கவிஞர் ந.மா. முத்துக்கூத்தன் நூற்றாண்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை

viduthalai
12 Min Read

தன்மானத்துடனும், இனமானத்துடனும் கொள்கை லட்சியத்தோடும் வாழ்ந்த முத்துக்கூத்தன்கள், கலைமாமணிகள், பகுத்தறிவுவாதிகள், சுயமரியாதைச் சுடரொளிகள் மறைவதில்லை;
தத்துவங்களாக, கொள்கைகளாக என்றென்றைக்கும் வாழ்கிறார்கள்!

சென்னை, ஜூலை 7- தன்மானத்துடனும், இன மானத்துடனும் கொள்கை லட்சியத்தோடும் வாழ்ந்த முத்துக்கூத்தன்கள், கலைமாமணிகள், பகுத்தறிவு வாதிகள், சுயமரியாதைச் சுடரொளிகள் மறைவதில்லை; தத்துவங்களாக, கொள்கைகளாக என்றென்றைக்கும் வாழ்கிறார்கள் என்று  கடந்த 26.5.2025 அன்று சென்னையில்  நடைபெற்ற முத்துக்கூத்தன் நூற்றாண்டு விழாவில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

நாங்கள் எல்லாம்
‘‘பழைய வாலிபர்கள்!’’

முத்துக்கூத்தன் அவர்களுடைய வாழ்விணையருக்கு 90 வயதாகிறது என்று சொன்னார்கள். நாங்கள் எல்லாம் ‘‘பழைய வாலிபர்கள்.’’ இந்த சொல், பெரியார் பயன்படுத்திய சொல்லாகும்.

பழைய மந்திரி என்று சொல்கிறார்கள் அல்லவா – அதுபோன்று, பழைய வாலிபர்கள் என்று சொன்னால், தவறில்லை.

இன்னமும் வாலிபத் தன்மை போகவில்லை. பழையது. ஆனால், பழசுக்கு மிகவும் மரியாதை உண்டு. பழைய அரிசிக்குத்தான், புதிய அரிசியைவிட மவுசு அதிகம் – தாய்மார்களுக்குச் சொல்கிறேன் உதாரணம்.

ந.மா.முத்துக்கூத்தன் நூற்றாண்டு மலரில்கூட நான் எழுதியிருக்கிறேன். வள்ளுவருடைய திருக்குறளில், ‘‘தம்மின் தம்மக்கள் அறிவுடைமை’’ என்றார்.

அதாவது, பிள்ளைகள், தந்தையைவிட அறிவாளிகளாக இருப்பார்கள். அதுதான் மிகச் சிறந்தது.

‘‘தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து

மன்னுயிர்க்குக் கெல்லாம் இனிது’’ என்று திரு வள்ளுவர் குறிப்பிட்டுள்ளார்.

அப்பாவைவிட கொள்கையில்
பிள்ளை தீவிரமாக இருக்கவேண்டும்!

வள்ளுவரை மிகப்பெரிய அளவிற்கு உயர்த்திய தந்தை பெரியார்,  ‘‘தம்மின் தம்மக்கள் கொள்கையுடைமை’’ என்றார்.

அப்பாவைவிட கொள்கையில் பிள்ளை தீவிரமாக இருக்கவேண்டும். அதுதான் இந்தக் கொள்கைக்கு, நூற்றாண்டு விழா காணுகின்ற இயக்கத்திற்கு மிகவும் இன்றியமையாததாகும்.

அதன்படியே இருக்கக்கூடியவர் கலை வாணன் அவர்களாவார்.  கலைவாணர் பெயரைத் தான், இவருக்குக் கலைவாணன் என்று வைத்தி ருக்கிறார்கள்.

பெயருக்கேற்றாற்போல், எல்லா பணிகளையும் செய்வார். அவருடைய அப்பா எப்படி பல்கலைக் கொள்கலனோ அதுபோன்று.

பாட்டு எழுதவேண்டுமா? நடிக்கவேண்டுமா? பொம்மலாட்டமா? வில்லுப்பாட்டா? இயக்குநர் பணியா? அமைப்பு நடத்தவேண்டுமா? எல்லா பணிகளையும் செய்வார் கலைவாணன்  அவர்கள்.

