மதமொழிப்புத் தீர்மானம்
விருதுநகரில் கூடிய மூன்றாவது சுயமரியாதை மகாநாட்டு நடவடிக்கைகள் விஷயமாகவும், மகாநாடுகளின் வரவேற்புத் தலைவர்கள், தலைவர்கள் ஆகியவர்கள் உபன்யாசங்களைப் பற்றியும் சென்ற வாரம் எடுத்து எழுதியிருந்தோம். மற்றும் அங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைப்பற்றி மறுமுறை எழுதுவதாகவும் குறிப்பிட்டிருந் தோம். ஆகவே அங்கு நிறைவேற்றப்பட்ட சில தீர்மானங்களைப்பற்றி இதில் ஆராய்வோம்.
“மனிதத் தன்மையைத் தடைப்படுத்துவதற்கு மதங்களின் பேரால் உள்ள பழக்க வழக்கங்கள் காரணமாயிருப்பதாலும், மதங்கள் ஒழியாமல் சகோதரத்தன்மை வளராததலினாலும் எல்லா மதங்களும் ஒழிந்து போகவேண்டுமென்று இம்மகாநாடு தீர்மானிக்கின்றது’’ என்பது முதல் தீர்மானமாகும்.
இத்தீர்மானமானது இந்தியாவில் உள்ள தேசியவாதிகள் என்பவர்கள் யாருக்குமே விரோதமானதாகும் என்பதோடு, தேசியத் தலைவர்களுக்கும், தேசியத் தொண்டர்களுக்கும் மிக மிக விரோதமானதாகும்.
மற்றும், “இந்தியத் தொழிலாளர்கள் தலைவர் களான’’ திரு. கிரி, திரு. சிவராவ் போன்றாருக்கும், சமதர்மத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கின்ற “நவஜவான் பாரத் சபை வீரர்கள்’’ என்று சொல்லிக் கொள்ளும் திரு. போஸ் கூட்டத்தாருக்கும், இந்தியாவில் பூரண சுயேச்சையையும் போல்ஸ் விஷத்தையும் பற்றிப் பேசிப் “பொது உடைமைக் காரர்’’ என்று சொல்லிக்கொள்ளும் திரு. ஜவஹர்லால் கூட்டத்தாருக்கும் இத்தீர்மானம் விரோதமானதேயாகும். இதுமாத்திரமல்லாமல் மற்றபடி அஹிம்சா தர்மத்தையும், இராம இராஜியத்தையும் பற்றிப் பேசி வருணாசிரமத்தில் பூரண நம்பிக்கைவைத்து இருக்கும் ஸ்ரீமத்பகவத்கீதை உபாசகராகிய “மகாத்மா’’ காந்திக்கும் அவரது கூட்டத்தாராகிய திரு. இராஜகோபாலாச்சாரி போன்றாருக்கும் விரோதமானதும், காதால் கேட்பதற்கே சகிக்க முடியாத அளவு கர்ண கடூரமானதுமாகும்.
இவை மாத்திரமல்லாமல், சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர்களிலேயே சிலருக்கு இதுபிடிக்காத தீர்மானமாகும் என்பதிலும் உண்மை இல்லாமல் போகாது.
ஆகவே இந்தியாவின் ஜனத்தொகையில் முஸ்ஸீம், கிறிஸ்தவர்கள் முதலிய அந்நிய மதக்காரர்கள் என்பவர்கள் உள்பட 100-க்கு 99 பேர்களுக்கும், இந்தியாவின் பொதுநல ஸ்தாபனங்கள் என்பவைகளில் 100-க்கு 99 7/8 ஸ்தாபனங்களுக்கும், உலக மனித சமுகத்திலேயே 100க்கு 80 பேர்களுக்கும் திருப்தியளிக்காததும், விரோதமானதுமான தீர்மானமாகும்.
இத்தீர்மானத்திற்கு இத்தனை வித எதிர்ப்புகளும், அதிருப்திகளும் இருக்கக் காரணமென்ன வென்று பார்ப்போமானால், மனிதனுடைய அறிவைக் கெடுக்கும் மயக்கம்தரும் போதை வஸ்துக்களைப் போலவே மதத்தின் தத்துவங்களும் இருக்கின்றபடியால், அதில் ஈடுபட்ட எவருக்கும் மத போதை ஏற்பட்டு, பகுத்தறிவு மழுங்கி, மூடபக்தியும், குருட்டு நம்பிக்கையும் ஏற்பட்டு, சுயம் என்னும் சுவாதீனத்தை இழக்கவேண்டியவர்களாய் விடுகின்றார்கள் என்பதேயாகும்.
