புதுடில்லி, ஜூன் 26- உ.பி.யின் அவுரய்யா நகரில் வசிப் பவர் முகுந்த்மணி சிங் யாதவ். இவர் கடந்த 15 ஆண்டுகளாக உ.பி. முழுவதும் கதாகாலட்சேபம் செய்து வருகிறார்.
இச்சூழலில் அவர் மேற்கு பி.எட்டாவா மாவட்டம், தந்தர்பூர் கிராமத்தில் 2 வாரங்கள் கதாகாலட்சேபம் செய்ய அழைக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இரவு ஒரு கும்பல் இவரை தாக்கியதுடன் அவரது தலையை மொட்டை அடித்து விரட்டியது. இவரது உதவியாளர் சந்த்குமார் யாதவும் அப்போது தாக்கப்பட்டார். இது தொடர்பான காட்சிப் பதிவு சமூக வலை தளங்களில் பரவி உ.பி.யில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சம்பவம் குறித்து முகுந்த்மணி சிங் அளித்த புகாரில், “எனது சமூகம் என்னவென்று கேட்டு நான் பிராமணர் இல்லை என்று உறுதி செய்த பிறகு அக்கும்பல் என்னை தாக்கியது. என்னிடம் இருந்த ரூ.25,000 ரொக்கம் மற்றும் தங்க செயினை பறித்துக் கொண்டது” என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக எட்டாவா காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்துக்கு சமாஜ் வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார்
அகில இந்திய சாதுக்கள் சபை யின் தேசியப் பொதுச் செயலாளர் சுவாமி ஜிதேந்திரானந்த் சரஸ்வதி கூறும்போது, ‘வால்மீகி முதல் கபீர்தாஸர் வரை பிராமணர் அல்லாத பலரும் கதாகாலட்சேபம் செய்துள்ளனர். இதை காரண மாக வைத்து தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்றார்.
ஆனால், சங்கராச்சாரியார் அவீமுக்தேஷ்வரானந்த், “கதாகாலட்சேபம் செய்ய பிராமணர்களுக்கு மட்டுமே உரிமை உண்டு” எனக் குறிப்பிட்டுள்ளார்.