‘‘பாதை மாறாத
பாட்டுப் பயணம்’’ புத்தகம்!

கலைமாணி கவிஞர் ந.மா.முத்துக்கூத்தனின் ‘‘பாதை மாறாத பாட்டுப் பயணம்’’ என்ற புத்தகத்தை என்னிடம் கொடுத்தார்கள். அந்தப் புத்தகத்தில் நிறைய தகவல்கள் இருக்கின்றன. இரவில் படுக்கப் போவதற்கு முன்பு, ஏதாவது ஒரு புத்தகத்தைப் படிப்பேன்.

என்னுடைய வாழ்விணையரும் இங்கே வந்தி ருக்கின்றார். நான் படித்த புத்தகத்தை, அவரும் படிப்பார். முக்கியமான பகுதிகளை நான் அடிக்கோடிட்டுக் கொண்டே வருவேன். நான் கோடிட்ட பகுதிகளை அவர்களும் படித்துவிடுவார்.

பொள்ளாச்சி உமாபதி அவர்கள் அருமையான ஒரு விஷயத்தைச் சொன்னார்.

இந்தியாவிற்கே
வழிகாட்டக் கூடிய அரசு!

இந்தியாவிலேயே இப்படி ஓர் அரசு, ‘திராவிட மாடல்’ அரசு  போன்று கிடையாது என்று சொல்லக்கூடிய பெருமைமிகுந்த நம்முடைய ஒப்பற்ற முதலமைச்சரின் தலைமையில் உள்ள அரசு, இந்தியாவிற்கே வழிகாட்டக் கூடிய அரசாகும்.

கட்சி வேறுபாடு இல்லாமல், கருத்து மாறுபாடு இல்லாமல், புத்தகங்களையெல்லாம் நாட்டுடைமை ஆக்கி, அந்தக் குடும்பத்தினருக்கு வேண்டிய தொகை யைக் கொடுக்கிறார்கள்.

இது ஒரு நல்ல பணியாகும். மக்களுக்குப் பயன்படக் கூடிய விஷயமாகும். அதனால்தான், மிகப்பெரிய அளவிற்கு அந்தப் பணி தொடரவேண்டும் என்று சொன்னார். அவர் சொன்னதை, அனைவரின் சார்பாக நான் வழிமொழிகிறேன். நிச்சயமாக, அதற்குரிய ஏற்பாடு களை – அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று செய்து முடிப்போம்!

யாருடைய பரிந்துரையும் இல்லாமல், நேரிடையாகச் சென்றாலே ‘திராவிட மாடல்’ அரசு செய்யவேண்டியதைச் செய்கிறது.

அப்படிப்பட்ட நல்ல நிகழ்ச்சி இது. இதில் ஒரு பெரிய வியப்பு என்னவென்றால், கலைவாணன் பொம்ம லாட்டம் நிகழ்ச்சி என்றாலும், முத்துக்கூத்தன் நிகழ்ச்சி என்றாலும், அதில் ஒரு தனித்தன்மை இருக்கும்.

வாண்டுகள் அல்ல,
‘‘பெரியார் பிஞ்சுகள்!’’

மற்றவர்கள் எல்லாம், குழந்தைகளை ‘‘வாண்டுகள், வாண்டுகள்’’ என்று சொல்லி ஒதுக்குவார்கள். நாங்கள், வாண்டுகள் என்று குழந்தைகளை ஒதுக்கவில்லை.

அவர்களுக்கு நல்ல பெயர் வைத்திருக்கின்றோம். அதுதான் ‘‘பெரியார் பிஞ்சு’’ என்று.

பலர் புரியாமல், பெரியார் ஒரு நஞ்சு என்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் பதில் சொல்வதற்கு, இதுபோன்ற பிஞ்சுகள் போதும்.

ஆகவே, அப்படிப்பட்ட பெரியார் பிஞ்சுகள் இங்கே, பெரியார் உலகத்திற்கு நன்கொடை அளித்திருக்கிறார்கள்.

கொள்ளுப் பேரர்கள் என்று சொன்னார்கள். கொள்ளுப் பேரர், எள்ளுப் பேரர் எதுவென்றாலும், எல்லோரும் பெரியார் பிஞ்சுகள்.

