தமிழ்நாடு சட்டப் பேரவையின் தேர்தல் 2026 ஏப்ரல் – மே மாத வாக்கில் நடைபெற இருக்கிறது.
தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெளிப்படையாக – கொள்கையின் அடிப்படையில் – கீறலுக்கு இடமில்லாமல் உறுதியாக அமைந்துள்ளது.
எதிரணியில் கூட்டணி என்பது அணியாக இல்லாமல் .. தடுமாறித் தள்ளாடிக் கொண்டிருக்கிறது.
இதில் என்ன அவலம் என்றால், ஆளும் கட்சியாகவும், எதிர்க் கட்சியாகவும் இருந்து வந்திருக்கிற அதிமுகவின் நிலையை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தி.மு.க. அல்லது அதிமுக என்கிற திராவிட கட்சிகள்தான் மாறி மாறி ஆட்சிக்கு வந்துள்ளன. கூட்டணிகளும் இந்தக் கட்சிகளின் பெயரால்தான் செயல்பட்டும் வந்துள்ளன.
அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருப்பதாகக் கூறப்படும் பிஜேபி பெரியண்ணனாக நடந்து கொண்டு வருகிறது.
அதிமுக கூட்டணி என்று சொல்லாமல், பிஜேபி தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி என்று பிஜேபியைச் சேர்ந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாம கரணம் சூட்டுகிறார் என்றால், இதன் பொருள் என்ன?
அந்த அளவிற்கு அதிமுக பலகீனப்பட்டுள்ளது என்று சொல்வதா? பிஜேபிக்கு அடமானமாகி விட்டது என்று கூறுவதா? என்ற கேள்வி தமிழ்நாடு அரசியலை உணர்ந்தவர்கள் மத்தியில் எழுவது நியாயமான ஒன்றே!
இது விவாதப் பொருளாகி செங்குத்தாகவே கேள்வி எழுந்து நிற்கும் நிலையில், தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி, அதில் பா.ஜ.க.வும் இடம் பெறும் என்று பளிச்சென்ற பதில் அளிக்கும் முதுகெலும்பு அதிமுகவிடம் இல்லாமல் போனது எதைக் காட்டுகிறது?
அமித்ஷாவை – எந்தவித முன்னறிவிப்புமின்றி டில்லிக்குச் சென்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு – அதனைத் தொடர்ந்து அமித்ஷா தமிழ்நாட்டுக்கு வந்து கூட்டணிபற்றி அவர் வாயால் அறிவிக்கப்படுகிறது என்பதெல்லாம் எதைக் காட்டுகிறது?
சென்னையில் செய்தியாளர் சந்திப்பில்கூட அமித்ஷா தான் கூட்டணி பற்றி அறிவித்தார்.
முதலில் எடப்பாடி பழனிசாமிதான் முதலமைச்சர் என்ற பொருளில் பேசிய அமித்ஷா இப்பொழுது அதிமுகவிலிருந்து ஒருவர் முதலமைச்சராக வருவார் என்று சொல்லுவது எல்லாம் எதைக் காட்டுகிறது?
‘பேச நா இரண்டுடையாய்ப் போற்றி’ என்று ‘ஆரியமாயை’ நூலில் அறிஞர் அண்ணா அவர்கள் ஆபிடுபேயின் கருத்தை தனக்கே உரித்தான தமிழில் குறிப்பிட்டார்.
இன்றைய ஒன்றிய பிரதமரும், உள்துறை அமைச்சரும் பார்ப்பனரல்லாதாரராக இருக்கலாம்; ஆனால் அவர்கள் ஏற்றுக் கொண்டு செயல்படுத்தும் அதி தீவிர சித்தாந்தம் எல்லாம் ஆர்.எஸ்.எஸினுடையது.
ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம் என்றால், அது ஆரிய கலாச்சாரத்தையும், ஆரிய ஆதிக்கத்தையும் நிலை நிறுத்துவதுதான் என்பது எழுதப்பட்டதாக இருந்தாலும், எழுதப்படாததாக இருந்தாலும் அதுதான் – அதுவேதான்.
