திடீர் மரணங்களுக்கும் – கரோனா தடுப்பூசிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை : மருத்துவ ஆய்வறிக்கையில் தகவல்

Viduthalai
2 Min Read

புதுடில்லி, ஜூலை 03 திடீர் மரணங்களுக்கு கரோனா தடுப் பூசியுடன் நேரடி தொடர்பு உள்ளதற்கான எந்த ஆதாரமும் இல்லை என மருத்துவ ஆராய்ச்சி இந்திய கவுன்சில் (ஐசிஎம்ஆர்), நோய் கட்டுப்பாட்டு தேசிய மையம் (என்சிடிசி) ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021-ஆம் ஆண்டு அக்டோபர் முதல் 2023-ஆம் ஆண்டு மார்ச் வரை நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்ட நபர்களில் சிலர் திடீர் மரணங்களை சந்தித்தனர். இதற்கு இவர்கள் செலுத்திக்கொண்ட கரோனா தடுப்பூசி காரணமாக இருக்கலாம் என வதந்தி பரவியது.

ஆய்வுகள்

இதையடுத்து அய்சிஎம்ஆர் தொற்று நோயியல் மய்யம் மற்றும் என்சிடிசி ஆகியவை நாடு முழுவதும் 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 47 மருத்துவமனைகளில் கடந்த 2023-ஆம் ஆண்டு மே மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் இரண்டு ஆய்வுகளை நடத்தியது. இதில் கரோனா தடுப்பூசி, திடீர் மரணங்களை அதிகரிக்கவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டது.

இளைஞர்கள் இடையே விவரிக்க முடியாத திடீர் மரணங்களுக்கான ஆய்வில் புதுடில்லி எய்ம்ஸ் மருத்துமனையும் இறங்கியது. இதில் இளைஞர்களின் திடீர் மரணத்துக்கு மாரடைப்பு காரணமாக இருந்தது தெரியவந்தது. பலரது மரணங்களுக்கு மரபியல் மாற்றம் காரணமாக இருக்கலாம் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டுகளில் நடைபெற்ற மரணங்களுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் கண்டறியப்படவில்லை என முதல்கட்ட தரவுகள் தெரிவிக் கின்றன. ஆய்வு முடிந்த பின்பே இறுதி முடிவுகள் வெளியிடப்படும்.

இந்த இரண்டு ஆய்வுகளும் இளைஞர்களிடையே ஏற்பட்ட திடீர் மரணங்களுக்கான தெளிவான புரிதலை வழங்கியுள்ளது. மேலும், கரோனா தடுப்பூசி உயிரிழப்பை அதிகரிக்கவில்லை என்பது உறுதி செய்துள்ளது. ஆரோக்கிய பிரச்சினைகள், மரபியல் நோய்கள் மற்றும் அபாயகரமான வாழ்க்கையை முறையை தேர்வு செய்தது திடீர் மரணங்களுக்கு காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவறான தகவல்

இந்த மரணங்களுடன் கரோனா ஊசியை தொடர்பு படுத்துவது, ஆதாரம் இன்றி மக்களை தவறாக வழிநடத்துவதற்கு எதிராக அறிவியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தவறான தகவல்களை தெரிவிப்பது, மக்கள் தடுப்பூசி போட தயங்குவதற்கு வழிவகுக்கும் எனவும், பொது சுகாதார முயற்சிகளுக்கு தீங்கு விளைவிக்கும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதை யடுத்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்த விவகாரம் தொடர்பாக பல தேசிய முகமைகள் விசாரணையில் ஈடுபட்டன. இறுதியில் நாட்டில் பயன்படுத்தப்பட்ட கரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பானவை மற்றும் பயனுள்ளவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பக்க விளைவுகள் மிகவும் அரிதானவை. திடீர் மாரடைப்பு மரணங்கள் மரபியல், வாழ்கைமுறை, ஏற்கெனவே இருந்த உடல்நல பாதிப்புகள் மற்றும் கரோனா பாதிப்புக்கு பிந்தைய சிக்கல்கள் ஆகியவை காரணமாக இருக்கலாம்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *