ரியோ டி ஜெனிரோ, ஜூலை 7- பிரிக்ஸ் நாடுகள் கூட்டமைப்பின் முதல்நாள் உச்சிமாநாட்டில் அமெரிக்க வரிவிதிப்பு கொள்கைக்கு கண்டனம் தெரிவித்ததை அடுத்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
பிரிக்ஸ் குழுவின் “அமெரிக்க எதிர்ப்பு கொள்கைகளுடன்” ஒத்துப்போகும் எந்தவொரு நாட்டிற்கும் கூடுதலாக 10 சதவீதம் வரி விதிக்கப்படும் என்றும், இதில் “எந்த விதிவிலக்கும் இருக்காது” என்றும் வர்த்தக உலகில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது
பிரிக்ஸ் மாநாடு
பிரிக்ஸ் கூட்டமைப்பு 2009ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. பிரிக்ஸ் கூட்டமைப்பின் 2 நாள் உச்சி மாநாடு பிரேசிலின் ரியோ டிஜெனிரோ நகரில் 6.07.2025 தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமர் மோடி மற்றும் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பிரேசில் தலைநகர், ரியோ டி ஜெனிரோவில் கூடியுள்ளனர்
முதல் நாள் மாநாட்டில் தீவிரவாதம் போர் மற்றும் சுற்றுப்புறச்சூழல் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இந்த மாநாடில் கலந்துகொண்ட உறுப்பு நாடுகள் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் கொண்டுவந்த புதிய வரிக்கொள்கை குறித்து கண்டனம் தெரிவித்தன.
10 சதவீத வரி டிரம்ப் எச்சரிக்கை
பிரிக்ஸ் மாநாட்டின் கண்டனத்தை அடுத்து உடனடியாக தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெளியிட்டார்
அதில் பிரிக்ஸ் (BRICS) குழுவின் “அமெரிக்க எதிர்ப்பு கொள்கைகளுடன்” ஒத்துப்போகும் எந்தவொரு நாட்டின் பொருட்களுக்கும் கூடுதலாக 10 சதவீதம் வரி விதிக்கப்படும் என்றும், இதில் “எந்த விதிவிலக்கும் இருக்காது” என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
மேலும் பல்வேறு நாடுகளுடனான வரி ஒப்பந்தங்கள் தொடர்பான கடிதங்கள் திங்கட்கிழமை (ஜூலை 7) நண்பகல் 12:00 (இந்திய நேரப்படி இன்று இரவு) மணிக்கு அனுப்பப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
பிரிக்ஸ் நாணயம் குறித்து ஏற்கெனவே எச்சரித்த டிரம்ப்
இந்த ஆண்டு தொடக்கத்தில், பிரிக்ஸ் நாடுகள் அமெரிக்க டாலருக்கு மாற்றாக ஒரு நாணயத்தை உருவாக்கும் திட்டத்துடன் முன்னேறினால், வர்த்தகத்தில் 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளை டிரம்ப் அச்சுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது