மோடி அரசு அடுத்த தாக்குதல்
புதுடில்லி, ஜூன் 28 – விவசாயிகள் பாசனத்திற்கு பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி விதிப்பதென ஒன்றிய பாஜக அரசு முடிவு செய்துள்ளது.
இந்தப் புதிய திட்டத்தின் கீழ் விவசாயிகள், எந்த அளவுக்கு நீரைப் பயன்படுத்துகிறார்களோ அதற்கேற்ப வரி விதிப்பது என்று திட்டமிட்டுள்ள ஒன்றிய பாஜக அரசு, இந்த வரிகளை வசூலித்து தரும் வேலையை மாநில அரசுகளின் தலையில் சுமத்தியுள்ளது.
விவசாயிகளை மாநில அரசுகளோடு மோதவிடும் தந்திரம்
அதாவது, பாசன நீருக்கு எவ்வளவு வரி விதிக்க வேண்டும் என்பதை மாநில அரசுகள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறி, விவசாயிகளை மாநில அரசுகளோடு மோதவிடும் ஏற்பாட்டையும் செய்துள்ளது.
நீரை வீணடிப்பதையும், நீலத்தடி நீரை தவறாக பயன்படுத்துவதையும் தடுக்கும் வகையிலேயே இந்தத் திட்டத்தைக் கொண்டுவர முடிவு செய்திருப்பதாகக் கூறியிருக்கும் மோடி அரசு, பாசன நீருக்கு வரிவிதிக்கும் திட்டத்திற்கான தொழில்நுட்ப கட்டமைப்புக்களை நிறுவுவதற்காக ரூ. 1,600 கோடி ஒதுக்கீடும் செய்துள்ளது.
“இந்த முயற்சியின் கீழ் விவசாயி கள் போதுமான தண்ணீரைப் பெறு வார்கள், மேலும் அவர்கள் எவ்வ ளவு பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்து வரி விதிக்கப் படும். முன்மொழியப்பட்ட வரி இந்திய விவசாயிகளிடையே நீர் பாது காப்பை ஊக்குவிப்பதையும், நீர்ப்பாசன நடைமுறைகளை ஒழுங்குபடுத்து வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது” என்று வார்த்தை ஜாலங்களை பயன் படுத்தியுள்ளது.
“நாங்கள் முன்னோடித் திட்டங் களை இறுதி செய்யும் பணியில் ஈடு பட்டுள்ளோம்; இவை, தண்ணீரை மய்யப்படுத்தி, போதுமான அளவிற்கு வழங்கும், இதனால் வெவ்வேறு விவசாயிகள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப அதைப் பயன்படுத்த முடியும். பயனர்கள் பயன்படுத்தும் நீரின் அளவைப் பொறுத்து வரி விதிக்கப்படும்” என்று ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீல் கூறியுள்ளார்.
ஓராண்டில், 239.16 பில்லியன் கன மீட்டர் (BCM) அளவிற்கு நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதாக ஆண்டு வாரியான நிலத்தடி நீர் பிரித்தெடுத் தல் அறிக்கை கூறும் நிலையில், இதில் 87 சதவிகித நிலத்தடி நீர் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் நிலையில், கண்மூடித்தனமான பிரித்தெடுத்தல் கடுமையான நிலத்தடி நீர் குறைபாட்டிற்கு வழிவகுத்துள்ளது என்றும் மோடி அரசு தெரிவித்துள்ளது.
“நிலத்தடி நீர் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பது மிகவும் முக்கியம். நீர் வீணாவதைக் குறைக்க, மாநில அரசுகளை விடவும், உள்ளூர் நீர் பயன்பாட்டாளர் சங்கங்கள் வரி விதிக்க வேண்டும்” என்று குடிநீர் மற்றும் சுகாதாரத் துறையின் கூடுதல் செயலாளர் அசோக் கே.மீனா கூறினார்.