புதுடில்லி, ஜூன் 29- தமிழ் நாட்டில் கூட்டணி ஆட்சி குறித்த தனது கருத்தை மீண்டும் தெளிவு படக் கூறியுள்ள ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதலமைச்சர் வேட்பாளர் பற்றி குறிப்பிட்டது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.
அதிமுகவைச் சேர்ந்தவர் தான் முதலமைச்சராக இருப்பார் என்று கூறிய அமித்ஷா, எடப்பாடி பழனி சாமியின் பெயரை குறிப்பிடாமல் தவிர்த்ததே அந்த சர்ச்சைக்கு காரணம். அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் உருவானதில் இருந்தே பாஜகவின் இரும்புப் பிடியில் அதிமுக சிக்கிவிட்டதோ என்ற விமர்சனங்கள் எழுந்த நிலையில், அமித் ஷாவின் கருத்து பல்வேறு ஊகங்களுக்கு வித்திட்டது.
அதேநேரத்தில், அதிமுகவுடன் மோதல் போக்கை கடைப்பிடித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணா மலை மாற்றப்பட்டது கூட்டணியில் அதிமுகவுக்கு இருக்கும் செல்வாக்கிற்கு எடுத்துக்காட்டு என்று ஒரு சாரார் கூறுகின்றனர். அதிமுக – பாஜக கூட்டணியில் என்ன நடக்கிறது? என்பதை அறிய ஆவலோடு மக்கள் உள்ளனர்.
அதிமுக – பாஜக கூட்டணி
2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே கூட்டணியை முறித்துக் கொண்ட அதிமுகவும் பாஜகவும் நாடாளுமன்ற தேர்தலை தனித் தனியாக எதிர்கொண்டன. கூட் டணி முறிந்துபோன அறிவிப்பை கொண்டாடும் குரல்கள் இரு தரப்பிலுமே எழுந்தன. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டு கால பிரிவுக்குப் பிறகு கடந்த ஏப்ரல் மாதம் அதிமுக -– பாஜக கூட்டணி உயிர்ப்பிக்கப் பட்டது.