புதுடில்லி, நவ 12- மத்திய பான் எண்கள், கடந்த 2017 ஜூலை 1-ஆம் தேதிக்கு பிறகு ஆதார் எண்ணுடன் இணைத்தே வழங்கப்படுகிறது. அதற்கு முன்பு பான்கார்டுகள் பெற்றவர்கள் அதனை தங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும்.
வருமான வரிச் சட்டத்தின் படி இது கட்டாயம் ஆகும் என ஒன்றிய அரசு அறிவித்தது. அவ்வாறு இணைக்காவிட்டால் அந்த பான் கார்டுகள் செயலிழந்துவிடும் எனவும் ஒன்றிய அரசு எச்சரித்தது.
ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைக்க காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது. இந்த காலக்கெடு தொடர்ந்து நீட்டிக் கப்பட்டது. கடைசியாக கடந்த ஜூன் 30-ஆம் தேதி இந்த காலக் கெடு முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் மத்திய பிர தேசத்தை சேர்ந்த சந்திரசேகர் என்ற செயற்பாட்டாளர், தகவல் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பிய ஒரு கேள்விக்கு மத்திய நேரடி வரிகள் வாரியம் பதில் அளித்துள் ளது. அந்த பதிலில், “இந்தியாவில் 70.24 கோடி பான் கார்டுதாரர்கள் உள்ளனர். இதில் 57.25 கோடி பேர் தங்கள் ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைத்துள்ளனர்.
ஆதார் எண்ணுடன் இணைக் கப்படாத 12 கோடிக்கும் மேற் பட்ட பான் கார்டுகளில் 11.5 கோடிக் கும் மேற்பட்ட பான் கார்டுகள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன” என்று குறிப்பிட்டுள்ளது. காலக் கெடு முடிந்துவிட்டதால் செயலி ழந்த பான் கார்டுகளை ரூ.1,000 அபராதம் செலுத்தி மீண்டும் செயல் பாட்டுக்கு கொண்டுவரலாம்.
இதுகுறித்து செயற்பட்டாளர் சந்திரசேகர் கூறும்போது, “புதிய பான் கார்டு வாங்க ஜிஎஸ்டி தவிர்த்து ரூ.91 செலவாகிறது. இந்நிலையில் செயலிழந்த பான் கார்டுகளை புதுப்பிக்க அரசு எப்படி 10 மடங்கு வசூலிக்கலாம்? பான் கார்டு செயலிழந்தவர்கள் எவ்வாறு வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடியும்? எனவே காலக்கெடுவை மேலும் ஓராண்டு நீட்டிப்பது குறித்து ஒன்றிய அரசு பரிசீலிக்க வேண்டும்” என்றார்.