புரட்சிக்கவிஞர் பாரதிதாசனுடைய ‘இசையமுது!’

5, 7, 8 வயதுள்ள பிள்ளைகள்தான் இங்கே உள்ள னர். ‘‘எல்லோரும் இன்று குழந்தைகள் நீங்கள் – இனி இந்த நாட்டை ஆளப் பிறந்தீர்.’’ புரட்சிக்கவிஞர் பாரதி தாசனுடைய ‘இசையமுது’ பாடல் இது.

அவர் சொன்னார்,

‘‘இன்று குழந்தைகள் நீங்கள் – எனினும்

இனிஇந்த நாட்டினை ஆளப் பிறந்தீர்!

இன்று குழந்தைகள் நீங்கள்!

நன்றாய்ப் படியுங்கள்! நாட்டின் குழந்தைகாள்!

ஒன்றாய் இருங்கள் உயர்வினை எண்ணுங்கள்!

இன்று குழந்தைகள் நீங்கள்!

குன்றினைப்போல் உடல்வன்மை வேண்டும்!

கொடுமை தீர்க்கப்போ ராடுதல் வேண்டும்!

தின்றதையே தின்று தெவிட்டுதல் இல்லாமல்

அன்றன்று வாழ்விற் புதுமை காணவேண்டும்

இன்று குழந்தைகள் நீங்கள்!

பல்கலை ஆய்ந்து தொழில் பலகற்றும்,

பாட்டிற் சுவைகாணும் திறமையும் உற்றும்,

அல்லும் பகலும் இந்நாட்டுக் குழைப்பீர்கள்!

அறிவுடன் ஆண்மையைக் கூவி அழைப்பீர்கள்!

இன்று குழந்தைகள் நீங்கள்!’’

நாளைக்கு இந்த நாட்டை ஆளப் போகின்றவர்கள் என்று புரட்சிக்கவிஞரே சொல்லியிருக்கிறார்.

கற்கோட்டையில் உள்ளவர்களை நோக்கி!

அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் வரவி ருக்கின்றது. தலைகீழாக சிரசாசனம் செய்தாலும் தமிழ்நாட்டில் வர முடியாத நிலையில் உள்ள அப்படிப்பட்டவர்கள் எல்லாம் ஏதேதோ திட்டம் போட்டு, ‘திராவிட மாடல்’ ஆட்சியை அசைத்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். அசைக்கவே முடியாது அவர்களால்.

திராவிடத்தை அசைக்கவே முடியாது. ஏனென்றால், கற்கோட்டையில் உள்ளவர்களை நோக்கி, கண்ணாடிக் கோட்டையில் உள்ளவர்கள் கல்வீசக் கூடாது.

இன்றைய குழந்தைகள், இன்னும் இரண்டு தேர்தல்கள் தாண்டினால், அவர்களுக்கு 18 வயது. வருங்கால வாக்காளர்கள் அவர்கள்.

ஆகவே, இரண்டு தேர்தல்களுக்குப் பிறகாவது நாங்கள் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்து விடுவோம் என்று நினைக்கிறார்களே, அது நடக்காது என்று காட்டுவதற்காகத்தான் இவர்கள் எல்லாம் இருக்கிறார்கள்.

இரண்டு தேர்தல் அல்ல; மூன்று தேர்தல் முடிந்தாலும், தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்க முடியாது. இது பெரியார் மண்.

இது திராவிட மண் – திராவிடம் வெல்லும், அதை வரலாறு என்றைக்கும் சொல்லும், சொல்லும், சொல்லும் என்று காட்டுவதற்கு, மிக அமைதியாக கலைவாணன் செய்த ஏற்பாடு. பிஞ்சுகளை வரிசையாக வரச் செய்து, இவர்கள்தான் புத்தகம் வாங்குவார்கள், இவர்கள்தான் எல்லாவற்றையும் செய்வார்கள் என்று சொல்லக்கூடிய அளவிற்கு வந்தாயிற்று.

அற்புதமான நூற்றாண்டு விழா மலர்!

