டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமணம் திட்டத்தில் ரூ.50 ஆயிரம் + ஒரு பவுன் தங்கம்! விண்ணப்பிப்பது எப்படி?

Viduthalai
2 Min Read

சென்னை, ஜூன் 29- டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவி திட்டத்தின் மூலம் கணவனை இழந்த பெண்ணிற்கு மறுமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தால், அவர்களுக்கு ரூ 50 ஆயிரம் ரொக்கமும் தாலிக்கு 8 கிராம் தங்கமும் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தை பயன்படுத்துவது எப்படி என்பதை பார்க்கலாம்.

கணவனை இழக்கும் பெண்கள் தங்கள் வாழ்க்கையை எண்ணி முடங்கிக் கிடக்கக் கூடாது என்பதற்காக கைம்பெண் மறுமணத்தை ஊக்குவிக்கும் விதமாக மேனாள் முதலமைச்சர் கலைஞர், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவி திட்டம் என்ற திட்டத்தை 1975 ஆம் ஆண்டு தொடங்கினார்.

கணவனை இழந்த பெண்ணிற்கு மறுமணத்திற்கு ஏற்பாடு செய்தால் இந்த திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்படும். இந்த திட்டத்தில் பயன்பெற வேண்டு மானால் கணவனை இழந்த பெண்ணிற்கு 20 வயதிற்கு அதிகமாகவும், மணமகனுக்கு முதல் திருமணமாகவும் அவருக்கு 40 வயதுக்குட்பட்டும் இருத்தல் வேண்டும்.

பட்டதாரி அல்லாதவர்களுக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்படும். மின்னணு பரிமாற்ற சேவை மூலம் ரூ 15 ஆயிரமும், ரூ 10 ஆயிரம் தேசிய சேமிப்பு பத்திரமாகவும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் 8 கிராம் தங்க நாணயமும் வழங்கப்படும்.

ஒரு வேளை பட்டதாரிகள் என்றால் கல்லூரியிலோ அல்லது தொலைதூரக் கல்வி மூலமாகவோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளி பல்கலைக்கழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

டிப்ளமோ படித்தவர்கள் எனில் தமிழ்நாடு அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். இவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்.

இந்த பணமும் மின்னணு பரிமாற்ற சேவை மூலம் ரூ 30 ஆயிரமும், மீதமுள்ள ரூ.20 ஆயிரம் தேசிய சேமிப்புப் பத்திரமாகவும் வழங்கப்படும். 8 கிராம் தங்க நாணயமும் வழங்கப்படும். உதவித் தொகைக்கான விண்ணப்பத்துடன் கைம்பெண் சான்று, மறுமணம் செய்ததற்கான திருமண அழைப்பிதழ், மணமகன், மணமகள் ஆகிய இருவரின் வயதுச் சான்றுகள், பள்ளி அல்லது கல்லூரி அல்லது பாலிடெக்னிக் மாற்றுச் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியல் நகல் ஆகியவற்றை இணைந்து திருமணம் முடிந்த நாளில் இருந்து 6 மாதங்களுக்குள் திருமண உதவித் தொகைக்கான விண்ணப்பத்தை மாவட்ட சமூகநல அலுவலரின் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *