இந்தியாவில் இறைச்சி உணவு உண்பவர்கள் 74 விழுக்காட்டினர்

Viduthalai

புதுடில்லி, ஜூலை 1- மரக்கறி உணவுகள் இந்தியாவில் அதிகம் இருப்பது போலச் சொல்வார்கள். ஆனால் உண்மையில் நமது நாட்டில் இறைச்சி உணவுகளைச் சாப்பிடு வோரின் எண்ணிக்கையே மிக அதிகமாக இருக்கிறது. தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு 4 தரவுகளின்படி, இந்தியாவில் 70 சதவீதப் பெண்கள் மற்றும் 78 சதவீத ஆண்கள். ஆக, சராசரி 74 சதவீதத்தினர் இறைச்சி உண்பவர்களாகவே உள்ளனர்.

மரக்கறி உணவு

அதாவது மகாராட்டிராவில் தொடங்கி மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மாநிலங்களில் மரக்கறிஉணவு சாப்பிடுவோர் ஒப்பீட்டளவில் அதிகம் இருக்கிறார்கள்.

உதாரணமாக ராஜஸ்தானில் அதிகபட்சமாக மக்கள் தொகையில் 75% மரக்கறி உணவு சாப்பிடுவோராக உள்ளனர். அதேபோல அரியானாவில் இந்த எண்ணிக்கை 70%ஆக இருக்கிறது. பஞ்சாப்பில் 67%, குஜராத்தில் 61%ஆக இருக்கிறது.

மகாராட்டிராவில் 40%, மத்தியப் பிரதேசத்தில் 51%, உத்தரப் பிரதேசத்தில் 47%ஆக மரக்கறி உணவு உண்பவர்கள் உள்ளனர்.

இறைச்சி உணவு எங்கு அதிகம்?

குறிப்பாக நாட்டிலேயே தெலங்கானாவில் தான் அதன் மக்கள்தொகையில் குறைந்தபட்சம், அதாவது 1.3% மட்டும் மரக்கறி  உண்பவர்கள் உள்ளனர். அதன் பிறகு ஆந்திராவில் 1.7%, மேற்கு வங்கத்தில் 1.4%ஆகச் மரக்கறி சாப்பிடுபவர்கள் எண்ணிக்கை. நாகாலாந்தில் இவர்களின் எண்ணிக்கை அதன் மக்கள் தொகையில் 2%ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் அது 2.3%ஆக இருக்கிறது. தொடர்ந்து கேரளாவில் அது 3%ஆக மட்டும் இருக்கிறது.

அதாவது தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்கம், நாகாலாந்து, தமிழ்நாடு, ஒடிசா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் இறைச்சி சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை 97 விழுக்காட்டுக்கும் அதிகமாக உள்ளது.

அதிகரிக்கும் இறைச்சி நுகர்வு

பொதுவாகவே வருமானம் அதிகரிக்கும்போது இந்தியாவில் இறைச்சி நுகர்வு அதிகரித்துள்ளது. 2020ஆம் ஆண்டில் இந்தியா ஆறு மில்லியன் டன் இறைச்சியை உட்கொண்டதாக வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.

இந்தியா மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதி அளவு மக்கள் வாரத்திற்கு ஒரு முறையாவது இறைச்சி உணவு சாப்பிடுகிறார்கள். இதில் மேற்கு வங்கம் மற்றும் கேரளா உட்பட ஒன்பது மாநிலங்களில் மட்டுமே இறைச்சி நுகர்வுக்கு எந்தத் தடையும் இல்லை. மற்ற பெரும்பாலான மாநிலங்களில் இறைச்சியின் வகையைப் பொறுத்து சில கட்டுப்பாடுகள் உள்ளன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *