‘நீரின்றி அமையாது உலகு’ என்பார்கள். அது எவ்வளவு உண்மை என்பதை நம் உடலில் இருந்தே தெரிந்துகொள்ளலாம். அதாவது நீரின்றி அமையாது உடல்.
தமிழ்நாடு மற்றும் கேரள பள்ளிகளில் நீர்ச்சத்து குறைபாட்டைத் தடுப்பதற்காகவும், அவர்கள் சரியான நேரத்தில் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யவும் “வாட்டர் பெல்” திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நீர்ச்சத்துக் குறைபாடு நீங்க…
தமிழ்நாட்டில் பள்ளிகளில் மாணவர்களின் நீர்ச்சத்துக் குறைபாட்டைத் தடுப்பதற்காகவும், அவர்கள் சரியான நேரத்தில் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யவும் ‘வாட்டர் பெல் திட்டம்’ ஜூன் இறுதி வாரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மாணவர்கள் உடல் ஆரோக்கியத்துடமன் இருக்கவும், அவர்களின் கற்றல் திறன் மேம்படவும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம். இதை ஊக்குவிக்கும் விதமாக, தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் “வாட்டர் பெல் திட்டம்” நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
குடிநீர் இடைவேளை
இந்தத் திட்டத்தின்படி தினந்தோறும் மூன்று முறை: காலை 11 மணி, மதியம் 1 மணி, பிற்பகல் 3 மணி என ஒரு நாளைக்கு மூன்று முறை பள்ளிகளில் “வாட்டர் பெல்” அடிக்கப்படும்.
மாறுபட்ட ஒலி: இந்த மணி வழக்கமான பள்ளி மணியில் இருந்து மாறுபட்ட ஒலியில் ஒலிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தண்ணீர் அருந்த நேரம்: மணி அடித்தவுடன் மாணவர்கள் வகுப்பறையிலேயே தங்கள் தண்ணீர் பாட்டில்களில் இருந்து 2 முதல் 3 நிமிடங்கள் தண்ணீர் குடிக்க அனுமதிக்கப்படுவார்கள். வகுப்புச் சூழல் பாதிக்காத வகையில் இது மேற்கொள்ளப்பட வேண்டும்.
கட்டாய தண்ணீர் பாட்டில்: மாணவர்கள் தங்கள் வீட்டிலிருந்து தண்ணீர் பாட்டில்களைக் கொண்டு வர அறிவுறுத்தப்பட வேண்டும்.
விழிப்புணர்வு: காலை தினந்தோறும் பள்ளி வளாகத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள் கூடும்போது தண்ணீர் குடிப்பதன் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட வேண்டும்.
வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் நீர்ச்சத்து குறைபாட்டைத் தடுத்தல்.
நீர்ச்சத்துக் குறைபாட்டால் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்படுவதைத் தடுத்தல்.
மாணவர்களிடையே தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஊக்குவித்தல்.