மிக அற்புதமான விஷயம் என்னவென்றால், இங்கே வெளியிடப்பட்ட மலரை மிக அருமையாக தயாரித்திருக்கிறார்கள்; இதனை குறுகிய காலத்தில்தான் தயார் செய்திருக்கிறார்கள்.

ஒரு மலரை எப்படித் தயாரிக்கவேண்டும்? அந்த மலரை எப்படி ஆவணப்படுத்த வேண்டும் என்பதற்கு இந்த மலர் ஓர் எடுத்துக்காட்டு.

இரண்டு நாள்களுக்கு முன்புதான் இந்த மலரை என்னிடம் கொடுத்தார்கள். என்னுடைய இயல்பு எப்போதும், நேரம் காலம் பார்க்காமல், உடனே படித்து முடித்து விடுவேன். என்னுடைய கார் ஓட்டுநர் மிகக் கவ னமாக ஓட்டுவார். நான் காரில் பயணம் செய்யும்போதே, எழுதுவேன், படிப்பேன்.

தன்மானமும், இனமானமும்தான் அளவுகோல்!

அதுபோல இந்த மலரையும் படித்தேன். அண்ணா எப்படி தலைமை தாங்கினார்? எப்படி கலைஞர் தலைமை தாங்கினார்? இந்தக் கொள்கையைக் கடைப்பிடித்ததினால், முத்துக்கூத்தன் வாழ்வில் வெற்றி பெற்றிருக்கின்றார். அதற்குப் பணம் அளவுகோல் அல்ல; புகழ் அளவுகோல் அல்ல; பதவி அளவுகோல் அல்ல. தன்மானமும், இன மானமும்தான் அளவுகோல். அவர் கொள்கை லட்சியத்தோடு வாழ்ந்தவர்.

இவ்வளவு தலைவர்களோடு பழகியவர் முத்துக்கூத்தன் அவர்கள்.

இரண்டு செய்திகளை மட்டும் உங்களுக்குச் சொல்கிறேன் இந்த மலரிலிருந்து.

வெறும் புதினம் அல்ல;
வரலாற்றுக் களஞ்சியம்!

இந்த மலர், வெறும் புதினம் அல்ல. வரலாற்றுக் களஞ்சியம். களஞ்சியத்திலிருந்து நெல்லைப் பாதுகாப்போடு எடுப்பது போன்றதாகும்.

வில்லுப்பாட்டுபற்றி இங்கே சில செய்திகளைச் சொன்னார்கள். அதற்கும் அப்பாற்பட்டு தெரிய வேண்டிய செய்திகள் இருக்கின்றன. ந.மா.முத்துக்கூத்தன் பொம்மலாட்டம் நிகழ்ச்சியை நடத்துவார் என்று உங்களுக்கெல்லாம் தெரியும். அதனை நவீன யுத்திகளைப் பயன்படுத்தி செய்வார் கலைவாணன் அவர்கள்.

நம்முடைய முத்துக்கூத்தன் அவர்கள் அரசியல் காரணங்களால் பெரிய ஏமாற்றத்திற்கு ஆளாகியிருக்கிறார் என்றாலும், எப்போதும் அவர் கொள்கை மாறவில்லை.

ஒரு சாதாரண ஏமாற்றம் என்றால்கூட, ‘‘என்னய்யா, கட்சி, என்னய்யா, தலைவர்’’ என்று சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள்.

அது ஆசாபாசம், சுயநலம். ஆனால், சுயநலத்தைத் தாண்டி இனநலம் மிக முக்கியமானதாகும்.

அதனால்தான், மறைந்த நம்முடைய இறையன் அவர்கள், தனக்குப் புனைப் பெயராக ‘இனநலம்’ என்று வைத்துக் கொண்டார்.

ஒரு சம்பவம், கலைவாணருக்குப் பிறகு, முத்துக்கூத்தன் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடத்தவேண்டும் என்று முயற்சிக்கிறார். ஆனால், வில்லுப்பாட்டில், இவருக்குப் பயிற்சி இல்லை. கலைவாணருக்கு மரியாதை செலுத்தவேண்டும் என்று நினைத்தார்.

நடிகர் சங்கத்தில் அந்த நிகழ்ச்சியை நடத்தலாம் என்று முயற்சித்தபோது, கடைசி நேரத்தில், அதற்கு வாய்ப்பில்லை என்று சொல்லிவிட்டார்கள்.

