ரியோ டி ஜெனிரோ, ஜூலை 7- பஹல்காம் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதற்கு பிரிக்ஸ் மாநாட்டில் பாகிஸ்தான் பெயரைக் குறிப்பிடாமல் உறுப்பு நாடுகள் கண்டனம் தெரிவித்தன.
பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் ஜூலை 6, 2025 அன்று 17வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட உறுப்பு நாடுகள் பஹல்காம் தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதிகளின் புகலிடமாக இருக்கும் பாகிஸ்தான் பெயரைக் குறிப்பிடாமல் கண்டனம் தெரிவித்தது.
இது இந்திய வெளியுறவுக் கொள்கையின் பலவீனத்தை காட்டுகிறது என்று உலக அரசியல் போக்கு தொடர்பாக ஆய்வுகளை மேற்கொள்ளும் அமைப்புகள் கவலைதெரிவித்துள்ளன
பிரிக்ஸ் அமைப்பின்
17ஆவது உச்சி மாநாடு
பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் புதிய உறுப்பு நாடுகளாக எகிப்த், எத்தியோப்பியா, ஈரான் மற்றும் அய்க்கிய அமீரகம் போன்ற நாடுகள் புதிதாக இணைந்துள்ளன
பகல்காம் தாக்குதலில் 26 பேர் பலி
காஷ்மீரில் உள்ள பகல்காம் பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இந்தியா பாகிஸ்தானின் தீவிரவாதிகள் இலக்கை தாக்கியது, இந்தியா வெற்றிகரமாக முன்னேறி வரும் போது திடீரென போர் நிறுத்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டார்.
இது மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்கு இந்தியா தரப்பில் டிரம்பிற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை. அதிபர் டிரம்ப் 21 ஆவது முறையாக இந்தியா பாகிஸ்தான் போரை வர்த்தகம் என்னும் கிலுகிலுப்பையைக் காட்டி நிறுத்திவிட்டேன் என்று சிறுபிள்ளைகள் நடத்தும் சண்டையைப் போல் நையாண்டி செய்துவருகிறார்.
பாகிஸ்தான் பெயரைக் குறிப்பிடாத உறுப்பு நாடுகள்
இந்த நிலையில் மாநாட்டின் முதல் நாளான நேற்று (6.7.2025) பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி முன்னிலையில் இந்தியா மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இருப்பினும் பிரிக்ஸ் நாடுகள் பாகிஸ்தான் பெயரைக் குறிப்பிடவில்லை.
இது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை வலுவற்ற ஒன்றாக மாறிவிட்டதாக பல்வேறு அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.