சென்னை, ஜூலை 6– அசோசியேடட் ஜா்னல்ஸ் நிறுவன (ஏஜேஎல்) சொத்துகளை விற்பனை செய்ய காங்கிரஸ் முயற்சிக்கவில்லை என்று நேஷனல் ஹெரால்ட் வழக்கில் ராகுல் காந்தி தரப்பில் 5.7.2025 அன்று வாதிடப்பட்டது. டில்லி நீதிமன்றத்தில் சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே முன்பாக நடைபெற்ற இந்த விசாரணையில், ராகுல் காந்தி தரப்பில் மூத்த வழக்குரைஞா் ஆா்.எஸ்.சீமா ஆஜராகி வாதிட்டதாவது:
காங்கிரஸ் கொள்கை
கடந்த 1937-ஆம் ஆண்டு மேனாள் பிரதமா் ஜவாஹா்லால் நேரு, ஜே.பி.கிருபளானி, ரஃபி அகமது கித்வாய் உள்ளிட்டோர் ஏஜேஎல் நிறுவனத்தை தொடங்கினா். அப்போது தயாரிக்கப்பட்ட அந்த நிறுவன சாசனத்தில் ஏஜேஎல்லின் கொள்கையே காங்கிரஸின் கொள்கையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஏஜேஎல்லுக்கு புத்துயிரூட்டுவதே நோக்கம்
ஏஜேஎல் நிறுவனம் லாபம் ஈட்டியதில்லை. சுதந்திரப் போராட்டத்தின் அங்கமாக இருந்த அந்த நிறுவனத்தை மீட்டெடுக்கவே காங்கிரஸ் முயற்சித்தது. அந்த நிறுவனத்துக்கு அளிக்கப்பட்ட கடனை திருப்பி வசூலிப்பது பிரச்சினையல்ல. அந்த நிறுவனத்துக்கு புத்துயிரூட்டி, அதை மீண்டும் வெற்றிகரமான பாதைக்குத் திருப்ப வேண்டும் என்பதே நோக்கமாக இருந்தது. ஏஜேஎல் நிறுவன சொத்துகளை விற்பனை செய்ய காங்கிரஸ் முயற்சிக்கவில்லை. விற்பனை மூலம் லாபம் ஈட்ட வேண்டும் என்று காங்கிரஸ் நினைக்கவில்லை. இது திரிக்கப்பட்ட குற்றச்சாட்டாகும். கடந்த 2008-ஆம் ஆண்டில் நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையின் வெளியீட்டை நிறுத்திவிட்டு, மனை விற்பனை நிறுவனமாக ஏஜேஎல் செயல்பட தொடங்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு அடிப்படை ஆதாரம் இல்லை. சுதந்திரத்துக்குப் பிந்தைய காலத்தில், அது எப்போதும் வணிக நிறுவனமாக இருந்ததில்லை.
தேவையற்ற ஊகம்
கடந்த 2010-ஆம் ஆண்டு காங்கிரஸ் பொதுச் செயலராகப் பதவி வகித்ததன் மூலம், கட்சி விவகாரங்களுக்கு பொறுப்பாளராக அவா் இருந்தார் என்று தவறாக கருதி, அவருக்கு எதிராக தேவையற்ற ஊகங்களை அமலாக்கத் துறை செய்துள்ளது. காங்கிரஸ் கட்சி விதிகளின்படி, கட்சி விவகாரங்களுக்கு எந்தவொரு பொதுச் செயலரையும் பொறுப்பாளராக்க முடியாது. அந்தக் காலகட்டத்தில், அக்கட்சி விதிகளின்படி அனைத்து இந்திய காங்கிரஸ் கமிட்டியில் பல பொதுச் செயலா்கள் இருந்தனா்.ஏஜேஎல் நிறுவனத்துக்கு காங்கிரஸ் கடன் அளித்தபோது அனைத்து இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு சோனியா காந்தி பொறுப்பாளராக இருந்தார் என்றும் தவறாக ஊகிக்கப்பட்டுள்ளது.
விவரமின்றி – பொய்
யங் இந்தியன் நிறுவனம் லாப நோக்கமற்றதாக இருந்தபோதிலும், அந்த நிறுவனம் தொண்டுப் பணிகளில் ஈடுபடவில்லை என்று அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியது. உணவு, நன்கொடை வழங்குவது மட்டும்தான் தொண்டுப் பணிகளா? வேறு எந்தப் பணியும் தொண்டு செய்வதாகாதா? ஏஜேஎல் நிறுவன சொத்துகள் அபகரிக்கப்பட்டதாக கூறப்படுவது போதிய விவரமின்றி கூறப்படும் பொய் என்றார். இந்த வழக்கு விசாரணை திங்கள்கிழமை தொடர உள்ளது.