ஒவ்வொரு மனிதனும் மூச்சு விடும் முறை என்பது கைரேகை போலவே பிரத்யேகமானது (unique) என்கிறது சமீபத்திய ஆய்வு. இஸ்ரேலில் உள்ள வெய்ஸ்மேன் பல்கலை, 100 ஆரோக்கியமான இளைஞர்களை ஆய்வுக்கு உட்படுத்தி இதைக் கண்டறிந்துள்ளது.
அதீத சர்க்கரை, கொழுப்பு, உப்பு உடைய மேற்கத்திய உணவுகளை உண்பதால் ஏற்படும் உடல் பருமன், மண் ணீரலை பாதிக்கும். ஆரோக்கியமான உணவு முறைக்கு மாறினால்கூட இந்த பாதிப்பை சரி செய்யவே இயலாது என்று, சுவீடன் நாட்டைச் சேர்ந்த கே.அய்., பல்கலை மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஹெர்குலிஸ் நட்சத்திர மண்டலத்தில் ஒரு புதிய கோளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது, வியாழன் கோளை விட ஏழு மடங்கு பெரியது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய புறக்கோள்களுள் இதுவும் ஒன்று. இதனுடைய மேற்பரப்பு வெப்பநிலை மைனஸ் 3 டிகிரி செல்ஷியஸ்.
பாசிகளின் வளர்ச்சியில் மாற்றம், நீரின் வெப்பநிலை மாற்றம் முதலிய காரணங்களால் பெருங்கடல்கள் இருண்டு வருகின்றன. அதாவது உலகப் பெருங்கடல் பரப்பின் 20 சதவீத பரப்பிற்குள், ஒளி ஊடுருவுவது குறைந்துள்ளது. இதனால் சூரிய, சந்திர ஒளியை நம்பி வாழும் உயிரினங்கள் கடுமையாக பாதிக்கப்படும். இவற்றை உண்ணும் மனிதர்களும் பாதிக்கப்படுவர் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
இந்தோனேஷியாவின் மேற்கு பப்புவா பகுதியில் நன்னீரில் வாழும் ஏழு புதிய லாப்ஸ்டர் இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேற்கு பப்புவா பகுதி உயிரியல் பன்முகத்தன்மை மிக்கது. இந்தக் கண்டுபிடிப்பு, அதில் ஒரு மிகச்சிறிய பகுதி தான் என்று, ஆய்வில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.