புதுடில்லி, ஜூலை 7- இந்திய உச்சநீதிமன்றத்தின் 50-ஆவது தலைமை நீதிபதியாக பணியாற்றியவர் சந்திரசூட். இவர் ஓய்வுக்கு பின்னரும் தலைமை நீதிபதியின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் தொடர்ந்து வசித்து வருகிறார். சந்திரசூட்டுக்கு பிறகு பதவி ஏற்ற சஞ்சீவ் கன்னா, தனது 6 மாத பதவி காலத்தில் தலைமை நீதிபதியின் அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு செல்ல விரும்பவில்லை. தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாயும் அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு செல்லாமல் தனக்கு முன்னர் ஒதுக்கப்பட்ட பங்களாவில் தொடர்ந்து வசித்து வருகிறார்.
இதற்கிடையே சந்திரசூட் கடந்த ஆண்டு டிசம்பர் 18-ஆம் தேதி அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவுக்கு கடிதம் எழுதி தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள புதிய இல்லத்தில் புதுப்பித்தல் பணிகள் நடந்து வருவதால் 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் 30-ஆம் தேதி வரை தற்போதைய பங்களாவில் தொடர்ந்து வசிக்க அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
அதற்கு சஞ்சீவ் கன்னா ஒப்புதல் அளித்தார். பின்னர் சந்திரசூட், மே31-ஆம் தேதி வரை இல்லத்தில் தொடர்ந்து வசிக்க சஞ்சீவ் கன்னாவிடம் வாய் மொழியாக கோரிக்கை விடுத்தார்.
மேலும் நீட்டிப்பு வழங்கப்படாது என்ற நிபந்தனையுடன் சஞ்சீவ் கன்னா 2-ஆவது முறை நீட்டிப்பு வழங்கினார். அதன்பிறகும் சந்திரசூட் அந்த இல்லத்தை காலி செய்யவில்லை. இதற்கிடையே ஒன்றிய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்துக்கு உச்சநீதிமன்ற நிர்வாகம் கடிதம் எழுதியது. அதில், மேனாள் தலைமை நீதிபதி சந்திரசூட் அனுமதிக்கப்பட்ட காலத்துக்கு பிறகும் தங்கியுள்ளார். எனவே தாமதமின்றி அந்த பங்களாவில் இருந்து சந்திரசூட்டை காலி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டது.