மதுரை, ஜூலை 7- விவசாயிகளுக்கு காற்றாலைகள் கடும் பாதிப்பு ஏற்படுத்துவதாக தொடர்ந்த வழக்கில், காற்றாலைகள் பசுமை மின் உற்பத்தி செய்வதாக மதுரை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்து, வழக்கை தள்ளுபடி செய்தது.
காற்றாலைகளுக்கு
எதிராக வழக்கு
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சின்ராஜ், மதுரை உயர் நீதிமன்றத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் ஏராளமான காற்றாலைகள் உள்ளன. விவசாய நிலங்களிலும் காற்றாலைகள் அமைத்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இந்த காற்றாலைகள் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகிலும் அமைந்து உள்ளன. இவற்றில் இருந்து வெளியேறும் நச்சானது காற்று மாசுபாட்டை ஏற்படுத்துவதால் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஏராளமான காற்றாலைகள் விதிகளை மீறி அமைக்கப் பட்டு உள்ளன. இதனால் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். எனவே சட்டவிரோதமாக அமைக்கப்பட்டு உள்ள காற்றாலைகளுக்கான உரிய இழப்பீட்டு தொகையை சம்பந்தப்பட்ட நிலங்களின் உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காற்றாலைகள் அனைத்தையும் அகற்ற உத்தரவிட வேண்டும்.”இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
பசுமை மின் உற்பத்தி
இந்த வழக்கு நீதிபதிகள்
எஸ்.எம்.சுப்பிரமணியம், மரிய கிளாட் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், “மனுதாரரின் புகார் ஏற்கெனவே பெறப்பட்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
அவர்கள், சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்தாத தொழில்கள் பட்டியலில் சூரிய மின் உற்பத்தி, காற்றாலை மின் உற்பத்தி (அதாவது பசுமை மின் உற்பத்தி) ஆகியவை இடம்பெற்று உள்ளதாக தெரிவித்து உள்ளனர். எனவே காற்றாலைகள் அமைப்பதற்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் அனுமதி பெற தேவையில்லை” என கூறப்பட்டு இருந்தது.
ஏற்க முடியாது
இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “பசுமை மின் உற்பத்தியில் காற்றாலைகள் ஈடுபடுகின்றன. எனவே காற்றாலைகள் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதாக கூறுவதை ஏற்க முடியாது. இதன்படி அவற்றை அப்புறப் படுத்துமாறு உத்தரவிடவும் முடியாது. இந்த விவகாரத்தில் சட்டவிதிமீறல்கள் இருக்கும்பட்சத்தில் மனுதாரர் பசுமை தீர்ப்பாயத்தை அணுகலாம்” என உத்தரவிட்டு, வழக்கை தள்ளுபடி செய்தனர்.