முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் வீடு தேடி சென்று சோதனை முறையில் ரேசன் பொருள்கள் வினியோகம்

viduthalai
2 Min Read

சென்னை, ஜூலை.4- முதிய வர்கள், மாற்றுத் திறனாளிகள் வீடு தேடி சென்று சோதனை முறையில் ரேசன் பொருட்கள் வினியோகம் செய்யும் பணி சென்னையில் 2-ஆவது நாளாக நேற்று (3.7.2025) நடைபெற்றது.

வீடு சென்று வினியோகம்

தமிழ்நாட்டில் சென்னை, நெல்லை, சிவகங்கை, திண்டுக்கல், ராணிப்பேட்டை, ஈரோடு, தருமபுரி, நாகை, நீலகிரி, கடலூர் ஆகிய 10 மாவட்டங்களில் மாவட்டத்திற்கு 10 ரேசன் கடைகள் என்ற அடிப்படையில் 100 ரேஷன் கடைகளில் 70 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் வீடுகளுக்கு தேடிச்சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் கடந்த 1-ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை சோதனை முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில், தென் சென்னை யில் உள்ள சைதாப்பேட்டை மற்றும் வேளச்சேரி பகுதிகளில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்கு நேரடியாக சென்று ரேசன் பொருட்கள் வழங்கப்பட்டன. அதன்  தொடர்ச்சியாக, வட சென்னை பகுதியில் அண்ணாநகர் மற்றும் திருவொற்றியூர் பகுதிகளில் தலா  5 கடைகள் வீதம் 10 கடை களில் முதியவர்கள், மாற்றுத்திறனாளி களின் வீடுகளுக்கு சென்று ரேசன் பொருட்கள் வழங்கும் திட்டம் நேற்று 2-ஆவது நாளாக சோதனை முறையில் மேற்கொள்ளப்பட்டது.

70 வீடுகள் இலக்கு

அண்ணாநகர், குஜ்ஜி தெருவில் அமைந்துள்ள சிந்தாமணி கூட்டுறவு மொத்த பண்டகசாலையின் கீழ் இயங்கும் ரேசன் கடை ஊழியர்கள் அந்த பகுதியில் உள்ள முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ரேசன் பொருட்களை வீடுகளுக்கு சுமை வாகனங்களில் ரேசன் பொருட்களை கொண்டு சென்று வீடு வீடாக வழங்கினர். இந்த பணியை சிந்தாமணி கூட்டுறவு மொத்த பண்டகசாலையின் சார்பதிவாளர் இந்துமதி மேற்பார்வையிட்டார். ரேசன் கடை ஊழியர்கள் 70 வீடுகளை இலக்கு நிர்ணயம் செய்து நேற்று காலை 8.30 மணி முதல் வீடு வீடாக வினியோகம் செய்யும் பணியை தொடங்கி இரவு 7 மணி வரை மேற்கொண்டனர்.

கோரிக்கை

வீடு தேடிச்சென்று முதியவர் களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் ரேசன் பொருட்கள் வினியோகம் செய்வது குறித்து குஜ்ஜி தெருவை சேர்ந்த பிரேமா (வயது 75) என்ற மூதாட்டி கூறியதாவது:-

எனது பிள்ளைகள் திருமணமாகி தனியாக பிரிந்து சென்றுவிட்டனர். எனது கணவரும் இறந்துவிட்ட நிலையில், நான் மட்டும் தனியாக வசித்து வருகிறேன். வழக்கமாக சுமார் ½ கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று ரேசன் கடையில் பொருட்களை வாங்குவது வழக்கம். அது எனக்கு மிகவும் சிரமமாகவே இருக்கும்.தற்போது, என்னைப் போன்ற மூத்த குடிக்களுக்கு வீடு தேடி ரேசன் பொருட்களை கொண்டு வந்து வினியோகம் செய்வது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த திட்டத்தை சோதனை அடிப்படையில் மட்டும் வழங்கிவிட்டு பின்னர் நிறுத்திவிடக்கூடாது. தொடர்ந்து இதுபோன்று வீடு தேடி வந்து ரேசன் பொருட்களை வழங்கினால் என் போன்ற முதியவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *