பிஜேபி ஆளும் உத்தரப்பிரதேசம், ஒடிசா மாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்படுவதாகக் கூறப்படும் மதிய உணவின் தரத்தை அறிந்தால் இப்படிக் கூடவா சற்றும் மனிதாபிமானமற்ற முறையில் ஆட்சி நடத்த முடியும் என்ற கேள்வி நிச்சயமாக எழத்தான் செய்யும்.
முதல் முறையாக ஒடிசாவில் ஆட்சியில் அமர்ந்த பாஜக அந்த மாநிலத்தையே கந்தலாக்கி வருகிறது. இந்தவகையில் ஒடிசாவில் பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்படும் காணொலி சமீபத்தில் வெளியானது.
அதில் குழந்தைகள் சாப்பாட்டுத் தட்டோடு உட்கார்ந்துள்ளனர். தட்டின் ஓரத்தில் இரண்டு கவளம் அளவில் மிகக் குறைவாக சோறு போடப்பட்டுள்ளது. அதை விடக் கொடூரம் குழம்பு என்ற பெயரில் சுடுதண்ணீரில் மஞ்சள் மற்றும் மிளகாய் கரைத்து சோற்றோடு சேர்த்து சாப்பிடச் சொல்கின்றனர்.
2019 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மிர்சாபூர் என்ற ஊரில் உள்ள பள்ளி ஒன்றில் மதிய உணவிற்கு காய்ந்த ரொட்டி மற்றும் உப்பு மட்டுமே மதிய உணவாக கொடுத்தனர். இந்த கொடூரத்தைப் படம் பிடித்து வெளியிட்ட ஊடகவியாலாளர் மீது பள்ளி நிர்வாகம் புகார் அளித்ததன் பேரில் மாநில காவல்துறை ஊடகவியலாளரை கைது செய்து சிறையில் அடைத்தது மறக்க முடியாத, மன்னிக்கப்பட முடியாத குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.
இப்பொழுது பிஜேபி ஆளும் ஒடிசா மாநிலத்திலோ மாணவர்களுக்கு வேகாத சோறும், சுடுதண்ணீரில் மஞ்சளும், மிளகாய்த் தூளும் கலந்து தரப்படுகின்றன.
1920 ஆகஸ்டு 16 அன்று நீதிக்கட்சித் தலைவரும், சென்னை மாநகராட்சித் தலைவருமான பிட்டி தியாகராயர் சென்னை ஆயிரம் விளக்கு மாநகராட்சிப் பள்ளியில் உலகிலேயே முதன் முதலாக மதிய உணவுத் திட்டத்தைத் தொடங்கினார். பச்சை தமிழர் காமராசர் ஆட்சியிலும், அதன் பின் திராவிட இயக்க ஆட்சியில் சத்துணவாகப் பரிணமித்து சமூகநீதிக்கான சரித்திர நாயகரான முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான இந்தத் ‘திராவிட மாடல்’ ஆட்சியில் காலை உணவும் அளிக்கப்படுகிறது.
திராவிட மாடல் ஆட்சியின் இந்தத் திட்டம் உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
‘ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை’ என்ற பழமொழி போல தமிழ்நாட்டில் ‘திராவிட மாடல்’ ஆட்சியால் மட்டும்தான் மாணவர்களுக்கு உணவு அளிக்க முடியுமா? என்று ஒப்புக்கு ஒரு கேள்வி கேட்டு வேகாத சோற்றில் சுடுதண்ணீரில் மஞ்சளையும், மிளகாய்த் தூளையும் கலந்து பிஜேபி ஆளும் மாநிலங்களில் மாணவர்களுக்கு அளிக்கப்படுவது கொடுமையிலும் கொடுமை! அவலத்திலும் அவலம்!!
தமிழ்நாட்டில் சத்துள்ள பழங்கள், காய்கறிகள், முட்டைகள் போன்ற சத்தான உணவுகள் அளிக்கப்படு கின்றன.
இதன் காரணமாக மாணவர்கள் இடைநிற்றல் என்பது சுழியம் என்கிற அளவுக்குச் சாதனையின் உச்சத்தை எட்டியுள்ளது. ‘ஊட்டச்சத்துக் குறைவு’ என்ற நிலை ஒழிக்கப்படுகிறது. பெற்றோர்களின் நிதிச் சுமை குறைகிறது. படிக்கும் ஆர்வம் ஊற்றெடுக்கிறது.
இந்தக் காரணங்களால் தான் இந்தியாவிேலயே கல்வியில் சிறந்த மாநிலமாகத் தமிழ்நாடு கோலோச்சுகிறது.
‘கான மயிலாடக் கண்டிருந்த வான் கோழி’ ஆட நினைத்ததுபோல தமிழ்நாட்டைப் பார்த்து எதுவும் கற்றுக் கொள்ளாத பிஜேபி ஆளும் மாநிலங்களின் ஆட்சியைக் கண்டு நகைக்கத்தான் வேண்டும்.
‘திராவிட மாடல்’ ஆட்சிக்கும், மதவாத ஆட்சிக்கும் உள்ள வேறுபாடுகள் புரிகிறதா?