சென்னை, ஜூன் 29- சட்டப் பேரவை தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியும் உறுதியாகிவிட்டது. இதற்கிடையில் அதிமுக தலைமையின் கீழ் கூட்டணி ஆட்சி என பாஜகவினர் கூறி வருகிறார்கள். ஆனால், அதிமுகவினரோ தேர்தல் கூட்டணி மட்டும் தான். கூட்டணி ஆட்சியெல்லாம் கிடையாது என கூறுகின்றனர்
அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி
இந்நிலையில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அளித்த ஒரு நேர்காண லில், ‘2026 சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். அதில் பாஜகவின் பங்கு நிச்சயம் இருக்கும்’ என கூறியிருந்தார். மேலும், கூட்டணியின் முதலமைச்சர் குறித்த கேள்விக்கு, அதிமுகவில் இருந்தே ஒருவர் முதலமைச்சர் என குறிப்பிட்டிருந்தார். பழனி சாமி பெயரை அமித் ஷா தவிர்த்து விட்டார்.
அமித்ஷாவின் இந்த கருத்துகள் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த வகையில், அதிமுக- பாஜகவை சேர்ந்த தலைவர்கள், கூட்டணி குறித்து முரண்பட்ட கருத்துகளை தெரிவித்து வருவது, தொண்டர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை வெற்றி பெற வைப்பதிலும், தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிப்பதிலும் பாஜகவின் பங்கு இருக்கபோகிறதா அல்லது தேர்தலில் வெற்றி பெற்று, தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் அமைக்கப்படும் ஆட்சியில் பங்கு இருக்க போகிறதா என்பதே அந்த குழப்பம்.
இந்நிலையில், அமித்ஷா தெரிவித்த கருத்து தொடர்பாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறும் போது, ‘இதுகுறித்து அமித்ஷாவும், பழனிசாமியும் பேசிக்கொள்வார்கள். அமித்ஷா கூட்டணி அறிவித்த போதே, பழனிசாமி தலைமையில் தான் ஆட்சி அமையும் என தெளிவாக கூறிவிட்டார்’ என்றார்.
குழப்பம் நீடிக்கிறது
மேனாள் மாநில தலைவர் தமிழிசை கூறும்போது, ‘தேசிய ஜனநாயகக் கூட்டணியில், ஆட்சி அமைப்பது யார், முதலமைச்சராக வேட்பாளர் யார் என்பதை ஏற்கெனவே பழனிசாமியை அருகில் வைத்தே அமித்ஷா தெளிவுப்படுத்தியிருக்கிறார்.
எனவே, பழனிசாமி தான் முதலமைச்சர் வேட்பாளர். தற்போது அமித்ஷா கூறிய வார்த்தைகளை வைத்து கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்த நினைக்கிறார்கள். சட்டப்பேரவை தேர்தலுக்கு பின், தமிழ்நாட்டில் நிச்சயமாக தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமையும். அதில் பாஜகவும் அங்கமாக இருக்கும் என்பதை மிகத் தெளிவாக அமித்ஷா கூறியுள்ளார்’ என்றார்.
இந்நிலையில், அதிமுக மேனாள் அமைச்சர் வைகைச்செல்வன் கூறுகையில், ‘இதற்கான விளக்கத்தை பொதுச்செயலாளர் தான் சொல்ல வேண்டும்.
பொது எதிரியான திமுகவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து இறக்க வேண்டும். இந்த கருத்தை ஒருமித்த கருத்தாக ஏற்படுத்தி, இந்த கருத்துக்கு யாரெல்லாம் இசைவு தெரிவிக்கிறார்களோ, அவர்களை அழைத்து கூட்டணி அமைக்கப்படும்.
அவர்களோடு கூட்டணி அமைப்பதோடு சரி. கூட்டணி அரசு என்பது இதுவரை தமிழ்நாட்டில் அமைந்ததாக சரித்திரம் இல்லை. பழனிசாமி தலைமையில் இந்த கூட்டணி அமைகிறது என அமித்ஷா தெரிவித்துள்ளார். அப்படியெனில் முதலமைச்சர் வேட்பாளர் பழனிசாமிதானே’ என்றார்.
இவ்வாறு, அடுத்தகட்ட நிர்வாகிகள் பல்வேறு வகையான விளக்கங்களை அளித்தாலும், அதிமுக, பாஜகவின் கீழ் நிலை நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் இந்த விளக்கங்கள் சார்ந்த குழப்ப நிலை நீடிக்கிறது.