ஒன்றிய பா.ஜ.க. அரசு தமிழ்நாட்டை வன்மத்தோடு பார்க்கிறது அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு

4 Min Read

அருப்புக்கோட்டை, ஜூலை 2- ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டை வன்மத்தோடு பார்க்கிறது என அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம் சாட்டினார். ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம் தொடங்கப்பட்ட நிலையில் அருப்புக்கோட்டையில் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.  அப்போது அவர் கூறியதாவது:

திமுக ஆட்சியின் சாதனைகள், நல்ல திட்டங்களை மக்களிடம் எடுத்துக் கூற உள்ளோம். திமுக உறுப்பினர் சேர்க்கை மட்டுமல்ல, தமிழ் மண், மானத்தை காக்கக் கூடிய இயக்கமாக ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம் இருக்கும்.

தமிழ்நாட்டின் அனைத்து குடும்பங்களையும் திமுகவினர் நேரில் சந்தித்து ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தில் பங்கேற்குமாறு அழைப்புவிடுப்பர். ‘ஓரணியில் தமிழ்நாடு’ முன்னெடுப்பில் இளைஞர்களும், பொதுமக்களும் ஏராளமானோர் பங்கேற்கவுள்ளனர்.

பூத் டிஜிட்டல் ஏஜெண்ட், வாக்குச்சாவடி முகவர்கள் ‘ஓரணியில் தமிழ்நாடு’ பணியில் ஈடுபடவுள்ளனர். ‘ஓரணியில் தமிழ்நாடு’ –  தமிழ்நாட்டை பாதுகாப்பதற்கான முன்னெடுப்பாகும். ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தில் குறைந்தபட்சம் 1 லட்சம் குடும்பங்களை ஒன்றிணைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

‘ஓரணியில் தமிழ்நாடு’ திமுகவில் உறுப்பினர் சேர்க்கை மட்டுமல்லாமல், தேர்தல் பரப்புரையாகவும் அமையும். கீழடி அகழ்வாராய்ச்சி முடிவுகளை வெளியிடாமல் ஒன்றிய அரசு காலம் தாழ்த்துகிறது. கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படைகளை மதிக்காமல் ஒன்றிய அரசு செயல்படுகிறது. ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டை வன்மத்தோடு பார்க்கிறது என்று கூறினார்.

குளிர்சாதன மின்சாரப் பேருந்துகள் இயங்கும் இடங்கள் அறிவிப்பு

சென்னை, ஜூலை 2- சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்பட உள்ள மின்சார தாழ்தள பேருந்துகளில், குளிர்சாதனப் பேருந்துகள் எங்கெங்கு இருந்து இயக்கப்பட உள்ளன என்பது குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மின்சார தாழ்தளப் பேருந்துகள்

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகமானது எரி பொருள் செலவை கட்டுப்படுத்தும் வகையிலும், காற்று மாசுபாட்டை கணிசமாக குறைக்கும் வகையிலும், உலக வங்கி உதவியுடன் மொத்த விலை ஒப்பந்தத்தின்படி (ஜி. சி.சி.) 1,225 மின்சார தாழ்தள பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளது.

அதில், முதல் கட்டமாக 625கான ஒப்பந்தமானது அசோக் லேலண்ட் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஓம் குளோபல் மொபிலிட்டி நிறுவனத்துடன் போடப்பட்டு, 120 மின்சார தாழ்தள பேருந்துகளுக்கான சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (30.6.2025) வியாசர்பாடி பணிமனையில் தொடங்கி வைத்தார்.

ஏ.சி. பேருந்துகள்

முதல் கட்டமாக இயக்கப்பட உள்ள 625 மின்சார தாழ்தள பேருந்துகளில் 225 ஏ.சி. பேருந்துகள் ஆகும். இவை பெரும்பாக்கத்தில் இருந்து 55, பல்லவன் சாலையில் அமைந்துள்ள மத்திய பணிமனையில் இருந்து 100, தண்டையார் பேட்டை-1 பணிமனையில் இருந்து 25, பூந்தமல்லி பணிமனையில் இருந்து 45 ஏ.சி. பேருந்துகள் என பிரித்து இயக்கப்பட உள்ளன.

இதேபோல, 2ஆவது கட்டமாக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு வரும் 600 மின்சார தாழ்தள பேருந்துகளில் 400 ஏ.சி. பேருந்துகளும், 200 ஏ.சி. அல்லாத பேருந்துகளும் அடங்கும். இந்த 400 ஏ.சி. பேருந்துகளும் ஆலந்தூர் பணிமனையில் இருந்து 80, மத்திய பணிமனை 2இல் இருந்து 80, பாடியநல்லூர் பணிமனையில் இருந்து 40, பெரம்பூர் பணிமனையில் இருந்து 80, ஆவடியில் இருந்து 60, அய்யப்பன் தாங்கலில் இருந்து 60 ஏ.சி. பேருந்துகள் என்று பிரித்து இயக்கப்பட உள்ளன. மேற்கண்ட தகவல்களை  சென்னை  மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்து உள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2024-2025 நிதி ஆண்டில்

ரூ.63,339 கோடி வரி வசூல்

ஜிஎஸ்டி முதன்மை தலைமை ஆணையர் தகவல்

சென்னை, ஜூலை 2- தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2024-2025 நிதியாண்டில் ரூ.63,339 கோடி ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான ஜிஎஸ்டி முதன்மை தலைமை ஆணையா் ஏ.ஆா்.எஸ்.குமார் தெரிவித்தார்.

சரக்கு மற்றும் சேவை வரி நாள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மத்திய சரக்கு மற்றும் சேவை வரி மண்டலம் சார்பில் சென்னை கலைவாணா் அரங்கில் நேற்று (1.7.2025) நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான ஜிஎஸ்டி முதன்மை தலைமை ஆணையா் ஏ.ஆா்.எஸ்.குமார் தலைமை வகித்துப் பேசியதாவது:

ரூ.63,339 கோடி

‘தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2024-2025 நிதியாண்டில் ரூ.63,339 கோடி ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டுள்ளது. இது 2023-2024 நிதியாண்டைவிட (ரூ.57,987கோடி) 9.23 சதவீதம் அதிகமாகும். அதேபோல் நிகழ் நிதியாண்டில் மே மாதம் வரை ரூ.11,209 கோடி ஜிஎஸ்டி வசூல் செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டைவிட 13.5 சதவீதம் அதிகம் என்றார் அவா்.

முன்னதாக, அதிக வரி செலுத்திய வணிகா்கள், சிறப்பாக பணிபுரிந்த சரக்கு மற்றும் சேவை வரி அலுவலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.  நிகழ்ச்சியில் கார்போரண்டம் யுனிவா்சல் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் ஸ்ரீதரன் ரங்கராஜன், ஜிஎஸ்டி வடசென்னை பிரிவு தலைமை ஆணையா் ராம்நாத் சிறீனிவாச நாயக், ஜிஎஸ்டி முன்னாள் முதன்மை ஆணையா் ராம் நிவாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனா்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *