லக்னோ, ஜூலை 3 உத்தரப்பிரதேசத்தில் காவடி யாத்திரைப் பாதையில் ஹிந்துக்கள் அல்லாதவர்கள் கடைகள் அமைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சந்தேகத்தின் பேரில், கடையில் உள்ள ஊழியர்களின் ஆடையை அவிழ்த்த அவலமும் நடந்துள்ளது.
யாத்திரை
உத்தரப்பிரதேசத்தில் ஆளும் பி.ஜே.பி. அரசின் மதவெறிக்குச் சான்றாக நடந்துள்ள இந்த நிகழ்வுபற்றிய விவரம் வருமாறு:
வட மாநிலங்களில் ஜூலை 11 ஆம் தேதிமுதல் ‘ஸரவண’ மாதம் தொடங்குகிறது. அன்று முதல் ஜூலை 24 ஆம் தேதிவரை 13 நாள்களுக்கு சிவ பக்தர்கள், சிவன் கோவில்களுக்குக் காவடி எடுத்து, பாத யாத்திரையாகச் செல்வது வழக்கமாம். அந்தப் பாதை யில் கடைகள் அமைக்கப்பட்டு இருக்கும். ஹிந்துக்கள் அல்லாதவர்கள் அங்கே கடைகளை அமைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது அங்கு கடைகள் அமைத்திருப்பவர்கள், கடைக்கு முன்னதாக உரிமையாளரின் பெயர், கைபேசி எண் போன்ற விவரங்களை எழுதி வைக்கவேண்டும் என்றும், பக்தர்கள் யாத்திரைச் செல்லும் பாதை யில் இறைச்சிக் கடைகள் வைக்கக் கூடாது என்றும் கட்டுப்பாடு விதித்து முதலமைச்சர் ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முசாபர் நகரில் ‘யோகா சாதனா’ என்ற ஆசிரமத்தை யஷ்வீர் மகராஜ் என்ற துறவி நடத்தி வருகிறார். காவடி யாத்திரை செல்லும் பாதைகளில் இதுபோன்ற கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டும் என்று அவர் ஏற்கெனவே அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
ஊழியரின் ஆடையை அவிழ்த்து சோதனை
கடந்த 2 நாள்களுக்கு முன் டில்லி – டேராடூன் நெடுஞ்சாலையில் உள்ள பண்டிட் வைஷ்னோவ் தாபாவில் யோகா சாதனாவை சேர்ந்த சீடர்கள் சோதனை நடத்தினர். ஆதார் அட்டையின்படி ஒரு கடையின் உரிமையாளர் பெயர் முஸ்லிம் என்று தெரிய வந்துள்ளது. அதன்பின்னர் ஊழியர்களின் கீழாடையை அவிழ்த்து சீடர்கள் பார்த்துள்ளனர்.
இதுதொடர்பான காட்சிப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து யஷ்வீர் மகராஜின் 6 சீடர்களிடம் விளக்கம் கேட்டு முசாபர்நகர் புதுமண்டி காவல்துறையினர் தாக்கீது அனுப்பியுள்ளனர்.
இதுகுறித்து யஷ்வீர் மகராஜ் வெளி யிட்டுள்ள அறிக்கையில், ‘‘காவல்துறை யினரின் தாக்கீதுக்கு சீடர்கள் விளக்கம் அளிப்பார்கள். அவர்கள் மீது வழக்கு தொடுக்க முயன்றால், கடுமையாக எதிர்ப்போம். காவடி சுமக்கும் பக்தர்கள் வாங்கும் உணவில் எச்சில் துப்பியதால்தான் இந்த நடவடிக்கை. காவல்துறையி னரின் தாக்கீதுக்கு அஞ்ச மாட்டோம்’’ என்று தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய போதனையாளர் நபிகள் பற்றி 2015 ஆம் ஆண்டு விமர்சனம் செய்ததால் யஷ்வீர் பிரபலமானார். இதுதொடர்பான வழக்கில் அவர் ஏழரை மாதம் சிறை தண்டனை அனுபவித்தார். அப்போது இருந்த சமாஜ்வாதி ஆட்சியில் யஷ்வீர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீ்ழ் வழக்குப் போடப்பட்டது.