நாக்பூர், ஜூலை 6 இந்தியாவில் ஏழைகள் அதிகரித்து வருவதாக ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி கருத்து தெரிவித்துள்ளார்.
நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி பேசுகையில், ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. செல்வந்தர்களின் கைகளில்தான் செல்வம் குவிந்து கிடக்கிறது.
ஆனால், இதுபோன்று நடக்கக் கூடாது. செல்வத்தை பரவலாக்க வேண்டிய அவசியம் உள்ளது. வேலைவாய்ப்புகள் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் பொருளாதாரத்தைத்தான் நாம் எதிர்பார்க்கிறோம்.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேவைகள் துறை 52 – 54 சதவிகிதமும், உற்பத்திகள் 22 – 24 சதவிகிதமும் பங்களிக்கின்றன. 65 முதல் 70 சதவிகித கிராமப்புற மக்கள் விவசாயத் துறையில் ஈடுபட்டாலும், அதன் பங்களிப்பு சுமார் 12 சதவிகிதம் என்ற அளவில்தான் இருக்கிறது என்று தெரிவித்தார்.
வருமான சமத்துவத்தில் மற்ற நாடுகளைவிட இந்தியா தொடர்ந்து முன்னேறி வருவதாக உலக வங்கி தெரிவித்துள்ள நிலையில், ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக நிதின் கட்கரி கூறியுள்ளார்.
பிறமொழிகள் மீதான பாகுபாட்டை ஏற்க மாட்டோம்
அகிலேஷ்யாதவ்
லக்னோ ஜூலை 06 ஒன்றிய அரசின் ஹிந்தி திணிப்பு மற்றும் மாநில மொழிகளை புறக்கணிக்கும் போக்கை சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ்யாதவ் கடுமையாக எதிர்த்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: சில மாநிலங் களில் மொழி தொடர்பான சர்ச்சை நிலவி வரும் நிலையில், சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் (5.7.2025) அன்று தனது கட்சி எப்போதும் இந்திய மொழிகளுக்கு ஆதரவாக இருப்பதாகவும், அனைத்து மொழிகளும் மதிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.
மராத்திய மக்களுக்கும் உத்தரப் பிரதேசத்திற்கும் நீண்டகால தொடர்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) மற்றும் அவரது உறவினரும், மகாராட்டிரா நவநிர்மாண் சேனா (எம்.என்.எஸ்) தலைவருமான ராஜ் தாக்கரே ஆகியோர், இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு மராத்தி அடையாளம் மற்றும் ஹிந்தி மொழி திணிப்பு விவகாரம் தொடர்பாக ஒரே அரசியல் மேடையைப் பகிர்ந்து கொண்ட சில மணிநேரங்களிலேயே அகிலேஷ் யாதவின் இந்தக் கருத்துகள் வெளியாகியுள்ளன. மராத்திய மக்களுக்கும் உத்தரப் பிரதேசத்திற்கும் நீண்டகால தொடர்பு இருப்பதாகவும் சமாஜ்வாடி கட்சித் தலைவர் கூறினார்.
இந்தியாவின் குற்றத்தலைநகர் பீகார்
ராகுல் குற்றச்சாட்டு
புதுடில்லி ஜூலை 06 பீகாரை இந்தியாவின் குற்றத் தலைநகராக மாற்றிவிட்டனர் என ஆளும் பா.ஜ., அரசு மீது காங்கிரஸ் கட்சியின் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் குற்றம் சாட்டி உள்ளார்.
அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: பாட்னாவில் தொழிலதிபர் கோபால் கெம்காவை சுட்டுக் கொன்றது, பா.ஜ.,வும், முதலமைச்சர் நிதிஷ் குமாரும் இணைந்து பீகாரை இந்தியாவின் குற்றத் தலைநகராக மாற்றியுள்ளனர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.
இன்று, பீகார் கொள்ளை, துப்பாக்கிச்சூடு மற்றும் கொலையின் நிழலில் வாழ்கிறது. குற்றம் நடப்பது இங்கே வழக்கமாகிவிட்டது. இந்த அநீதியை இனி பொறுத்துக்கொள்ள முடியாது. உங்கள் குழந்தைகளைப் பாதுகாக்க முடியாத அரசாங்கம் உங்கள் எதிர்காலத்திற்கும் பொறுப்பேற்க முடியாது.
ஒவ்வொரு கொலையும், ஒவ்வொரு கொள்ளையும், ஒவ்வொரு தோட்டாவும், மாற்றத்திற்கான கூக்குரல். இப்போது ஒரு புதிய பீகாருக்கான நேரம். அங்கு முன்னேற்றம் இல்லை, பயம் இல்லை. இந்த முறை ஓட்டு அரசாங்கத்தை மாற்றுவதற்கு மட்டுமல்ல, பீகாரை காப்பாற்றுவதற்கும் ஆகும். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.