உதாரணமாக, இந்துமதம் என்பதைப்பற்றியே முதலில் எடுத்துக் கொண்டோமானால் அம்மதத்தி னால் மேன்மையடைகின்றவர்களும், மதத்தின் பயனாய் சோம்பேறி களாகவே இருந்து பாடுபடாமல் , ஊரான் உழைப்பில் வயிற்றை நிரப்பி மேன்மையாய் வாழுகின்றவர்களும் இந்துமத்தைக் காப்பாற்ற, நிலை நிறுத்தப்பாடுபட வேண்டியதும் அதற்கு எதிரிடையாய் இருப்பவர்கள் மீதும், அதை ஒழிக்க முயற்சிப்பவர்கள் மீதும் ஆத்திரப்பட்டு, மதம் ஒழிக்கப்படாமல் இருக்கத் தடைக் கல்லாய்-முட்டுக்கட்டையாய் இருக்க வேண்டியதும் இயற்கை என்று வைத்துக் கொண்டாலும், இந்து மதத்தின் காரணமாய் ஈன ஜாதியாய், இழிகுலமாய், அடிமையாய், வேசி மகனாய், கீழ் ஜாதியாய்க் கருதப்படுகின்ற மக்களும் சரீரத்தைப் பிழிந்து பாடுபட்டுப் பாட்டின் பலனைச் சோம்பேறிகளுக்கும், சூழ்ச்சிக்காரர்களுக்கும் கொள்ளை கொடுத்துவிட்டு நாயினுங் கீழாய் , மலந்தின்னும் நாய்க்கிருக்கும் சுதந்திரத்திற்குக் கூட உரிமையில்லாத ஜந்துவாய் இருந்து கொண்டிருக்கின்ற ‘அசையும் பிணங்களான மக்கள்’ தங்களை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய இந்து மதத்தைக் காப்பாற்ற முயற்சிக்கின்றார்கள் – ஒழிக்க முயற்சிக்கின்றவர்களையும் எதிர்க்கின்றார்கள் என்றால் மதங்களால் ஏற்பட்ட மதியீனத்திற்கும், மானமற்ற தன்மைக்கும் வேறு என்ன உதாரணங் கூறக் கூடும் என்பது நமக்கு விளங்கவில்லை.
கள்குடி வெறியன், சாராயக்குடி வெறியன் ஆகியவர்களால் நாட்டுக்கு, மக்களுக்கு, மனித வாழ்க்கைக்கு, மனிதத் தன்மைக்கு ஏற்படும் தொல்லையைவிட, கேட்டைவிட மத வெறியர்களால் ஏற்படும் தொல்லையும், கேடும் அளவிடமுடியாத அதிகமென்றே சொல்லுவோம்.
இன்றைய தினம் இந்த நாட்டு ஆட்சிக்கு “வெள்ளைக்காரனுடைய ஆதிக்கம்கூடாது’’ என்னும் அரசியல் கிளர்ச்சி என்பதும் தேசியக் கிளர்ச்சி என்பதும் மதத்தை – ஜாதியை அடிப்படையாகக் கொண்டதா? அல்லது மானத்தை, சுதந்திரத்தை விடுதலையை அடிப்படையாகக் கொண்டதா? என்பதை யோசித்தால் மதவெறியின் தன்மை தானாக விளங்கும்.
சாதாரணமாக வெள்ளைக்கார அரசாட்சியின் ஆதிக்கத்தை இன்றைய தினம் இந்துக்கள் ஒழிக்க வேண்டும் என்பதின் கருத்தெல்லாம் அவன் வேறுமதக்காரனாய் இருக்கிறான் என்பதல்லாமல் வேறு என்ன தத்துவத்தில் இன்று அந்நிய ஆட்சி என்பதற்கு காரணம் சொல்லப்படுகின்றது? என்பதைக் கவனித்துப் பாருங்கள். வேண்டுமானால், இன்னும் ஒரு காரணம் அதிகமாய்ச் சொல்லலாம், என்னவென்றால், பொருளாதார சம்பந்தமான காரணம் அதாவது ‘இந்தியர்கள் செல்வம் அந்நிய நாட்டிற்குப் போகின்றது’ என்பதுமாகும். என்றாலும், இது பாமர மக்களை ஏமாற்றுவதற்குச் சொல்லிக்கொள்ளப்படும் காரணமேயாகும்.
