பா.ஜ.க. பாசிசம்!
கேள்வி: தமிழகத்திற்கு மத்திய அரசு தரவேண்டிய நிதியை பா.ஜ.க.வினர் பெற்றுத் தரவேண்டும் என்கிறாரே, முதல்வர்?
பதில்: ஆட்சி அதிகாரம் இவர்களிடம் இருக்கவேண்டும். அதிகார மமதையில் மத்திய அரசுமீது எகத்தாளம், ஏளனம், வசவுகளை அள்ளி வீசுவார்கள். அதன் பிறகு இவர்களுக்காக பா.ஜ.க.வினர் மத்திய அரசிடம் சிபாரிசு செய்ய வேண்டுமாம். இவர்களுக்கு எதற்கு ஆட்சி, அதிகாரம், எம்.எல்.ஏ., எம்.பி., பதவிகள்?
– ‘விஜயபாரதம்’, ஆர்.எஸ்.எஸ். வார இதழ்
எப்படி இருக்கிறது?
மாநில அரசுக்கு, ஒன்றிய அரசு சட்டப்படி நிதி அளிக்கவேண்டியது கட்டாயம் – சட்டத்தின் ஆட்சி என்பதற்கு அதுதான் அடையாளம்.
இந்தியாவில் 28 மாநிலங்களும், 8 யூனியன் பிரதேசங்களும் உள்ளன.
எல்லா மாநிலங்களிலும் ஒரே கட்சி ஆட்சி இல்லை. வெவ்வேறு கொள்கை உடைய கட்சிகள் ஆட்சியில் உள்ளன.
இந்தியா என்பது மாநிலங்களின் கூட்டமைப்பு என்று இந்திய அரசமைப்புச் சட்டமே கூறுகிறது.
இந்த நிலையில், ஒன்றிய அரசு திணிக்க விரும்பும் எல்லா சட்டங்களையும், திட்டங்களையும் கண்மூடித்தனமாக எல்லா மாநில அரசுகளும் ஏற்றுதான் தீரவேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
எடுத்துக்காட்டாக, ‘நீட்’டை எடுத்துக் கொள்ளலாம்; நீட்டை ஏற்கும் அரசுகளும் உண்டு; ஏற்காத மாநிலங்களும் உண்டு. (இன்றைய பிரதமர் குஜராத் முதலமைச்சராக இருந்தபோது ‘நீட்’டை எதிர்த்தவர்தான்).
தேசிய கல்வி என்பது ஒன்றிய அரசின் மற்றொரு திட்டம். பி.ஜே.பி. ஆளும் மாநிலங்கள் ஏற்கின்றன; பி.ஜே.பி. அல்லாத மாநிலங்கள் ஏற்க மறுக்கின்றன.
தேசிய கல்விக் கொள்கை என்பதில் மூன்று மொழிகள் கட்டாயம்; தமிழ்நாட்டிலோ இரு மொழி மட்டுமே என்பது சட்டப்படியான நிலை.
மகாராட்டிரத்தைப் பொறுத்தவரை பி.ஜே.பி., சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே தலைமை), தேசியவாத காங்கிரஸ் கட்சி (அஜித்பவார் தலைமை) முதலியவை அடங்கிய மகாயுதி கூட்டணிக் கட்சிகள் ஆட்சி அதிகாரத்தில் உள்ளன.
கடைசிக் கடைசியாக மும்மொழித் திட்டத்தில் ஹிந்தியை ஏற்பதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.
இந்த நிலையில், சட்டப்படி மாநில அரசுக்குத் தரவேண்டிய சட்டப்படியான நிதியைத் தருவதில், தானடித்த மூப்பாக ஒன்றிய பா.ஜ.க. அரசு நடந்துகொள்ளலாமா?
‘எதிர்த்துப் பேசாதே!’, ‘நாங்கள் சொல்லுவதுதான் சட்டம்’, ‘நான் சொல்வதை ஏற்றுக்கொள்‘, ‘இல்லை என்றால், உனக்கு ஒரு பைசா கிடையாது’ என்று சொல்லுவதுதான் அடாவடித்தனம்!
அதைத் தலைகீழாக மாற்றி, மூக்கால் தண்ணீர் குடிக்கிறது ஆர்.எஸ்.எஸ். வார இதழ் ‘விஜயபாரதம்!’
பா.ஜ.க. என்பது பாசிசமே – அங்கே சட்டத்திற்கும், ஜனநாயகத்திற்கும் இடம் இல்லை என்று விளங்கவில்லையா?
– மயிலாடன்