கேள்வி 1: தமிழ்நாடு அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கைது நடவடிக்கை என்பது தி.மு.க.விற்கு ஒன்றிய அரசால் விடுக்கப்பட்டுள்ள சவாலா?
– பா.முகிலன், சென்னை-14
பதில் 1: நிச்சயமாக, சீண்டிப் பார்த்தல் – ஒத்திகை நடத்தி, தி.மு.க. ஆட்சி மீது ஏவப்படுகின்ற அவதூறு, அச்சுறுத்தல் ஏவுகணைகள் – இதனை நிச்சயம் சந்தித்துப் புடம் போட்டத் தங்கமாக வெளியே வரும் ‘திராவிட மாடல்’ ஆட்சி; காரணம், இறுதித் தீர்ப்பு மக்கள் மன்றத்தில்தானே!
—
கேள்வி 2: தந்தை பெரியாருக்கும் – பாவலரேறு பெருஞ்சித்திரனாருக்கும் இருந்த நட்பு எப்படிப் பட்டது?
– மு.காளமேகம், செந்துறை
பதில் 2: அகநக நட்பு – ஆழமான இன உணர்வு நட்பு. அய்யாவின் மீது அவர் வைத்த பற்று சொற்களால் வர்ணிக்க இயலாதது!
—
கேள்வி 3: தமிழ்நாட்டிற்கு வந்த உள் துறை அமைச்சர் அமித்ஷா, தமிழர் ஒருவர்தான் பிரதமராக்கப்படுவார் என்று சொல்லியிருக்கிறாரே?
– பா.கிருஷ்ணன், செங்கல்பட்டு
பதில் 3: ‘விடுதலை’யில் “இது உண்மையா? இப்படியும் ஒரு திட்டமா?” என்ற ஒரு பெட்டிச் செய்தியை தேடிப் பிடித்து படியுங்கள். விளக்கமான பதில் கிடைக்கும்!
—
கேள்வி 4: ரஷ்யா – உக்ரைன் போர் எப்பொழுது நிறுத்தப்படும்?
– சு.கனிமொழி, கள்ளக்குறிச்சி
பதில் 4: இரண்டு நாட்டு அதிபர்களுக்கும் உண்மையான மனிதநேயமும், தெளிவான அறிவும் வரும்போது இந்த ‘வீம்புப் போர்’ நிறுத்தப்படும்!
—
கேள்வி 5: விடுமுறை முடிந்து பள்ளி மாணவர்கள் பள்ளிக்கூடம் செல்லத் தொடங்கியுள்ளனர் – அவர்களுக்கு உங்களுடைய அறிவுரை – அறவுரை யாது?
– எ.ஆனந்தன், திருவாரூர்
பதில் 5: (1.) பள்ளி – வகுப்பு – பாடம் – இவற்றில் முழுக் கவனம் செலுத்துங்கள். (2.) போதைப் பொருள், சாக்லெட் ரூபத்தில் வந்தாலும் எடுக்காதீர்! (3.) செல்போன் – கைப்பேசியை தேவைப்படும்போது மட்டும் பயன்படுத்துங்கள்!
—
கேள்வி 6: அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கைதை அ.தி.மு.க. மேனாள் அமைச்சர் ஜெயக்குமார் நியாயப்படுத்துவது நியாயமா?
– லோ.சிவதாணு, வேலூர்
பதில் 6: இதைப் பங்காளிக் காய்ச்சலாகப் பார்த்தால் இவரது கட்சிக்கே இதே கதி விரைவில் வரும்; அப்போது யாரும் குரல் கொடுக்க முன்வர மாட்டார்கள் என்பது அ.தி.மு.க. ஜெயக்குமாருக்குப் புரிய வேண்டாமா?
—
கேள்வி 7: எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டும் அமலாக்கத் துறையின் அராஜகம் தொடருவது ஏன்?
– க.பரமேஸ்வரி, தென்காசி
பதில் 7: மக்கள் எதிர்க்கட்சிகள் பக்கம். எனவே, எரிச்சல், ஆத்திரம். அதன் ‘தீய விளைவே’ இது போன்ற அவசரக் கோலம், அள்ளித் தெளித்தல்.
—
கேள்வி 8: தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணியை உடைக்க முயற்சிகள் நடைபெறுகிறதா?
– மே. அருள்செல்வன், திருவானைக்காவல்
பதில் 8: தொடர்ந்து நடத்தப்படுகிறது. ஆனால், அவர்களுக்கு அதில் தோல்விதான். உளிதான் உடைகிறது. பாறை அப்படியே பலத்துடன் இருக்கிறது.
—
கேள்வி 9: எவ்வளவு காலத்திற்குத்தான் ஜாதி – தீண்டாமைக் கொடுமைகள் இருக்கும்?
– த.மணி, தஞ்சாவூர்
பதில் 9: கடைசி பார்ப்பனரும், அவர்தம் கலாச் சாரமும் இருக்கும்வரை இருக்கும். எனவேதான், ஜாதி ஒழிப்பு – ஜாதியின் உயிர்நிலைக்கு உலை வைத்தால் மட்டுமே அக்கொடுமை முடியும் என்பது சித்தாந்தம்.
—
கேள்வி 10: தமிழ்நாடு அரசில் ஆர்.எஸ்.எஸ். மனப்பான்மை கொண்ட அதிகாரிகள் நிறைந்துள்ளார்களே?
– ந.கணேசன், மீஞ்சூர்
பதில் 10: தமிழ்நாடு அரசும், குறிப்பாக நமது முதல் அமைச்சரும் அறிவார்கள். அது நாளும் வெளிப்படுகிறது!