ஏனெனில், இந்துமதத்தால் இந்தியநாட்டுச் செல்வம் நாசமாவதைவிட – ஏழைத் தொழிலாளிகள் கொள்ளை அடிக்கப்படுவதைவிட அந்நிய ஆட்சியால் அதிகக்கஷ்டம் இல்லையென்றாலும், இதை ஆட்சேபணை சொல்லாமல் ஒரு காரணம் என்றே ஒப்புக்கொண்டு பார்த்தாலும் கூட ஒருமனிதனுக்கு அவனுடைய சுதந்திரமும் சுயமரியாதையும் முக்கியமானதா? அல்லது பொருளாதாரத் தத்துவமே முக்கியமானதா? என்று யோசித்தோமேயானால் பொருளின் முக்கியாம்சம் எவ்வளவோ கீழான படிக்குப் போய்விடும். ஆனால் சுதந்திரமும், சுயமரியாதையும் மேலானது என்பதை எப்படிப்பட்ட மோசக்காரனும் ஒப்புக்கொண்டுதான் தீருவான்.
ஆகவே, இந்த நிலைமையில் இந்திய மக்களுடைய சுதந்திரமும், சுயமரியாதையும் பாதிக்கப்படுவது வெள்ளைக்கார ஆட் சியாலா? இந்துமதத்தாலா? என்பதை இப்போது நடுநிலைமையில் இருந்து யோசித்து பார்த்தால் தானாகவே உண்மை விளங்கும். மேலும் இந்து மதத்தினால்தான் இந்தியாவில் “கீழ்ஜாதி மனிதனும், ஈனஜாதி மனிதனும் எந்த நிலைமையிலும் சுதந்திரம் பாராட்டக்கூடாதசூத்திரனும், சண்டாளனும் தெருவில் நடக்கவும் குளத்தில் தண்ணீர் மொள்ளவும், கோயிலுக்குள் புகவும், அருகில் வரவும் யோக்கியதையற்ற மக்களும்” இருந்து வருகின்றார்களா? அல்லது வெள்ளைக்கார ஆட்சியின் பயனாய் இருந்து வருகின்றார்களா? என்று கேட்கின்றோம்.
ஆகவே, மனிதத் தன்மையும், சகோதரத் தன்மையும் ஏற்படவேண்டுமானால் மதங்கள் ஒழிய வேண்டும் என்பதாக விருதுநகர் மகாநாடு தீர்மானம் செய்திருப்பதில் அறிஞர்கள் உண்மைச்சுதந்திரவாதிகள் – சுயமரியாதை உள்ளவர்கள் – சமதர்மத்தை விரும்புகின்றவர்கள் என்னகுற்றம் சொல்ல முடியும்? என்று கேட்கின்றோம்.
அன்றியும் இந்நாட்டின் இன்றைய சுதந்திர ஆட்சிக்கு, சகோதரத்துவத்திற்கு, சினேக தத்துவத்திற்கு மதங்களே அதாவது இந்து, முஸ்ஸீம், கிறிஸ்து முதலிய மதங்களே இடையூறாய் இருந்துகொண்டு உட்பகையையும் , சாந்தியற்ற தன்மையையும் உண்டாக்கி வருவதை நாம் நேரிலேயே தினமும் பார்த்தும், கேட்டும் வருகின்றோமாதலால் விருதுநகர் மகாநாட்டில் மக்களுக்குள் எவ்விதமத உணர்ச்சியும் இருக்கக்கூடாது’’ என தீர்மானிக்க வேண்டியதாயிருந்தது.
ஆகவே, மதமானது ஒருமனிதனுக்குப் புறத் தன்மையிலும், அகத்தன்மையிலும் கேடுசூழ்வதாகவே இருக்கின்றபடியால், உலகத்திற்குப் பொதுநலசேவை என்பது முதலாவதாக மதங்களை அழிப்பதே, மத உணர்ச்சிகளை ஒழிப்பதே என்பதாகத்தான் முடிவுகொள்ள வேண்டியிருக்கின்றது.
மக்கள் காட்டுமிராண்டிகளாய் இருந்த காலத்தில் – கல்வி – அறிவு உலக அனுபவம் ஞானம் இல்லாதிருந்த காலத்தில் – மக்களை நல்வழிப்படுத்துவதற்கு என்று ஒரு சமயம், மதம் என்பதாக கற்பனை செய்து மக்களுக்கு ஒரு பயத்தை உண்டாக்கி அவர்களது ஞானமற்ற சுதந்திரத்தை அடக்க ஏற்பாடு செய்ததாக இருக்கலாம். ஆனாலும் இன்று உலகம் பொருள் தத்துவஞானமும் விஞ்ஞானஞானமும் ஏற்பட வசதி ஏற்பட்டு பெருகிவரும் நாளில் காட்டுமிராண்டித்தன காலத்திலேற்படுத்தப்பட்ட மதமும், மத உணர்ச்சியும் எதற்கு என்றுதான் கேட்கின்றோம்.
