திருப்புவனம், ஜூலை 3 காவல்துறை விசாரணையின்போது உயிரிழந்த திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் சகோதரர் நவீனுக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை அமைச்சர் பெரியகருப்பன் நேற்று (2.7.2025) வழங்கினார். மேலும், அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவையும் அவர் வழங்கினார்.
அரசுப் பணி
முன்னதாக அஜித்குமாரின் தாய், சகோதரரிடம் தொலைபேசியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அது தொடர்பான காட்சிப் பதிவையும் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில், “திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது, யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு. கடமை தவறிக் குற்றம் இழைத்தவர்களுக்கு நிச்சயம் இந்த அரசு தண்டனை பெற்றுத் தரும்! பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதலாக நிற்கும்!” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், நேற்று (ஜூலை 2) காலையில், அமைச்சர் பெரியகருப்பன் அஜித்குமாரின் சகோதரர் நவீனுக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை வழங்கியதோடு அஜித்குமார் குடும்பத்தினரிடம் இலவச வீட்டு மனைக்கான பட்டாவையும் வழங்கினார். நவீனுக்கு ஆவின் நிறுவனத்தில் வேலை வழங்கப்பட்டுள்ளதாக தகவல் நிலவுகிறது.
பின்னர் பேசிய அமைச்சர் பெரியகருப்பன், “அஜித்குமார் குடும்பத்துக்கு உதவி செய்ய அரசு உத்தரவு பிறப்பிருந்தது. அதன்படி, அஜித்குமாருக்கு அவரது கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. கூடவே அஜித்குமார் குடும்பத்துக்கான இலவச வீட்டு மனைப் பட்டாவும் வழங்கப்பட்டுள்ளது.” என்றார்.
நடந்தது என்ன?
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார். கோயிலுக்கு வந்த பெண்ணின் காரில் இருந்த 9 பவுன் நகை காணாமல் போனது தொடர்பாக விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டு காவல்துறையினர் தாக்கியதில் உயிரிழந்தார். இதையடுத்து வழக்கு விசாரணை சிபிசிஅய்டிக்கு மாற்றப்பட்டது.
பின்னர் கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்டு, அஜித்குமாரை தாக்கிக் கொலை செய்ததாக தனிப்படை காவலர்கள் கண்ணன், ஆனந்த், பிரபு, ராமச்சந்திரன், சங்கர மணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனிடையே, மானாமதுரை காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளாட்சி அமைப்புகளில்
மாற்றுத்திறனாளிகள் பிரதிநிதித்துவம் பெற ஜூலை 17 வரை விண்ணப்பிக்கலாம்
சென்னை, ஜூலை 3 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகள் பிரதிநிதித்துவம் பெற விண்ணப்பிக்கலாம் என்றும், வருகிற 17-ஆம் தேதி இதற்கான கடைசி நாள் என்றும் நகராட்சி நிர்வாக இயக்குநர் அறிவித்துள்ளார்.
மாற்றுத்திறனாளிகள் பிரதிநிதித்துவம்
நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சிகளில் நேரடியாக தேர்தலில் போட்டியிடாமல் மாற்றுத்திறனாளிகளை நியமன உறுப்பினர்களாக நியமிப்பதற்கான சட்டதிருத்த மசோதா கடந்த ஏப்ரல் மாதம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் மாற்றுத்திறனாளிகள் 650 பேர் நகர்ப்புற உள்ளாட்சிகளிலும், 12 ஆயிரத்து 913 பேர் கிராம ஊராட்சிகளிலும், 388 பேர் ஊராட்சி ஒன்றியங்களிலும், 37 பேர் மாவட்ட ஊராட்சிகளிலும் நியமிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் அவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளதாகநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
17-ஆம் தேதி கடைசிநாள்
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு https://chennaicorporation.gov.in என்ற இணையதள முகவரியிலும், பிற மாநகராட்சி, நகராட்சிக்கு https://tnurbantree.tn.gov. in/whatsnew என்ற இணையதள முகவரியிலும், பேரூராட்சிக்கு https://tn.gov.in/dtp அல்லது https://dtp.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பேரூராட்சி எல்லைக்குள் வசித்து வரும் தகுதியான விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட பேரூராட்சி செயல் அலுவலரிடமும், நகராட்சி, மாநகராட்சி எல்லைக்குள் வசித்து வரும் தகுதியான விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட நகராட்சி, மாநகராட்சி ஆணையாளரிடம் நேரடியாக அல்லது தபால் மூலம் வருகிற 17-ஆம் தேதி மாலை 3 மணிக்குள் சமர்ப்பிக்கவேண்டும் என நகராட்சி நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளனர்.
18 வயதுக்கு கீழிருந்தால் கைது கூடாது.. உயர்நீதிமன்றம் உத்தரவு
காதல் மோகத்தின் பேரில் பதியப்படும் போக்சோ வழக்குகளில் இருபாலரும் 18 வயதுக்கு உட்பட்டவர்களாக இருந்தால் அவர்களை நீதி மன்ற காவலுக்கு அனுப்பக் கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர்களை சிறார் நீதி வாரியத்தில் ஆஜர்படுத்த வேண்டும் எனவும் இதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கவும் காவல் துறை மற்றும் நீதித்துறை அதிகாரி களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.