கட்சியினர் யார் தவறு செய்தாலும் கண்டிப்பான நடவடிக்கை மதுரை தி.மு.க. மண்டல தலைவர்கள் திடீர் பதவி விலகல் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு

viduthalai
2 Min Read

சென்னை, ஜூலை.8- பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு மோசடி எதிரொலியாக மதுரை மாநகராட்சி தி.மு.க. மண்டல தலைவர்கள் திடீரென பதவி விலகினர்.  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் கடிதம் கொடுத்தனர்

 உத்தரவு

2026 சட்டமன்ற தேர்தலை முன் னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘உடன்பிறப்பே வா’ என்ற தலைப்பில் தொகுதிவாரியாக நிர்வாகிகளை அழைத்து சென்னை அண்ணா அறிவா லயத்தில் கலந்துரையாடி வருகிறார். தன்னை சந்திக்க வரும் நிர்வாகிகளின் பின்புலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரல்நுனியில் வைத்து, இந்த சந்திப்பை நடத்தி வருகிறார்

தொகுதி உள்கட்சி விவகாரம், கட்சி வளர்ச்சிப்பணி, உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட புள்ளி விவரங் களை பட்டியலாக கையில் வைத்துக் கொண்டு நிர்வாகிகளுடன் கலந்துரை யாடுகிறார். எனவே அவர் சிறப்பான முறையில் கட்சிபணியாற்றிய நிர்வாகிகளை பாராட்டுகிறார். அவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் புத்தகத்தை பரிசாக வழங்குகிறார்.

கண்டிப்பு

அதே வேளையில் கட்சி பணியில் சுணக்கமாகவும், மெத்தன போக்குடனும் செயல்படும் நிர்வாகிகளிடம் கண்டிப்பு முகம் காட்டுகிறார். அப்போது அவர் தேவை ஏற்படும்போது தயவு தாட்சணயமின்றி பதவியை பறிப்பேன்’ என்று எச்சரிக்கையையும் விடுத்து வருகிறார். அதன்படி மதுரை மாநகராட்சியில் உள்ள தி.மு.க.வை சேர்ந்த 5 மண்டல தலைவர்களையும் பதவியில் இருந்து உடனடியாக பதவி விலக வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

காரணம் என்ன?

மதுரை மாநகராட்சியில் உள்ள தனியார் கட்டடங்கள், வீடுகளுக்கு சொத்துவரி குறைவாக நிர்ணயித்து பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் மதுரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

இதில் ஓய்வுபெற்ற உதவி ஆணையர் ரெங்கராஜன், மண்டலம் (3) தலைவர் பாண்டிச் செல்வியின் நேர்முகஉதவியாளர் தனசேகரன், உதவி வருவாய் அலுவலர் குமரன், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் சதீஷ், உதவி ஆணையர் உதவியாளர் கார்த்திகேயன், இடைத்தரர்களான உசேன், ராஜே ஷ் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

தி.மு.க.மண்டல தலைவர்களான சரவணபுவனேஸ்வரி(மண்டலம் 2), பாண்டிச்செல்வி (மண்டலம் 3), சுவிதா (மண்டலம் 5) ஆகியோரிடமும், அவர்களது கணவர்களிடம் விசாரணை நடைபெற்றது. இந்த நிலையில் மதுரை மாநகராட்சியில் உள்ள தி.மு.க. மண்டல தலைவர்கள் மீது அதிரடி நடவடிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ளார். அவர்கள் 5 பேரும் தி.மு.க.வில் இருந்தும் நீக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.

மதுரை மாநகராட்சி தி.மு.க. பெண் மேயர் இந்திராணியின் கணவரும், மதுரை மாநகர் மாவட்டம் 57-ஆவது வார்டை சேர்ந்த பொன் வசந்த் தி.மு.க.வில் இருந்து கடந்த மே மாதம் அதிரடியாக நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரத்தில் மதுரை மேயர் இந்திராணி மீதும் நடவடிக்கை பாயும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் தி.மு.க மண்டலதலைவர்கள் மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் தங்களது பதவி விலகல் கடிதங்களை கொடுத்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *