சென்னை, ஜூன் 27 புதிதாக வெளியாகும் திரைப்படங்களை முதல் மூன்று நாட்களுக்கு விமர்சனம் செய்ய தடை கோருவது பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம், இதுதொடர்பான மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவில், ‘கோடிக்கணக்கில் செலவு செய்து, பலரது உழைப்பில் உருவாகும் திரைப்படங்களுக்கு எழும் நேரடி மற்றும் மறைமுக விமர்சனங்களால் அந்தப் படம் தோல்வியடைந்து இழப்பை சந்தித்து வருகிறது.
விமர்சனம் செய்யக் கூடாது
இதனால் திரைத்துறையை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, திரையரங்குகளில் புதிதாக வெளியிடப்படும் திரைப்படங்களை முதல் மூன்று நாட்களுக்கு யாரும் விமர்சனம் செய்யக்கூடாது என தடை விதிக்க வேண்டும்’ என கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்துள்ள உத்தரவு: பொதுவாக நீதித்துறையை பற்றியும், சில நேரங்களில் நீதிபதிகளை பற்றியும்கூட பொதுமக்கள் எதிர்மறையான விமர்சனங்களை செய்கின்றனர். சமூக ஊடங்களின் தாக்கம் பட்டி, தொட்டியெங்கும் வியாபித்திருக்கும் இக்காலகட்டத்தில் மக்கள் யாரையும் விட்டு வைப்பது இல்லை. என்னைப் பற்றியும் விமர்சிக்கிறார்கள். இந்த விமர்சனங்களை எல்லாம் தடுக்க முடியாது. இவை கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்டவை.
யதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும்
யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் வலைதளங்களில் புதிய திரைப்படங்களின் தரத்தை மதிப்பாய்வு செய்து காட்சிப் பதிவு வெளியிடுவது என்பது பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் தந்துள்ள அடிப்படை உரிமை. அதை யாரும் மறுக்க முடியாது. எப்போதுமே நேர்மறையான விமர்சனங்கள் மட்டுமே வரவேண்டும் என எதிர்பார்க்க முடியாது. சிலநேரங்களில் எதிர்மறையான விமர்சனங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
இந்த யதார்த்த நிலையை மனுதாரர்கள் சங்கம் உணர்ந்து ஏற்றுக்கொள்ள வேண்டும். நீதிமன்ற உத்தரவு மூலமாக இதுபோன்ற விமர்சனங்களை முன்கூட்டியே முடக்கிவிடலாம் என கருதுவது பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.