ஜாதி ஒழிப்பு – சுயமரியாதைச் சுடரொளி ஆனைமலை தோழர் ஏ.என்.நரசிம்மன் நினைவு நாள் (02.07.1967)

viduthalai
3 Min Read

தன்னுடைய இளைய வயதிலேயே தந்தை பெரியாரின் சமூக மறுமலர்ச்சி இயக்கமான திராவிடர் கழகத்தில் இணைந்து பெரியாரின் பெரும்பணிக்குத் துணை நின்றார். இவருடைய எளிமையும் பழகும் தன்மையும் ஒட்டி இவருக்கு உற்ற துணையாக ஏ.எம்.திருமூர்த்தி, ஏ.எம்.திருவேங்கடம், நஞ்சப்பன், கே.காளிமுத்து, காதர் மைதீன், முகமது அனிபா, ஆறுமுகம் ஆகிய எட்டு தோழர்களுடன் இணைந்து அனைத்துக் கிராமங்களிலும் பெரியாரின் கொள்கைகளை, துண்டறிக்கைகள், தெருமுனைக் கூட்டங்கள் வாயிலாகப் பரப்புரை பணியையும், வாரம்தோறும் தாழ்த்தப்பட்ட மக்களின் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள குழந்தைகளைத் திரட்டி ஊர்வலமாக ஜாதி, தீண்டாமை ஒழிப்புப் பாடல்களைப் பாடிக் கொண்டும் மக்கள் மத்தியில் பரப்புரை செய்து கொண்டும் ஆற்றங்கரையை அடைவர். அங்கு அவர்களுக்குத் தோழர்களின் உதவியோடு முடி திருத்தி, குளிக்கச் செய்து புதிய ஆடைகளை வழங்கி, தீண்டாமைக்கு எதிராகப் போராடினார். இதன் காரணமாக ஆனைமலையில் இரட்டைக் குவளை முறை உள்ளிட்ட தீண்டாமை வன் செயல்கள் 1960 க்கு முன்பே மறைந்து சமத்துவம் மலர்ந்தது.

தந்தை பெரியாரின் நட்பால்  பல்வேறு ஜாதி ஒழிப்புப் பணிகளில் தனித்தும் ஒத்த கருத்து உடையவர்களுடனும் தோழர்கள் இணைந்து பல புரட்சிகரமான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தார். அதில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும்  பகுதியில் பைமாசி நஞ்சப்ப கவுண்டருக்குச் சேர்ந்த காலியிடம் இருந்தது. அதில் தாழ்த்தப்பட்ட மக்கள் பல குடும்பங்கள் குடிசைகள் போட்டுக் குடியிருந்து வந்தார்கள். எதிர்பாராமல் அவை தீப்பிடித்து எரிந்துவிட்டன. தீப்பிடித்த இடம் வேண்டாம் என்று நஞ்சப்பகவுண்டர் அவர்கள் அதை விலைக்குக் கொடுக்கலானார்.

முதலில் தீ விபத்தில் குடிசைகளை இழந்த தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருந்த இடத்தின் உரிமையாளர் பைமாசி நஞ்சப்பகவுண்டர் விற்க முன் வந்த அந்த இடத்தைத் தானே முழுத் தொகையும் கொடுத்து அந்த இடத்தை வாங்கி – அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பிரித்துக் கொடுத்தார். அந்த இடத்தில் குடியிருப்புகளைச் சொந்தப் பணத்தில் ஏற்பாடு செய்து கொடுத்தார். அந்த இடங்களை அவர்களுக்கே சொந்த மாக்கினார்.

தமிழ்நாட்டின் முதல் சமத்துவக் குடியிருப்பு

இத்தருணத்தில் தோழர் பெரியார் அவர்கள், தோழர் நரசிம்மனுக்குச் சில அறிவுரைகள் வழங்கி அதனைச் செயல்படுத்துவதின் மூலம் உங்கள் பெயரும் நமது கழகத்தின் கொள்கைகளும் மேலும் வலுவடைந்து மக்கள் உங்களை காலாகாலத்திற்கும் உங்கள் மறைவிற்குப் பிறகும் உங்கள் பெயர் நிலைத்து நிற்கும் என்று கூறினார்.

1) உங்களிடம் உள்ள நிலங்களின் ஒரு பகுதியை அல்லது புதியதாக வாங்கியோ உங்கள் பகுதியில் உள்ள தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்குப் பகிர்ந்து கொடுங்கள்.

2) உங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி உங்கள் பேரூராட்சியில் அரசு நிலத்தைச் சகல தரப்பு மக்களையும் உள்ளடக்கிய சமத்துவக் குடியிருப்பு ஒன்றை அமைத்துத் தாருங்கள்.

3) உங்கள் பேரூராட்சியில் ஒரு தாழ்த்தப் பட்டவரைப் பேரூராட்சித் தலைவர் ஆகக் கொண்டுவர முயற்சி செய்யுங்கள் என்றும் கூறினார்.

தந்தை பெரியாரின் மூன்றாவது ஆலோசனையான ஆனைமலை பேரூராட்சிக்கு மன்றத் தலைவர் பொறுப்பில் ஒரு தாழ்த்தப்பட்டவரை நியமிக்க முன்முயற்சி எடுத்தபோது அப்பதவிக்கு உரிய இடம் 1948 இல் பொதுத்தொகுதியாக இருந்தது. அந்தத் தேர்தலில் தோழர் நரசிம்மனின் உறவினரான வெங்கிடுகிருஷ்ணன் போட்டியிட முடிவு செய்து மனுத்தாக்கலும் செய்திருந்தார். இந்நிலையில் தனது உறவினரின் வேட்பு மனுவைத் திரும்பப் பெறச்செய்து தனது முழு செல்வாக்கையும், மக்கள் ஆதரவையும் ஒன்று திரட்டி, தன்னுடன் காந்தி நிர்மாணப் பணிகளில் உடன் பணியாற்றிய தாழ்த்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தோழர் ஏ.எம்.மாசாணி என்பவரை நிறுத்தி வெற்றி பெறச் செய்தார்.

இந்தத் தோழர் ஏ.எம்.மாசாணி அவர்கள்தான் இந்தியாவிலேயே முதல் தாழ்த்தப்பட்ட பேரூராட்சி மன்றத் தலைவராகத் தேர்வானவர் ஆவார். தோழர் பெரியாரின் ஆலோசனைகளையும், தோழர் நரசிம்மனின் செயல்பாடுமே இந்தச் சரித்திரச் சாதனைக்குக் காரணமாகும். அப்போது தமிழக சட்டமன்றத் தலைவராக இருந்த திரு.ஜே.சண்முகம் பிள்ளை அவர்களை, ஆனைமலைக்கு அழைத்து வந்து தன் வீட்டில் தங்க வைத்து ஆனைமலையில் பல்வேறு பகுதிகளில் சமபந்தி விருந்து நடத்தி, ஜாதி தீண்டாமைக்கு எதிராகப் பரப்புரை நிகழ்த்தினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *