புதுடில்லி, ஜூலை.3- வாக்காளராக பதிவு செய்வது வசிப்பிடத்திலா? அல்லது சொந்த வீடு இருக்கும் இடத்திலா? என்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் விளக்கம் அளித்துள் ளார்.
எங்கு பதிவு செய்வது?
பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதை யொட்டி, வாக்காளர் பட்டியல் சிறப்பு மதிப்பாய்வு செய்யப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் டில்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் கூறியதாவது:-
வாக்காளர் பட்டியல் மதிப்பாய்வின் முக்கிய நோக்கமே இருவேறு இடங்களில் வாக்காளர் அடையாள அட்டைவைத்திருப்பவர்களை அடையாளம் காண்பதுதான். மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, ஒருவர் தான் வசிக்கும் தொகுதியில் மட்டுமே வாக்களிக்கமுடியும். உதாரணமாக, டெல்லியில் குடியிருக்கும் ஒருவர், பாட்னாவில் சொந்த வீடு வைத்து இருந்தால் அவர் டெல்லியில்தான் வாக்களிக்க முடியும். பாட்னாவில் வாக்களிக்க முடியாது. எனவே குடியிருக்கும் தொகுதிக்குள்தான் ஒருவர் வாக்காளராக பதிவு செய்ய முடியும்.
குற்றம்
ஆனால் பலர் இரண்டுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக் காளர்களாக பதிவு செய்து அடையாள அட்டை களை வைத்துள்ளனர். இது சட்டப்படி குற்றமாகும்.
ஒரு இடத்தில் இருந்து வேறு இடங்களுக்கு குடிபெயர்பவர்கள், முந்தைய வாக்காளர் அடையாள அட்டைகளை வைத்து இருப்பதும் குற்றமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
6 மாநிலங்களில் மதிப்பாய்வு
இதனிடையே வாக்காளர் பட்டியல் மதிப்பாய்வு குறித்து அதிகாரிகள் கூறுகையில், 1952-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரையிலான 52 ஆண்டு காலத்தில், நாடு முழுவதும் அல்லது பகுதியாக, பல்வேறு திருத்தங்கள் மூலம் வாக்காளர் பட்டியல்கள் புதிதாக தயாரிக்கப்பட்டன.ஆனால் இந்த முறை இந்த பயிற்சி 22 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறுகிறது.
தேர்தல் ஆணையம் இந்த ஆண்டு பீகார், அசாம்,கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு, மேற்கு வங்காளம் ஆகிய 6 மாநிலங்களில் வாக்காளர் பட்டியலை தீவிரமாக மதிப்பாய்வு செய்யும். இதன் மூலம் வெளிநாட்டினர், சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டறிந்து அவர்களை வெளியேற்ற முடியும் என்றனர்.