டி.ஏ.மதுரம் அம்மையார்

அந்த வருத்தத்தோடு இவர் அமர்ந்திருக்கையில், டி.ஏ.மதுரம் அம்மையார், இவரிடம் வந்து, ‘‘ஏங்க, வருத்தமாக இருக்கிறீர்கள்?’’ என்று கேட்டிருக்கிறார்.

முத்துக்கூத்தன் அவர்கள், ‘‘தாங்க முடியாமல், குமுறி குமுறி அழுகிறார்.’’

மதுரம் அம்மையார், ‘‘அழாதீர்கள்; விஷயத்தைச் சொல்லுங்கள்’’ என்கிறார்.

இவர் விஷயத்தைச் சொன்னவுடன், ‘‘அவ்வளவுதானே, உங்கள் அண்ணனுடைய (கலைவாணர்) முதலாம் ஆண்டு நினைவு நாள் வருகிறது; அந்த நிகழ்வில், நிகழ்ச்சியை நீங்கள் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியை நடத்தலாம்’’ என்று சொல்கிறார்.

அதற்குத் தேவையானவற்றை வாங்கவேண்டுமே என்று முத்துக்கூத்தன் சொல்கிறார்.

அவர் (கலைவாணர்) பயன்படுத்திய வில்லு எல்லாம் இருக்கிறது; அவற்றை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று டி.ஏ.மதுரம் அம்மையார் சொன்னார்.

எவ்வளவு பெரிய உள்ளம் பார்த்தீர்களா? கலைவாணருக்கு எவ்வளவு பெரிய உள்ளமோ, அதே கொள்கை உள்ளம் டி.ஏ.மதுரம் அம்மையார் அவர்களுக்கும் இருந்துள்ளது.

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்

புத்தருடைய வரலாற்றை மிக முக்கியமாக எடுத்து, கலைவாணர் நிறைய இடங்களில் சொல்லியிருக்கிறார். 1956 ஆம் ஆண்டு திருச்சியில் தி.மு.க. மாநாடு நடைபெறுகிறது. அம்மாநாட்டில்தான், தேர்தலில் நிற்கலாமா? வேண்டாமா? என்று முடிவு செய்த மாநாடு.

அதில் ஒரு செய்தி,

‘‘குறிப்பாக, 1956 ஆம் ஆண்டு திருச்சியில் நடந்த தி.மு.க. மாநில மாநாட்டில், அவர் (கலைவாணர்) புத்தர் கதை வில்லுப்பாட்டுப் பாடிய போது, அருகிலிருந்து பார்க்கும் அரிய வாய்ப்புக் கிடைத்தது.

அந்த மாநாட்டில்தான், தி.மு.கழகம், தேர்தலில் போட்டியிடுவதா? வேண்டாமா? என்று ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது.

மாநாட்டில் மேலும் பல சிறப்புகள், நிகழ்வுகள் நடந்தன. நாதஸ்வர சக்ரவர்த்தி திருவாடுதுறை டி.என்.ராஜரத்தினம் பிள்ளை அவர்களுடைய நாதசுர இசை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

அவர் இசை எழுப்பிய, இந்திய சுதந்திர நாளைப் போல, அந்த மாநாடும் இசை எழுப்பிப் பேசத் தொடங்கி யது.

அதுவரை, அவர் திராவிட இயக்கத்தை வெகுவாக வெறுத்து சாடி வந்தவர். கலைவாணர் அவர்களின் மூலமாக, அண்ணாவின் அன்பிற்குப் பாத்திரமானவர்.

திராவிடர் கழகத்தைவிட்டுப் பிரிந்து, திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கியதால், தி.க.வினர் பங்காளிகளைப் போல நடந்துகொண்ட நேரம் அது.

அந்தச் சூழ்நிலையில், புத்தர் வில்லுப்பாட்டு நடத்திய கலைவாணர், கதை முடிவில் பாடுகிறார்,

‘‘ஆசையெல்லாம் வெறுக்கவேணும்

ஆசைகள்தான் பாவங்களுக்கெல்லாம் காரணம்’’ என்று புத்தர் பெருமான் சொன்னார்.

