்ணாமலை பதிலளிக்க மறுத்துவிட்டார்.

அதுமட்டுமல்லாமல் யாருடைய கருத்துக்கும் பதில் அளிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க தடை

தமிழ்நாட்டில் அதிமுக – பாஜக கூட்டணி அமைக்கப்பட்டதில் இருந்தே, இரு கட்சியினர் மத்தியில் ஒருங்கிணைப்பு இல்லாமல் இருந்து வருகிறது. கூட்டணி அமைந்த போது அதிமுக தலைவர்கள் எதிர் கருத்து தெரிவிக்க தடை விதித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். அதேபோல் உள்துறை அமைச்சர் அமித்ஷா முதல் அண்ணாமலை வரை அனைவரும் ஒரே குரலில் கூட்டணி ஆட்சி என்ற வார்த்தையை பயன்படுத்தினார்கள்.

இதற்கு அதிமுக தலைவர்கள் விளக்கம் கொடுத்து வந்தனர். அதுமட்டுமல்லாமல், பெரியார் மற்றும் அண்ணாவை கொச்சைப்படுத்தி முருகன் மாநாட்டில் அதிமுக தலைவர்கள் முன்னிலையில் காட்சிப் பதிவு ஒளிபரப்பினர். அதே போல் அமித்ஷா ஒருபடி மேல் சென்று, எடப்பாடி பழனிசாமி பெயரை தவிர்த்து அதிமுகவைச் சேர்ந்தவர் முதலமைச்சராக வருவார் என்று தெரிவித்தார்.

அன்வர் ராஜா பேட்டி

இது அதிமுக தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா பேசுகையில், தமிழ்நாட்டில் காலூன்ற துடிக்கும் பாஜகவின் எண்ணம் பலிக்காது.

அது ஒருக்காலும் நடக்காது. தமிழ்நாட்டை பொறுத்தவரை கூட்டணிக்கு தலைமை தாங்கப் போவது அதிமுக தான். அதற்கு தலைவர் எடப்பாடி பழனிசாமி தான். அதில் எந்த மாற்றுக் கருத்திற்கும் இடம் கிடையாது. பாஜகவின் திட்டம் பலிக்காது இதனை பாஜக ஏற்கவில்லை என்றால், இரு கட்சிகளுக்கு இடையில் ஒருங்கிணைப்பு சாத்தியம் இல்லை.

அதிமுக பெரும் பான்மை இடங்களை பிடித்து ஆட்சி அமைக்கும். கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. அது மட்டுமல்லாமல், முதலமைச்சர் தேர்வில் பாஜகவின் திட்டம் பலிக்காது என்று தெரிவித்துள்ளார். அன்வர் ராஜாவின் கருத்து அதிமுக – பாஜக இடையே புதிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

அண்ணாமலை மறுப்பு

இந்த நிலையில் அன்வர் ராஜாவின் கருத்து தொடர்பாக தமிழ்நாடு பாஜகவின் மேனாள் தலைவர் அண்ணாமலையிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அண்ணாமலை, நான் எதையும் பேச விரும்பவில்லை. நான் யாரிடமும் வேலை செய்யவில்லை. மற்றவர்கள் கூறும் கருத்துக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று பதிலளிக்க மறுத்து சென்றுள்ளார்.

அதிமுக – பாஜக கூட்டணி தமிழ்நாட்டில் ஆட்சியமைத்தால், அதனை பாஜக ஆட்சி என்று தான் கூறுவேன் என்று அண்ணாமலை சில நாட்களுக்கு முன் கூறி இருந்தார்.

ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனி சாமி தனிப் பெரும்பான்மை யுடன் ஆட்சி அமைப் போம் என்று கூறிய பின், அன்வர் ராஜா ஒருபடி மேல் சென்று, பாஜகவால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது என்று கூறியுள்ளார். இதற்கு அண்ணாமலை பதிலளிக்க மறுத்திருக்கிறார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *