புதுடில்லி, ஜூலை 2 பீகாரில் உள்ள சில கிராமங்களில் பார்ப்பனர்களை வைத்துத் திருமணம் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சியும் நடத்தத் தடை விதித்து அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இது, உத்தரப் பிரதேசத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கதாகலாட்சேபகர் மீதானத் தாக்குதல் எதிரொலியாகக் கருதப்படுகிறது.
பார்ப்பனர்களுக்குத் தடை
பீகார் மாநிலம், மோதிஹாரி மாவட்டத்தின் அடாபூரிலுள்ள திகுலியா கிராமத்தின் பல இடங்களில் அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. அதில், ‘‘இந்தக் கிராமத்தில் திருமணம் உள்ளிட்ட சடங்குகள் செய்வதற்குப் பார்ப்பனர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது! பிடிபட்டால், அவர்களை அழைத்த குடும்பத்தினர் பஞ்சாயத்தால் தண்டிக்கப்படுவீர்கள்’’ என எழுதப்பட்டுள்ளது.
பார்ப்பனச் சமூகத்தின் அர்ச்சகர்கள் மற்றும் திருமணம் உள்ளிட்ட சடங்குகளை செய்பவர்களுக்கு எதிரான இந்த முடிவு அடாபூரின் திகுலியா கிராமப் பஞ்சாயத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இது, உ.பி.யில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கதாகலாட்சேபகர் முகுந்தமணி சிங் மற்றும் அவரது உதவியாளர் சந்த் குமார் தாக்கப்பட்டதன் எதிரொலியாகும்
உத்தரப்பிரதேசத்தில் கதாகலாட்சேபகர் முகுந்த்மணி சிங் மற்றும் அவரது உதவியாளர் சந்த் குமார் தாக்கப்பட்டனர். இதனிடையே, முகுந்த்மணியின் தலைமுடியை மொட்டையடித்த கும்பலில் 4 இளைஞர்கள் கைதாகியுள்ளனர். பார்ப்பனர் அல்லாத முகுந்தமணி யாதவ் கதாகலாட்சேபம் செய்யக் கூடாது என்ற புகார், அந்தத் தாக்குதலுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இதனை எதிர்க்கட்சியான சமாஜ் வாதியின் தலைவர் அகிலேஷ் உள்ளிட்ட பலரும் கண்டித்துள்ளனர்.
பார்ப்பனரல்லாதோர் கதாகலாட்சேபம் செய்வதன் மீது ஆதரவாகவும், எதிராகவும் ஆன்மிகவாதிகளும் கருத்துகளைக் கூறியிருந்தனர்.
உத்தரப்பிரதேச சமூக அரசியல் பிரச்சினையாக உருவெடுத்த இச்சம்பவத்தின் தாக்கம், பீகாரிலும் பிரதிபலித்துள்ளது. உத்தரப்பிரதேச எட்டாவா நிகழ்விற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், திகுலியா கிராம வாசிகள் அறிவிப்புப் பலகை வைத்துள்ளனர். திகுலியா கிராமத்தின் நுழைவுப் பகுதியில் இந்த அறிவிப்புப் பலகை எழுதி வைக்கப்பட்டுள்ளது. மேலும், கிராமத்தில் பல மின் கம்பங்களிலும் பார்ப்பனப் பண்டிதர், பூசாரிகளுக்கு எதிரான இதே வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.
இதை விட ஒரு படி அதிகமாக, பல கிராமவாசிகள் தங்கள் வீடுகளுக்கு முன்புறத்திலும் இதுபோன்ற அறிவிப்புகளை வைத்துள்ளனர். திகுலியா கிராமத்தில் பெரும்பாலான மக்கள் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர். இந்தக் கிராமத்தில் பார்ப்பன மக்கள் வசிக்கவில்லை. இருப்பினும், பார்ப்பன மக்கள் வசிக்கும் பல கிராமங்கள் அருகிலேயே உள்ளன.
அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்ட பிறகு, பார்ப்பனர்கள் திகுலியா கிரமத்திற்குள் வருவதை நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.