பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கை பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 14ஆம் தேதி தொடங்குகிறது தரவரிசைப் பட்டியலில் 144 மாணவர்கள் சாதனை

Viduthalai

சென்னை, ஜூன் 29- பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. அதில், அரசுப் பள்ளி மாணவர்கள் 4 பேர் உட்பட மொத்தம் 144 பேர் 200-க்கு 200 கட்ஆப் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 14ஆம் தேதி தொடங்குகிறது.

தரவரிசைப் பட்டியல்

சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் நேற்று முன்தினம் (27.6.2025) நடந்த நிகழ்வில், பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றுள்ள மாணவர்களின் தர வரிசை பட்டியலை உயர்கல்விதுறை அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்டார்.

அதில், அரசுப் பள்ளி மாண வர்கள் 4 பேர் உட்பட மொத்தம் 144 பேர் 200-க்கு 200 கட்ஆப் மதிப்பெண் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டில் 65 பேர் முழு கட்ஆஃப் பெற்றிருந்தனர்.

பொதுப்பிரிவில் சகஸ்ரா (காஞ்சிபுரம்), கார்த்திகா (நாமக்கல்), அமலன் ஆன்டோ (அரியலூர்), கிருஷ்ணபிரியன் (தருமபுரி), தீபா (கடலூர்) ஆகியோர் முதல் 5 இடங்கள் பிடித்துள்ளனர்.

அதேபோல, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீடு பிரிவில் தாரணி (கடலூர்), மைதிலி (சென்னை அனகாபுத்தூர்), முரளிதரன் (பண்ருட்டி), வெற்றி வேல் (திருவண்ணாமலை) முழு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். தரவரிசை விவரங்களை  www.tneaonline.org  என்ற இணையதளத்தில் அறியலாம்.

பட்டியலை வெளியிட்ட பிறகு, அமைச்சர் கோவி.செழியன் கூறிய தாவது:

பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க கடந்த ஆண்டைவிட இந்த முறை 41,773 பேர் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர்.

தரவரிசை பட்டியலில் குறை இருந்தால், நிவர்த்தி செய்து கொள்ள ஜூலை 2 வரை அவகாசம் தரப்பட்டுள்ளது. கல்வி கட்டணத்தில் மாற்றம் இல்லை. கடந்த ஆண்டு வசூலித்த கட்டணமே தொடரும்.

பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு

மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஜூலை 7இல் தொடங்கி ஆகஸ்ட் 26ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. அதன்படி, சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை ஜூலை 7 முதல் 11ஆம் தேதி வரை நடை பெறும். இதில், அரசுப் பள்ளிமாணவர்கள் (7.5% ஒதுக்கீடு), விளையாட்டு பிரிவினர், முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகள், மாற்றுத் திறனாளிகள் பங்கேற்க உள்ளனர். பொதுப் பிரிவினருக்கான கலந் தாய்வு ஜூலை 14இல் தொடங்கி ஆகஸ்ட் 19 வரை 3 சுற்றுகளாக நடைபெறும். துணை கலந்தாய்வுஆகஸ்ட் 21 முதல் 23 வரையும், எஸ்.சி.பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 25, 26ஆம் தேதிகளிலும் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *