பாட்னா, ஜூலை 8- பீகாரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொன்று எரிக்கப்பட்டனர்.
சந்தேகம்
பீகாரின் பூர்னியா மாவட்டத்தில் உள்ளது டெட்மா கிராமம். இங்குள்ள பழங்குடியினத்தை சேர்ந்த ஒரு சிறுமி திடீரென மரணம் அடைந்தார். அவர் சூனியம் வைத்ததால் இறந்திருக்கலாம் என்று சிறுமியின் உறவினர்களும், கிராமத்தினரும் கருதினர்.
இதனால் சிறுமிக்கு சூனியம் செய்ததாக அந்த கிராமத்தை சேர்ந்த பாபுலால் என்பவரின் குடும்பத்தினர் மீது சந்தேகம் அடைந்தனர். இதனால் நேற்று முன்தினம் (6.7.2025) இரவில் 30-க்கும் மேற்பட்டபவர்கள் அவரது வீட்டின் முன்பு திரண்டு வீட்டில் இருந்த 3 பெண்கள் உள்பட 5 பேரை அடித்துக் கொன்ற னர். பின்னர் அவர்களின் உடல்களை ஒரு டிராக்டரில் எடுத்துச்சென்று ஒரு புதருக்கு அருகே வைத்து எரித்துவிட்டனர்.
2 பேர் கைது
இதுகுறித்து காவல் துறையினர்க்கு தகவல் கிடைத்தது. பூர்னியா மாவட்ட டி.அய்.ஜி. பிரமோத் குமார் மண்டல் நேரில் சென்று பார்வையிட்டார். இதையடுத்து இந்த கொலை தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் பலரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் எதிர்க்கட்சிகளின் சரமாரி யான விமர்சனங்களுக்கு உள்ளானது. எதிர்க்கட்சித் தலைவர் தேஜஷ்வி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.