‘‘நிஜப் புலியைவிட வேஷம் போட்ட புலி அதிகம் குதிக்கும்’’ என்ற தந்தை பெரியாரின் மேற்கோளை இந்த இடத்தில் பொருத்திப் பார்த்தால், விடயம் என்ன என்பது எளிதில் விளங்குமே!
தி.மு.க.வின் தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் வீட்டுக்கு வீடு சென்று ஆட்சியின் சாதனைகளை விளக்குவோம் – கட்சிக்கு உறுப்பினர்களைச் சேர்ப்போம் என்று சொல்லக் கூடிய மனவலிமையும், அறிவு நாணயத் தன்மையும் அப்பட்டமாகப் பளிச்சிடுகிறது.
ஆனால் அதிமுகவின் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு சட்டப் பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான திரு. எடப்பாடி பழனிசாமி அவர்களோ ‘மக்களைக் காப்போம்! தமிழகத்தை மீட்போம்!’ என்ற முழக்கத்தை முன் வைத்து மக்களைச் சந்திக்க இருக்கிறாராம்!
மக்களைக் காப்பது ஒருபுறம் இருக்கட்டும்; முதலில் முதலுக்கே மோசம் என்று சொல்லுவதுபோல், தம் சொந்தக் கட்சியை பிஜேபியிடமிருந்து எப்படி மீட்கப் போகிறார் என்பது முக்கிய கேள்வி.
அதிமுகவின் பொதுச் செயலாளரும், மேனாள் முதலமைச்சருமான ஜெயலலிதா அம்மையார் மறைவிற்குப் பிறகு அதிமுகவிற்குள் நடக்கும் குழப்பங்களும், உள் குத்துகளும், யாருக்குப் பதவி என்ற பதவிப் போட்டியும் மக்கள் மத்தியில் மட்டுமல்ல; அதிமுக கட்சிக்குள்ளேயே பெரும் குடைச்சலாகவும் உதட்டைப் பிதுக்குவதுமாக உள்ளது என்பதை மறுக்க முடியுமா?
ஜெயலலிதா அம்மையார் மருத்துவமனையில் இருந்தபோதே, பிஜேபி தனக்கே உரித்தான வஞ்சகக் கழுகுக் கண் பார்வையை செலுத்தத் துவங்கிடவில்லையா?
முதல் அமைச்சராக அதிமுக பொதுக் குழுவால் தேர்வு செய்யப்பட்ட சசிகலா அம்மையாரைப் பதவி ஏற்கச் செய்ய முடியாமல், ‘ஓடி விளையாடு பாப்பா’ என்ற வரிகளுக்கு ஏற்ப, தமிழ்நாட்டிற்கு கூடுதலாக அன்று பொறுப்பேற்ற ஆளுநராக இருந்த வித்தியாசாகர் ராவ் மேலிடத்து உத்தரவுப்படி ‘தலைமறைவான’திலிருந்து அரசியல் சங்கிலியை இழுத்துப் பார்த்தால், இன்றுவரை ஏன் நாளையும்கூட, அதிமுக என்பது எ(கெ)டுப்பார் கைப்பிள்ளையாகி விட்டதைத் தெரிந்துகொள்ள முடியும்!
அ.தி.மு.க.வின் செய்தித் தொடர்பாளராக நாள்தோறும் செய்தியாளர்களைச் சந்தித்து கட்சியின் நிலைப்பாட்டை எடுத்துக் கூறிக் கொண்டிருந்த திரு. ஜெயக்குமார் இப்பொழுது எங்கே இருக்கிறார்?
பிஜேபியோடு கூட்டணி வைத்தால், அவர்கள் கெதி அதோ கெதி என்று தெரிந்திருந்தும், பிஜேபியின் அதிகார அழுத்தத்திற்குப் பணிந்து, என்.டி.ஏ. கூட்டணி நுகத் தடிக்குக் கழுத்தை நீட்டும் அதிமுக வரும் தேர்தலோடு தன் அத்தியாயத்திற்குத் தனக்குத்தானே முடிவுரை எழுதப் போகிறது என்பதை இப்பொழுதே எழுதி வைத்துக் கொள்ளலாம்!