வல்லம், ஜுன் 3- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) முதலாமாண்டு பொறியியல் மற்றும் கலை அறிவியல் துறை முதன்மையர்களுக்கு வகுப்புகள் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் பல்கலைக்கழக வணக்கத்திற்குரிய வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றும் போது இந்த நிகர்நிலைப் பல்கலைக்கழகம் சிறப்பான வகையில் பல்வேறு சாதனைகளை அடைந்துள்ளது.
இங்கு பயின்ற மாணவர்கள் பல்வேறு நாடுகளில் அமெரிக்கா, அய்ரோப்பா, கனடா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற பல நாடுகளில் உயர் பதவிகளில் இருக்கிறார்கள். மேதகு மேனாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் ஆறு முறை இப்பல்கலைக்கழகத்தில் வருகை புரிந்து மாணவர்களிடையே உரையாற்றியுள்ளார்கள்.
மக்கள் பல்கலைக்கழகமாக விளங்கும் இப்பல்கலைக்கழகம் தனிப் பட்ட எவருக்கும் சொந்தம் இல்லை. பெரியார் மற்றும் மணியம்மையார் அவர்களின் அருட்கொடையால் உருவாக்கப்பட்டது. பல்வேறு மாணவர்களும், கிராமத்திலிருந்து வரும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களை இப்பல்கலைக்கழகம் பட்டதாரிகளாக உருவாக்கி யுள்ளது. மேலும் சுற்றுச்சூழலை பாதுகாத்துள்ளது.
இதுவரை தாய் தந்தையர் உங்களுடைய எதிர்காலத்தை நிர்நிணத்துள்ளார்கள். இப்பல்கலைக்கழகம் ஒரு கல்விக் குழுமம் பிற்காலத்தில் தங்களை உயர்வடையச் செய்வதற்கு கட்டுப்பாடுகளை நீங்கள் அவசியம் பின்பற்ற வேண்டும்.
கல்வியில் எதுவும் சந்தேகம் என்றால் பேராசிரியர்களிடம் கேட்டு தெளிவு பெறுங்கள். அன்பார்ந்த பெற்றோர்களே எங்களுடைய கல்விக் குழுமத்தில் பொறுப்புணர்ச்சியோடு இங்கு சேர்த் துள்ளீர்கள். விதிகள் கடுமையாக உள்ளது என்று நினைக்காதீர்கள்.
இது ஒரு கசப்பு மருந்துதான். வகுப்புகளை கூர்ந்து கவனிக்க சொல்லுங்கள். வேலைவாய்ப்பைப் பற்றி கவலைப்படாதீர்கள் உங்களது பிள்ளைகளை ஒழுங்குப்படுத்து வதற்காக ஆசிரியர்கள் உள்ளார்கள். இப்பல்கலைக்கழகத்தின் குறிக் கோள்: ‘வேலை கேட்க மாட்டோம், வேலை கொடுப்போம்’ என்பதுதான் இதனை நீங்கள் அவசியம் பின்பற்ற வேண்டும்.
இந்நிகழ்வில் துணைவேந்தர் பேரா. வெ.இராமச்சந்திரன் உரையில் இங்கு கல்வி பயில வந்திருக்கும் மாணவர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டு எவ்விதமான படிப்புகளெல்லாம் உள்ளது என்றும் அறிவியல் பூர்வமாக சிந்திக்கவும் அதனை நடைமுறைப்படுத்தவும் ஆசிரியர்கள் தங்களை வழிநடத்துவார்கள் என்றார். பல்கலைக்கழக இணை துணைவேந்தர் பேரா. ஆர்.மல்லிகா உரையாற்றும் போது நீங்கள் இதுவரை பள்ளிக்கூடங்களில் பயின்று இன்று நீங்கள் தங்களுடைய எதிர்காலத்திற்கான படிப்பை தொடர இருக்கிறீர்கள். ஆகையால், நீங்கள் கல்வி பயிலுவதில் எவ்விதம் சமரசமும் இன்றி, ஆசிரியர்களிடம் சந்தேகங்களை தெளிவுப்படுத்திக் கொள்ளவேண்டும். பெரியாரின் பகுத்தறிவு கொள்கையை பின்பற்றி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று கூறினார்.
பல்கலைக்கழக பதிவாளர் பேரா. பி.கே.சிறீவித்யா உரையாற்றும் போது மாணவர்கள் அணியக்கூடிய சீருடை பற்றியும் நேரம் தவறாமல் வகுப்புக்கு செல்ல வேண்டும் என்றும் மற்றும் பல்வேறு கல்வி உதவித்தொகை மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்தால் வழங்கப் படுகிறது என்றும் அதற்குரிய நெறி முறைகளையும் எடுத்துரைத்தார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட 34ஆவது தமிழ்நாடு தேசிய மாணவர்கள் படையின் கமாண்டிங் அலுவலர் கர்னல் கபில் துளி உரையாற்றும் போது மாணவர்கள் தேசிய மாணவர் படையில் சேர்வதால் கிடைக்கும் அனுபவங்களை பற்றி எடுத்துரைத்தார். பல்வேறு துறை களைச் சேர்ந்த ஆசிரிய பெருமக்கள் உரையாற்றினார்கள்.
வரவேற்புரையை பொறியியல் துறை முதன்மையர் பேரா. கதிரவனும், நன்றியுரையை முதன்மையர் பேரா. மகேஸ்குமாரும் கூறினார்கள்.