பெரியாரியல் பயிற்சிகளில் அதிகளவில் தோழர்கள் பங்கேற்க முடிவு
புதுக்கோட்டை ஜூன்20- திராவிடர் கழகப் பணிகளில் ஒன்றாக தற்போது ஒன்றிய வாரியாக அந்தந்த ஒன்றியத்திற்கு கழகப் பொறுப்பாளர்கள் சென்று ஒன்றிய கழகக் கலந்துரையாடல் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங் களிலும் இக்கூட்டங்கள் நடத்தப்பட்டன.
இதில் புதுக்கோட்டை கழக மாவட்டத்திற்கு உள்பட்ட விராலிமலை, பொன்னமராவதி, திருமயம், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை ஆகிய ஒன்றியங்களில் இந்த கலந் துரையாடல் கூட்டங்கள் நடைபெற்றன. இந்த நிகழ்வுகளில் திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் இரா.செந்தூர பாண்டியன் தலைமையில் புதுக்கோட்டை கழக மாவட்டத் தலைவர் மு.அறிவொளி, மாவட்டச் செயலாளர் ப.வீரப்பன், ம.மு.கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு கழகத்தின் வளர்ச்சிகள் பற்றியும் செயலாற்ற வேண்டிய பணிகள் பற்றி யும் விளக்கப்பட்டதுடன் அதற்கான தேவைகள், அவசியம் பற்றியும் கலந்தாலோசிக்கப்பட்டன.
விராலிமலை
விராலிமலை ஒன்றியத்தில் ஒன்றியத் தலைவர் ஓவியர் குழந்தை இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அந்தப் பகுதியில் மக்களுக்கு இருக்கும் அறியாமை, அதனால் மந்திர வாதிகளிடம் இப்போதும் சென்று மக்கள் ஏமாறுவதுடன், பேய் ஓட்டுதல் போன்றவற்றையும் செய்து கொண்டிருப்பதால் தொடர்ந்து விழிப்புணர்வுப் பரப்புரை மேற்கொள்வது எனவும், விரைவில் கழகப் பேச்சாளர் சே.மெ.மதிவதனி அவர்களை அழைத்து வந்து பொதுக்கூட்டம் நடத்தி பகுத்தறிவு பெறச் செய்வது என்றும் தீர்மானிக்கப் பட்டது. அதே போல் விராலிமலை பகுதியில் வாய்ப்பு உள்ள இடங்களில் கழகக் கொடிகளை ஏற்றுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் இயற்றப் பட்டன. விராலிமலை ஒன்றியத்தில் வைக்கம் நூற்றாண்டு விழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடுவது குறித்து ஆலோசிக்கப் பட்டன. ஓவியர் குழந்தை, முகிலன் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.
பொன்னமராவதி
பொன்னமராவதியில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் பொன்னமராவதி ஒன்றியத்தில் வாய்ப்புள்ள ஊர்களில் வைக்கம் நூற்றாண்டு விழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடுவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மேலும் பகுத்தறிவு விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்துவது விடுதலை சந்தாக்கள் அதிகரிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. ஜூலை ஒன்றாம் தேதி தோழர் வழக்கறிஞர் சே.மெ.மதிவதனி அவர்களை சிறப்பு பேச்சாளராக கொண்ட பொதுக்கூட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.