அப்படிச் சொன்ன புத்தர் பெருமானுக்கும் ஆசை இருந்தது என்று தனக்கே உரித்தான நகைச்சுவை பாணியில்,

புத்தரின் ஆசை
என்ன தெரியுமா?

அது என்ன ஆசை தெரியுங்களா?

அனைத்துலக மக்களும் அன்பு வழியில் செல்லவேண்டும். மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக, ஜாதி, மத, பேதமற்ற சமரச நெறியிலும் நடக்கவேண்டும் என்பதுதான் புத்தரின் ஆசை.

அதைச் சொல்லிவிட்டு, அந்தப் புத்தர் பெருமானின் ஆசை நிறைவேண்டும் என்றால்,

எல்லோரும் அன்பாக இருக்கவேண்டும்

எல்லோரும் பசியில்லாமல் இருக்கவேண்டும்

எல்லோரும் நல்லா இருக்கவேண்டும் என்று சொல்லிக் கொண்டே வந்து, இதுதான் புத்தர் பெருமான் ஆசை.

அந்தப் புத்தர் பெருமானின் ஆசை நிறைவேற வேண்டும் என்றால், சொல்லிவிட்டு, கொஞ்சம் இடைவெளி விடுகிறார்.

அய்யாவும், அண்ணாவும் ஒன்றானால்…

அதற்குப் பிறகு, இரண்டே வரியில் பாடினார்
என்.எஸ்.கே. அவர்கள்,

‘‘அய்யாவும், அண்ணாவும் ஒன்றானால்

புத்தர் ஆசை நிறைவேறும் என்றார்.’’

இரண்டு பேரும் ஒன்றானார்கள், இன்றைக்கு ‘திராவிட மாடல்’ ஆட்சி அசைக்க முடியாமல் இருக்கிறது. இதுதான் கலைவாணருடைய தொலைநோக்காகும்.

உங்களுடைய மண்டை உடையும்; உங்களுடைய தத்துவம்தான் உடையும்!

அதனால்தான் இன எதிரிகள் ஆத்திரப்படுகிறார்கள். எப்படியாவது பெரியார் பிம்பத்தை உடைக்கவேண்டும் என்று தலைகீழாக நின்று பார்க்கிறார்கள்.

பெரியார் என்பவர் ஒரு தத்துவம். அவர் ஒன்றும் களிமண் பொம்மையல்ல, உடைப்பதற்கு. அப்படியே அவரை உடைக்க முயற்சித்தால், உங்களுடைய மண்டை உடையும்; உங்களுடைய தத்துவம்தான் உடையும்.

1956 ஆம் ஆண்டு – தேர்தலில் நிற்க முடிவெடுத்த ஆண்டிலேயே கலைவாணர் அவர்கள் சொன்ன கருத்து எதை வலியுறுத்துகிறது – நீங்கள் ஒன்றாக இருக்கவேண்டும். அப்படி ஒன்றாக இருந்தால்தான், அன்பு இருக்கும், அறம் இருக்கும், பசி போகும் என்பதற்கு எடுத்துக்காட்டுதான் இன்றைய ‘திராவிட மாடல்’ ஆட்சியாகும்.

அண்ணா, கலைஞர் அதன் பின்பு இன்றைக்கு ஒப்பற்ற நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் என்று சொல்லக்கூடிய வாய்ப்புகள் வருகின்றன.

சுயமரியாதை நூற்றாண்டு வெளியீடாகவே வெளியிடலாம்!

எனவே, இந்தப் புத்தகத்தில் நிறைய செய்திகள் இருக்கின்றன. நேரத்தின் காரணமாக, எல்லாவற்றையும் உங்களுக்குச் சொல்ல முடியாது. இந்தப் புத்தகத்தை வாங்கிப் படித்துத் தெரிந்துகொள்ளலாம். கலை வாணனிடம் நான் சொன்னேன், ‘‘இன்னும் கொஞ்சம் தகவல்களைச் சேர்த்துக் கொடுங்கள்; திராவிடர் கழக வெளியீடாகவே, சுயமரியாதை நூற்றாண்டு வெளியீடாகவே வெளியிடலாம்’’ என்று.