இந்தப்படி நாம் சொல்லும் போது இதற்கு வேறுவழியில் சமாதானம் சொல்ல முடியாத மக்கள் சிலரால் இரண்டுவிதமான கேள்விகள் கேட்கப்படுகின்றன.
அவையாவன,
ஒன்று “மதத்தை ஒழிக்கவேண்டும் என்று சொல்லுகின்ற நீங்கள், அந்த இடத்தில் (அதாவது மதநம்பிக்கையுள்ள இடத்தில்) வேறு எதை ஏற்படுத்தப்போகின்றீர்கள்?’’
இரண்டு “நீங்கள் ஏன் வெறும் அழிவு வேலைகளையே செய்து வருகின்றீர்கள்? என்பவைகளேயாகும்.
இந்தக் கேள்விகள் மதவெறியால் மயக்கமெய்திய அடிமைத் தன்மையின் பிரதிபிம்பமே யொழிய மற்றபடி இக்கேள்விகளில் எவ்வித ஜீவிதத்தன்மையும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும், ஏனெனில் மதமோ அல்லது வேறு எதுவோ ஒன்று அதாவது மனிதனை அடிமை கொண்டு, அவனது சுய அறிவைக் கெடுக்கக்கூடியதான சாதனம் மனிதவாழ்க்கைக்கு அவசியமானது என்று கருதுவதினாலேயே இம்மாதிரி கேட்கச் செய்கிறது. ஆனால் அப்படிப்பட்ட எதுவும் மனிதத் தன்மைக்கும், வாழ்க்கை முற்போக்குக்கும் தடையானது, கேடானது என்று முடிவு செய்யப்பட்ட பிறகு அந்த இடத்தில் வேறு எதை நம்மால் வைக்க முடியும் என்பது நமக்கு விளங்கவில்லை. இன்னமும் விளக்கமாகச் சொல்லவேண்டுமானால் ஒரு உதாரணத்தைச் சொல்லிக் காட்டுகின்றோம்.
அதாவது, ஒரு மனிதனின் சரீர சுகத்திற்கு விரோதமான ஒரு நோயை ஒழிக்க வேண்டுமானால், ‘அந்த மனிதனுக்கு இந்த வியாதி ஒழிந்து போனால் அந்த இடத்தில் வேறு எதைவைக்கின்றது’ என்று யாராவது கேட்டால் அவரை அறிவுள்ள மனிதன் என்று யாராவது சொல்லக்கூடுமா? ஒரு சிலந்தி கட்டியை அறுக்கும் வைத்தியனிடம் போய் இந்தச் சிலந்திக்குப் பதில் வேறு என்ன கட்டியை உண்டாக்கப் போகிறாய்? என்று கேட்டால் வைத்தியன் என்ன சொல்லுவான்?
மதத்தின் பயனாய் மனித சமுகத்தின் அறிவு தடைப்படுகின்றது, மானம் தடைப்படுகின்றது, ஒற்றுமை தடைப்படுகின்றது. மனிதனுக்குள் தோன்றும் சுதந்திரவுணர்ச்சி தடைப்படுகின்றது, செல்வம் பாழாகின்றது, அடிமைத்தனமும் வளர்கின்றது. சாந்தி என்பதே இல்லாமல் பகையும் குரோதமும், போரும் வளர்ந்து வருகின்றது, என்றால் “அதற்குப்பதில் என்ன செய்யப் போகின் றாய்? ” என்று எதற்காகக் கேட்பது என்பதை யோசித்தால் அந்தக் கேள்வி ஒரு முட்டாள்தனமான கேள்வி என்பதை விட அதற்கு வேறு பதில் சொல்லவேண்டிய அவசியமில்லையென்றே கருது கின்றோம்.
நோய் ஒழிந்தால் எப்படித் திரேக சௌக்கியம் தானாகவே ஏற்பட்டு விடுமோ அது போல் மதம் ஒழிந்தால் மனித சமுகம் தானாகவே சுதந்திரத்தையும், அறிவையும், ஒற்றுமையையும் பெற்று மேன்மையடையும் என்கின்றோம்.
ஆகவே, இந்த வேலை ஆக்கவேலையா? அழிவுவேலையா? என்பதை யோசித்தால் இதனுள் பொதிந்து கிடக்கும் ஆக்கத் தன்மையும் தானாகவே விளங்கும்.
தீமையை அகற்றுவது அழிவுவேலையானால் மதத்தை ஒழிப்பது என்பதும் அழிவுவேலையாய் இருந்து போகட்டும். அதைப்பற்றி யாரும் கவலைப் பட வேண்டியதில்லை மற்ற தீர்மானங்களைப் பற்றி பின்னால் விளக்கலாம்.
– குடிஅரசு, தலையங்கம் – 23.08.1931