பெரியாரியல் பயிற்சி முகாமிற்கு…
பொன்னமராவதி ஒன்றியத்தில் அண்மையில் பல கிராமங்களில் திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள், மற்றும் மாற்றுக் கட்சிகளில் இருக்கும் பகுத்தறிவு ஆதர வாளர்கள், கடைத்தெரு வர்த்தகப் பெருமக்கள் என பலரின் ஒத்துழைப்போடும் அவர்களின் ஆதரவோடும் நடத்தப்பட்ட வைக்கம் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டங்கள், கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் என நடத்தப் பட்டதைப் போல மற்ற ஊர்களிலும் நடத்துவது என தீர்மானங்கள் இயற்றப் பட்டன. மேலும் விடுதலை நாளேட்டுக்கு புதிய சந்தாக்கள் சேகரிப்பது, நடப்பில் இருக்கும் சந்தாக்களைப் புதுப்பிப்பது என்றும் முடிவு செய்யப் பட்டன. ஜூலை 30ஆம் நாள் ஆதனக்கோட்டையில் நடைபெறும் பெரியாரியல் பயிற்சி முகாமில் பொன்னமராவதி பகுதியில் இருந்து நிறைய இளைஞர்கள், இளம்பெண்கள், புதியவர் களை அழைத்துச் சென்று கலந்து கொள்ளச் செய்வது என்றும் தீர்மானிக்கப் பட்டது. மேலும் குற்றாலத்தில் ஜூன் 28முதல் ஜூலை 1ஆம் நாள்வரை நடைபெற இருக்கும் பெரியாரியல் பயிற்சி முகாமில் தோழர்களைக் கலந்து கொள்ளச் செய்வது என்றும் உறுதியளிக்கப் பட்டது.
இந்நிகழ்வில் மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் அ.சரவணன், மாவட்ட துணைச் செயலாளர் வெ.ஆசைத்தம்பி, ஒன்றியத் தலைவர் சித.ஆறுமுகம், ஒன்றியச் செயலாளர் மாவலி, ஒன்றிய அமைப்பாளர் ஆறு முகம், ஒன்றியத் துணைத் தலைவர் மனோகரன், ஆறு.பாலச் சந்தர், அம்சத்கான் ஆகியோர் தங்களது கருத்துகளைப் பதிவு செய்தனர்.
திருமயம்
அதனைத் தொடர்ந்து திருமயம் ஆசிரியர் மன்ற அலு வலகத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது. அந்த நிகழ்வில் பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர் இரா.மலர்மன்னன், ஒன்றியத் தலைவர் மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். வைக்கம் நூற்றாண்டு விழா மற்றும் கலைஞர் நூறாவது பிறந்த நாள் கூட்டங்கள் லெனா விலக்கு, விராச் சிலை, திருமயம் ஆகிய இடங்களில் நடத்துவது என தீர் மானிக்கப்பட்டது. லெம்பலக்குடி, குழிபிறை, திருமயம் ஆகிய இடங்களில் புதிய கம்பங்கள் நட்டு திராவிடர் கழகக் கொடி ஏற்றுவது என்று தீர்மானிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் நகரத் தலைவர் சு.கண்ணன், நகர் செயலாளர் ரெ.மு.தருமராசு, மாவட்டத் துணைத் தலைவர் செ.இராசேந்திரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
கந்தர்வகோட்டை
இங்கு ஈரோடு பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்ட தீர் மானங்கள் அனைத்தையும் செயல்படுத்துவது, நகர் முழு வதும் தொகுதி வாரியாக கிளைகள் அமைத்தும் கொடிகள் ஏற்றியும் விடுதலை நாளேட்டுக்குச் சந்தாக்கள் சேகரிப்பது என்றும் வைக்கம் நூற்றாண்டு மற்றும் கலைஞர் நூற்றாண்டு விழாக்களை புதுக்கோட்டை நகர் முழுவதும் நடத்துவது, பெரியாரியல் பயிற்சிகளில் அதிகளவில் தோழர்களைக் கலந்து கொள்ளச் செய்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் இயற்றப் பட்டன.
அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை ஒன்றியத்துக்குட் பட்ட ஆதனக்கோட்டையில் தோழர் யோகராஜ் முன்னி லையிலும் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் கோமாபுரம் ஊராட்சியில் மாவட்ட இளைஞரணித் தலைவர் தோழர் காரல்மார்க்ஸ் முன்னிலையிலும் கலந்துரையாடல் கூட்டங் கள் நடத்தப்பட்டன.