நாள்தோறும் நூற்றாண்டு விழாக்களைக் கொண்டாடுகின்றோம்!

திராவிடர் கழகத்தில், நாள்தோறும் நூற்றாண்டு விழாக்களைக் கொண்டாடுகின்றோம். நாங்கள் கொண்டா டிய நூற்றாண்டு விழாக்களே, ஒரு நூறு ஆகிவிடும் போலிருக்கிறது.

இயக்கத்தில் இருந்த முக்கியமானவர்கள் அத்துணை பேருக்கும் நூற்றாண்டு விழாக்களைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம். நாளைக்குக்கூட ஒருவருக்கு பெரியார் திடலில் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடவிருக்கின்றோம். கொள்கை வீரர் சபாபதிக்கு நூற்றாண்டு விழா!

கொள்கையில் முதிர்ந்தவர்கள், முற்றியவர்கள் என்று சொல்லக்கூடிய அளவிற்கு மிகப்பெரிய வாய்ப்பு வந்திருக்கின்றது.

ஆகவேதான் நண்பர்களே,  இவ்விழாவினை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறீர்கள். மலரும் மிகவும் அருமையாக இருக்கின்றது.

ஒன்றிய பா.ஜ.க. மோடி அரசு, தமிழ்நாட்டிற்குக் கொடுக்கவேண்டிய நிதியைக் கொடுக்காமல் மறுத்து வருகிறது. அன்றைக்குக் ‘குருதட்சணை’யாக கட்டை விரலைக் கேட்டார்கள் என்று சொல்வார்கள். இன்றைக்கு அதற்குப் பதிலாக ‘நீட்’ தேர்வை வைத்திருக்கிறார்கள்.

கட்டை விரல் இருந்தால்தான் ‘வில்’லை இலக்கு நோக்கி செலுத்த முடியும். அந்த வில் வித்தையைக் கற்றுக் கொடுப்பதற்கு, கட்டை விரலைக் கேட்டார்கள்.

இன்றைக்கு இருப்பவர்கள்
எல்லாம் தெரிந்த ஏகலைவன்கள்தான்!

ஆனால், இன்றைக்குக் கட்டை விரலை எந்த துரோணாச்சாரியார் கேட்டாலும், துரோணாச்சாரியாரின் கட்டை விரல் இருக்காது. காலகட்டம் மாறிப் போய்விட்டது.

அதேபோன்று, ஏமாளி ஏகலைவன் இன்றைக்குக் கிடையாது.  எல்லாம் தெரிந்த ஏகலைவன்கள்தான் இருக்கிறார்கள்.

புரட்சிக்கவிஞர் விழாவில், பொம்மலாட்ட நிகழ்ச்சியை அரை மணிநேரத்தில் மிகச் சிறப்பாக செய்தார் நம்முடைய முத்துக்கூத்தன் அவர்கள். அதனை முத்தமிழறிஞர் கலைஞர் பார்த்துவிட்டு, மிகவும் ஆச்சரியப்பட்டார்.

ஆகவேதான், அவருடைய நூற்றாண்டு விழா என்பது அவருக்குப் பெருமை சேர்த்தது மட்டுமல்ல; நீங்கள் எல்லோரும் வந்தது சிறப்பாகும்.

பிஞ்சுகளுக்கும் போய்ச் சேரக்கூடிய அளவிற்கு…

முத்துக்கூத்தன் போன்றவர்களுடைய ஆற்றலைப் பெற்ற கலைவாணனை இன்னமும் அதிகமாகப் பயன்படுத்தி நம்முடைய கொள்கைகள், இதுபோன்ற பிஞ்சுகளுக்கும் போய்ச் சேரக்கூடிய அளவிற்கு, இயக்கம் அவரை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும்.

எனவேதான், முத்துக்கூத்தன்கள், கலைமாமணிகள், பகுத்தறிவுவாதிகள், சுயமரியாதைச் சுடரொளிகள் மறைவதில்லை; தத்துவங்களாக, கொள்கைகளாக என்றென்றைக்கும் வாழ்கிறார்கள்.

வாழ்க! வாழ்க!! வாழ்க!!

நன்றி, வணக்கம்!

இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *